Sunday 10 April 2011

பாரதிதாசனின் குசும்பு!!!

புதுவையில், கவிஞர் பாரதிதாசன் குடியிருந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டுக்காரர், கவிஞரிடம் பகை கொண்டிருந்தார். அவரால், கவிஞருக்குச் சில இடையூறுகள் நேர்ந்தன. பக்கத்து வீட்டுக்கு சில அடியாட்கள் அடிக்கடி வந்து போவர்.இவைகளுக்கெல்லாம் அஞ்சுபவரா கவிஞர்! அவர் குடியிருந்த வீட்டிற்கெதிரில் ஒரு காலி மனை இருந்தது. அதன் உரிமையாளரை அணுகி, அந்த இடத்திற்கு வாடகை பேசிக் கொண்டார். இடத்தை சுத்தப்படுத்தச் செய்தார். சிலம்பப் பயிற்சி செய்யும் திடலாக அதை மாற்றினார். இளைஞர் சிலரைக் கூட்டி வந்து, அங்கு காலையும், மாலையும் பயிற்சி செய்ய வைத்தார். கோல் சண்டை, குத்துச் சண்டை முதலிய விளையாட்டுக்கள் அங்கு நடைபெற்றன.இதைக் கண்டு அஞ்சிய கவிஞரின் பக்கத்து வீட்டுக்காரர், வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டாராம். முள்ளை முள்ளால் எடுத்தத் திறம் இதுவன்றோ?அக்காலத்தில் கவிஞர் அடிக்கடி தம் வீட்டை மாற்றுவார். கவிஞர் கூனிச்சம்பட்டியில் பணியில் இருந்த சமயம் அது.

அந்த வீட்டிற்கு அடுத்த வீட்டுக்காரரும் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தார்.ஒருநாள் விடியற்காலை, ஐந்து மணியளவில் அந்த வீட்டுத் தெருக்குறட்டில் தப்பு, சேமக்கலம் ஒலிக்கலாயிற்று; இவை இரண்டும், இறந்தவர் வீட்டில் பயன்படுத்தும் வாத்தியங்கள்.வீட்டுக்காரர் (கவிஞரின் பகைவர்) கதவைத் திறந்து பார்த்த போது ஒருவர் மேற்சொன்ன எறிமணியை (சேமக்கலம்) அடித்துக் கொண்டிருக்கக் கண்டார். அடிப்பதை நிறுத்தச் சொல்லி, "என்ன சேதி?' என்று கேட்டார். அதற்கு அவர், "இந்த வீட்டில் யாரோ இறந்து விட்டதாகச் சொல்லி, முன் பணம் கொடுத்து, காலை, ஐந்து மணிக்கு வந்து அடிக்கச் சொல்லி ஒருவர் சொன்னார்!' என்று பதிலளித்தார்."சொன்னவன் எவன்?'"யாரோ ஒருவர் வந்து சொன்னார்...'

"இந்த வீட்டில் இல்லை; போய் விடு!' என்று கூறி, விரட்டி விட்டார்.தப்பு - சேமக்கலம் அடிக்கக் கேட்டு, தெருவில் பலர் விழித்துக் கொண்டனர். அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் விசாரிக்க வந்து விட்டனர். அவர்களுக்கு பதில் சொல்வதே பக்கத்து வீட்டுக்காரருக்கு பெரிய வேலையாகி விட்டது.கவிஞர் இந்த ஏற்பாடுகளை செய்து விட்டு, விடியலிலேயே கிளம்பி விட்டார். பக்கத்து வீட்டுக்காரர், "கவிஞர் தாம் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும்...' என்று முடிவு செய்து கொண்டார்.இதனால், கவிஞரைப் பார்க்கும் போதெல்லாம் வசைபாடலானார். 10 நாட்களுக்குப் பிறகு, ஒருநாள், பகல், 12 மணி அளவில், அக்கா பரதேசி மடத்தைச் சேர்ந்த ஏழெட்டுப் பரதேசிகள் வந்து, பக்கத்து வீட்டில் நுழைந்தனர். அந்த வீட்டுக்காரர், "என்ன?' என்று கேட்க, "இன்று புண்யாவசனம் என்றும், ஏழைகளுக்கு உணவளிக்கப்படும் என்றும், சரியாக 12 மணிக்கு பகல் உணவிற்காக இந்த முகவரிக்கு வர வேண்டும் என்றும் யாரோ மடத்தில் வந்து சொன்னார்கள்...அதனால்,வந்தோம்!' என்றனர்."இங்கு புண்ணியாவசனமும் இல்லை; ஒரு மண்ணுமில்லை. போங்கடா வெளியே!' என்று அவர் பரதேசிகளைத் துரத்த, அவர்கள் தெருவில் நின்று வசை பொழிந்து சென்றனர்.

இந்த உத்திகளெல்லாம் பாவேந்தருக்கே உரியன. பகைவர்களை அடக்க அவர் செய்த தந்திரங்கள் என்று பாவலர் மணிசித்தன், "பாவேந்தருடன் பயின்ற நாட்கள்' என்ற நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

0 comments:

Post a Comment