Sunday 24 April 2011

தலையங்கம்:திருப்புமுனைத் தீர்ப்பு

First Published : 23 Apr 2011 03:29:44 AM IST

Last Updated : 23 Apr 2011 06:24:49 AM IST

டாக்டர் விநாயக் சென்னின் மீது சுமத்தப்பட்டிருக்கும் தேசத்துரோகக் குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருப்பதும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதும் இந்தியா முழுவதும் இன்று அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநில விசாரணை நீதிமன்றத்தால் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்காக டாக்டர் விநாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதும், அந்தத் தீர்ப்பை பிலாஸ்பூர் நீதிமன்றம் உறுதி செய்ததும், உச்ச நீதிமன்றத்தின் பார்வையில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.  டாக்டர் விநாயக் சென் செய்த குற்றம் என்ன தெரியுமா? சத்தீஸ்கர் மாநிலத்தில் கனிமச் சுரங்கங்களை ஏற்படுத்த முனையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகத் தங்களது வாழ்வாதாரமான காடுகளை அழிக்கக்கூடாது என்று போராடும் ஆதிவாசிகளுக்குத் துணை நின்றது. ஆதிவாசிகளின் சார்பில், அவர்களைக் கூண்டோடு அழிக்கக் கிளம்பிய அரசாங்கத்தின் கூலிப்படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தும் மாவோயிஸ்ட் தலைவரான நாராயண் சன்யாலை சிறைச்சாலையில் சந்தித்தது.  டாக்டர் விநாயக் சென்னைப் பிணையில் விடுவிக்க வேண்டும் என்று ஒரே வரிக் கட்டளை பிறப்பித்திருக்கும் உச்ச நீதிமன்றம், விசாரணையின்போது எழுப்பி இருக்கும் கேள்விகள் ஒவ்வொன்றும், சத்தீஸ்கர் அரசும், கீழ்நிலை நீதித்துறையும் எந்த அளவுக்கு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமலும், பொறுப்பில்லாமலும் நடந்து கொள்கின்றன என்பதைப் பட்டவர்த்தனமாகப் பிட்டுப் பிட்டு வைக்கின்றன. நீதிபதிகள் எச்.எஸ். பேடியும், சி.கே. பிரசாத்தும் விசாரணையின்போது மனித உரிமை ஆர்வலரும், மருத்துவருமான விநாயக் சென் மீது வலுவில்லாத வழக்குத் தொடர்ந்து சத்தீஸ்கர் அரசு அவரை வஞ்சம் தீர்த்துக்கொள்ள முயன்றிருப்பதைத் தோலுரித்துக் காட்டி இருக்கிறார்கள்.  அரசுத் தரப்பின் இரண்டு முக்கியமான குற்றச்சாட்டுகளை நீதிபதிகள் உடைத்தெறிந்து விட்டனர். விநாயக் சென்மீது சாட்டப்பட்ட முதல் குற்றச்சாட்டு, அவரிடம் மாவோயிஸ்ட் தொடர்புடைய பிரசுரங்களும், புத்தகங்களும் இருந்தன என்பது. ""மகாத்மா காந்தி பற்றிய புத்தகங்களோ, அவர் எழுதிய "சத்திய சோதனை' புத்தகமோ வைத்திருப்பதாலேயே எப்படி ஒருவர் காந்தியவாதியாகிவிட முடியாதோ, அதேபோல மாவோயிஸ்ட், தீவிரவாதம் போன்றவை பற்றிய புத்தகங்களும், துண்டுப் பிரசுரங்களும், ஏன் ஆவணங்களும் வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் தேசத்துரோகக் குற்றம் செய்ததாகக் கூறிவிட முடியாது என்று அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்து விட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.  