Wednesday 27 April 2011

தலையங்கம்:" இதில்கூடவா முறைகேடு...?



First Published : 27 Apr 2011 01:58:00 AM IST


சென்ற மாதம் விமானத் துறையில் எல்லோராலும் பேசப்படும் பொருளாக இருந்தது போலிச் சான்றிதழ்கள் மூலம் உரிமம் பெற்ற விமானிகள் விவகாரம். ஸ்பைஸ்ஜெட் என்ற விமான நிறுவனத்தில் பணியாற்றிய அமித் முந்தரா, அஜய் சந்த்ராஜ் ஆகிய இரண்டு பேர், போலிச் சான்றிதழ்கள் கொடுத்து விமானி உரிமம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டனர்.  இதேபோன்று போலி சான்றுகள் கொடுத்து விமானி உரிமம் பெற்றவர்களாக இரண்டு பேரை ஏர்இந்தியா நிறுவனம் கண்டுபிடித்து அவர்களைப் பணியிடை நீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பயணிகள் விமான சேவை தலைமை இயக்ககத்தின் (டிஜிசிஏ) தீவிர விசாரணையில் மேலும் 14 பேருடைய உரிமங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே, யார் மீது சந்தேகம்கொண்டு பெயர் பட்டியலிடப்பட்டதோ அவர்கள் தொடர்பான கோப்புகள் காணாமல் போய்விட்டதாகச் செய்திகள் வெளியாகின.  பயணியர் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தனது மகளுக்காக, தகுதியில்லாத நிலையிலும்கூட விமானியாகப் பணிபுரிய வாய்ப்புப் பெற்றுத் தந்ததாகக்கூறி அந்த அதிகாரி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தக் கூத்துகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவி தன்னிச்சையாகக் களத்தில் இறங்கி, நாட்டில் உள்ள 40-க்கும் மேற்பட்ட விமானிகள் பயிற்சிப் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறார்.  இந்நிலையில் ஆங்கிலப் பத்திரிகைகளில் விமானங்களில் பயணம் செய்யும் மக்களின் உயிருக்கு உத்தரவாதமே இல்லை என்று செய்திகள் பரவலாக எல்லாப் பக்கங்களிலும் வெளியானபோது விமானத்தில் பயணம் செய்வோருக்கு கலக்கம் ஏற்பட்டது. இதைச் சற்று சமன்செய்வதுபோல, விமானத்தில் பயணம் செய்வோர், இருக்கையில் பெல்ட் கட்டியதும் கூடவே பிரார்த்தனையும் செய்வதாகக் கேலிக் கட்டுரைகளும்கூட வெளியாகின.  தற்போது இந்தியாவில் விமானிகளாக உரிமம் பெற்ற சுமார் 4,000 பேர்களது சான்றுகளையும் சரிபார்த்து, போலிகளைக் களைந்துவிடுவது மிகச் சுலபம் என்பதால் இதில் எந்தவித அச்சத்துக்கும் இடமில்லை என்றாலும் இவ்வளவு முறைகேடுகளுக்கும் முதல் குற்றவாளிகளாகக் கருதப்பட வேண்டியவர்கள் மத்திய அரசும் பயணியர் விமான ஆணையமும்தான்.  ஏனென்றால், விமானிக்கான உரிமம் பெறுவோருக்கான கல்வித் தகுதியை பிளஸ் 2 அளவிலேயே வைத்துக் கொண்டிருப்பதும், அரசுத் துறை மூலம் இத்தகைய உரிமங்களை வழங்காமல், ஃபிளையிங் கிளப் மூலமாகவே குறிப்பிட்ட மணி நேரம் வானில் விமானம் ஓட்டினார்கள் என்று உரிமங்கள் வழங்கப்படுவதை அனுமதித்து வந்ததும்தான் இந்த முறைகேடுகளுக்கு அடிப்படைக் காரணம்.  இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் தனியார் விமான நிறுவனங்கள் பல வந்துவிட்டன. விமானத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கையும் பல மடங்கு பெருகிவிட்டது. இந்திய விமானங்களில் விமானிகளாக இருப்போரில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்களாக இருப்பதையும், இந்திய விமானிகளுக்கு அதிகமான வேலைவாய்ப்பு இருப்பதையும் அறிந்த பின்னர் நிறைய விமானப் பயிற்சிப் பள்ளிகள் தோன்றின. இங்கேதான் ஊழல் தொடங்கியது. விமானிகளுக்கு அதிகச் சம்பளம் கிடைப்பதாலும், கல்வித் தகுதியும் மிகக் குறைவாக இருப்பதாலும் இதில் முறைகேடுகள் செய்தாகிலும் நுழைந்துவிட எத்தனிப்பது நடைபெறத் தொடங்கியது.  பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவருக்கு, கணிதம், இயற்பியலில் நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. இதில் வெற்றி பெற்றால் அவர்கள் விமான ஒட்டுநர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சுமார் 4 ஆண்டு காலகட்டத்தில் இவர்கள் செஸ்னா எனப்படும் சிறு விமானங்கள் முதலாக சிறு கனரக விமானங்கள் வரை குறைந்தது 250 மணி நேரம் ஓட்டிப் பழகிய பின்னர் இவர்களுக்கு சரக்கு விமானி உரிமம் வழங்கப்படுகிறது. சரக்கு விமானத்தில் குறிப்பிட்ட மணிநேரம் ஓட்டிய அனுபவம் உள்ளவர் பயணியர் விமானத்தில் துணை விமானியாகப் பணிபுரியத் தகுதி படைத்தவர் ஆகிறார். இந்த நடைமுறையில், ஃபிளையிங் கிளப் நடத்தும் நுழைவுத் தேர்வில் தொடங்கும் முறைகேடு, 250 மணி நேரம் விமானம் ஒட்டிய காலநேரத்தில் சமரசம் செய்துகொண்டு சான்றிதழ் கொடுக்கும் அளவுக்குச் செல்கிறது.  இளநிலை பட்டப்படிப்பில் கணிதம் அல்லது இயற்பியலை முக்கியப் பாடமாகப் படித்துத் தேறிய பட்டதாரிகள் மட்டுமே விமானிகள் உரிமம் பெறுவதற்கான பயிற்சியில் சேர முடியும் என்று கல்வித் தகுதியை உயர்த்தியிருக்க வேண்டிய விமானப் போக்குவரத்துத் துறை இதில் மெத்தனம் காட்டியதால்தான் இத்தகைய நிலைமை ஏற்பட்டது என்பதை உறுதியாகவே சொல்ல முடியும். விமானிகள் வானில் பறக்கும் நேரத்தைக் கூட, அந்தந்த ஃபிளையிங் கிளப்பில் பதிவுசெய்து சான்று வழங்குவதை வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், எந்தவொரு நாளிலும் இந்தியா முழுவதிலும் கணினியில் பதிவுசெய்து, விமானப் போக்குவரத்து ஆணையம் கண்காணிக்கவும் செய்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அதைச் செய்யவில்லை.  மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமத்தில் தொடங்கி, விமான ஓட்டுநர் உரிமம்வரை, முறையான பயிற்சியும், தேர்ச்சியும் உள்ளவர்கள் மட்டுமே அங்கீகாரம் பெறுவார்கள் என்பதைக்கூட நமது அரசால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றால், எதற்காக இவ்வளவு செலவில் இப்படி ஒரு நிர்வாக இயந்திரம்? தவறு செய்தவர்கள், தண்டிக்கப்படுவார்கள் என்கிற பயம்கூட இல்லாமல் போனதற்கு யார் காரணம்?  பொதுமக்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பும் உத்தரவாதமும் அளிப்பதுதான் ஒரு நல்லரசின் கடமை. ஓட்டுநர் உரிமம் வழங்குவதில்கூட முறையான விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றால், நாம் தவறானவர்களைத் தேர்ந்தெடுத்த குற்றமா, இல்லை நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடமை தவறிய குற்றமா என்பது தெரியவில்லை. முறையான பயிற்சியும் தேர்ச்சியுமில்லாதவர்கள் ஓட்டும் விமானத்தில் பயணிப்பதைப் போன்ற நிலையில்தான் இந்தியக் குடிமக்களாகிய நாமும் இருக்கிறோம் என்று தோன்றுகிறது!

0 comments:

Post a Comment