Sunday 3 April 2011

கவிதை என்றால் இப்படி இருக்கனும்-2- நன்றி ஆனந்த விகடன்


நதி
தொடரும் பயணங்களில்
நதிகளை
மீண்டும் மீண்டும்
சந்திக்க நேர்கிறது
சில அபூர்வ தருணங்களில்
நதிப் பாலங்களின் மீது
ரயில் நின்றுவிடுகிறது
தூரத்தில் கீழே தெரியும்
நதியின் ஆழத்தில்
மனம் அமிழும் வேளையில்

நதி
தன் ரகசியங்களை
மெள்ள
சொல்லத் தொடங்கும்
அநேகமாக
அதே வேளையில்
ரயிலும் மெள்ள
நகரத் தொடங்கும்!
- கோபால் மனோகர்
பட்டாம்பூச்சி
ட்டுப் பூச்சியைப்போல
பட்டுப் பாவாடையில்
பாதம்
பட்டும் படாமலும்
கீழே விழுந்து... எழுந்து
பின் தொடர்ந்து
ஓடி வருகிறது குழந்தை.
கீழே விழுந்து... எழுந்து
அங்கப்பிரதட்சணம் செய்தபடி
முன் தொடர்ந்து செல்கிறது 'பலூன்’!
- ச.புகழேந்தி
கதவடைத்த வீடு


வெகு கவனமாக
அமைக்கப்படுகிறது
வீட்டுக்குள்
மீன்களுக்கான தொட்டி.
வேறெதுவும் வழியின்றி
அமைந்துவிடுகிறது
தொட்டிக்குள்
மீன்களுக்கான
வீடு!
- ந.சிவநேசன்
சோதனை
டப்பதுபோல நடந்து
போவதுபோலப் போய்
'நல்லவங்களா இருக்காங்க
புது வீட்டுக்கு வந்தவங்க’
என்றிவள் வந்து சொன்னாள்.
வருவதுபோல வந்து
நிற்பதுபோல நின்றார்கள்
புது வீட்டிலிருந்தும்
'வாங்க வாங்க
அட, உள்ள வாங்க’ என்றோம்
நல்லவங்க போலான நாங்களும்!
- பா.ராஜாராம்
பிள்ளையார் எறும்புகள்
யானையின் நிறத்தில்
சுவரின் துதிக்கை பிடித்தேறி
ஒரே நேர்க்கோட்டில் ஊர்கின்றன
எங்கள் வீட்டு
பிள்ளையார் எறும்புகள்
எண்ணிக்கை குறிப்பெடுத்து வரும்
என் பிள்ளையின் முயற்சி
சுலபமாகக் காலேறிவிடும்
எறும்புகளால் தோற்கடிக்கப்படும்
கொலுசு மணிக்குள் புகுந்த
எறும்பொன்று
இனியும் முகம் காட்டவேயில்லை.
இருந்தாலும் அவை
யாரையும் இம்சிப்பதில்லை.
நானும் பிள்ளையும்
எதிரெதிரே ஊர்ந்தோம்
எறும்புகள் சொல்லித்தரும்
மூக்குரசும் பயிற்சி
இஷ்டமென்றாள் மகள்.
பூஜையறைக்குள் புகும்
பிள்ளையார் எறும்புகள்
மாடி வீட்டில் பதம் பார்த்த
லட்டுத் துகள்களை
விநாயகர் பொம்மையின்
துதிக்கை சேர்ப்பிக்கும்.
'விநாயகர் லட்டுப் பிரியரா?’ எனும்
என் மகளின் கேள்விக்கு
அர்த்தம் புரியாமல்
அங்கிருந்து நகர்கிறேன் நான்!
- கொ.மா.கோ.இளங்கோ

0 comments:

Post a Comment