டாக்டர் விநாயக் சென் மீது சாட்டப்பட்டிருக்கும் இரண்டாவது குற்றச்சாட்டு, சிறைச்சாலையில் இருக்கும் மாவோயிஸ்ட் தலைவர் நாராயண் சன்யாலைச் சந்தித்து அளவளாவிய டாக்டர், அவரிடமிருந்து சில முக்கியமான கடிதங்களையும், ஆவணங்களையும் கடத்திச் சென்றார் என்பது. சிறைச்சாலை அதிகாரிகள் முன்னிலையில் நாராயண் சன்யாலைச் சந்தித்த விநாயக் சென் எதையும் கடத்திச் செல்ல வாய்ப்பில்லை என்பதுடன், சிறைச்சாலையில் கைதியாக அடைபட்டிருக்கும் ஒருவரிடம் எந்தவித ஆவணங்களும் இருக்கவும் வாய்ப்பில்லை என்றுகூறிக் குற்றச்சாட்டை நிராகரித்து விட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.  அடிப்படை ஆதாரமில்லாமல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளைக் கீழமை நீதிமன்றமும், பிலாஸ்பூர் உயர் நீதிமன்றமும் நிராகரித்திருந்தால் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்திருக்க வேண்டியதும் இல்லை. ஒரு நல்ல மனிதர், மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பொறுப்புள்ள மருத்துவர் காராகிரகத்தில் அடைபட்டுக் கிடக்க வேண்டிய அவசியமும் இல்லை.  கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பல வட மாநிலங்களில் இதுபோல பல மனித உரிமை மீறல்கள் மாநில அரசுகளாலும், அரசின் ஆதரவில் செயல்படும் கூலிப்படைகளாலும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. தீவிரவாதத்துக்கு எதிராகக் கிளம்பி இருக்கிறோம் என்று அரசு ஆதரவுடன் சுரங்க முதலாளிகளின் கூலிப்படையினர் கொன்று குவித்துவரும் ஆதிவாசிகளின் எண்ணிக்கை ஆயிரங்களில். ஆதிவாசிகளைக் காட்டிலிருந்து அகற்றினால்தான், காடுகளை அழித்துச் சுரங்கங்களை நிறுவ முடியும் என்பதால் அரசின் ஒத்துழைப்புடன் இந்தக் கூட்டம் களமிறங்கி இருக்கிறது.  அரசுதான், பன்னாட்டுச் சுரங்க முதலாளிகளின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தொழில்வளம் என்கிற சாக்கில் தேசத்தின் இயற்கை வளங்களைக் கொள்ளை கொள்ள உதவி புரிகிறது என்றால், நீதிமன்றங்களும் பழிவாங்கும் எண்ணத்துடன் அரசு தொடரும் வழக்குகளின் பின்னணியை உணராமல் தீர்ப்பளித்தால் எப்படி? உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கும் பொறுப்புணர்வு ஏன் கீழமை நீதிமன்றத்துக்கும், பிலாஸ்பூர் உயர் நீதிமன்றத்துக்கும் இல்லாமல் போனது?  அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினால், ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் நடக்கும்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் களமிறங்கினால் அது தேசத்துரோகம் என்கிறார்கள். சரி, அப்படியே வைத்துக் கொள்வோம். மக்களின் வாக்குகளைப் பெற்று, ஒவ்வொரு குடிமகனின் ஜீவாதார உரிமையையும் பாதுகாப்பதாக அரசியல் சட்டத்தின் பெயரில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, அந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், தங்களது நலனில் மட்டுமே அக்கறை செலுத்தும் ஆட்சியாளர்கள் செய்வது மட்டும் தேசத்துரோகம் இல்லையா?  வரவர, எதற்கெடுத்தாலும் நாம் உச்ச நீதிமன்றத்துக்குப் போய்தான் நீதிபெற வேண்டும் என்கிற துர்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறதே, அது நல்ல அறிகுறியாகப்படவில்லை. கீழமை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு வழக்கு உச்ச நீதிமன்றம்வரை எடுத்துச் செல்லப்பட்டதே தவறு. தீவிரவாதம் தீவிரமடைவதன் அடிப்படைக் காரணமே, தாமதிக்கப்படும் நீதி என்பதுதான் உண்மை!

0 comments:

Post a Comment