First Published : 22 Apr 2011 03:55:25 AM IST
சர்க்கஸில் குழந்தைகள் வேலை செய்யத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். தற்போது நிகழும் சர்க்கஸ்களில் ஆய்வு நடத்தி, 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும் என்று நீதிபதி தல்வீர் பண்டாரி தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் பாராட்டும் அதேவேளையில், ஏற்கெனவே தொழில் செய்ய முடியாமல் நொடித்துப்போய்க் கிடக்கும் சர்க்கஸ் நிறுவனங்களுக்கு இந்தத் தீர்ப்பு மேலும் ஒரு பேரிடியாக அமைந்திருக்கிறது. "விலங்குகளைத் துன்புறுத்துகிறார்கள்; அதன் இயல்புக்கு மீறிய செயல்களைச் செய்ய வைக்கிறார்கள் என்று சர்க்கஸ் நிறுவனங்கள் மீது புகார் வந்தபோது, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல ஆய்வுகள், பல சான்றிதழ்கள் பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இப்போது குழந்தைகளைப் பணியமர்த்தக்கூடாது என்கிற பிரச்னை. இதற்கு சர்க்கஸ் நிறுவனங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றன. ""அக்ரோபேடிக் செய்வதற்குக் குழந்தைகளை இளம் வயதில் மட்டுமே பயிற்றுவிக்க முடியும். உடலை "ங' போல் வளைக்க வேண்டுமானால் இளம் வயதிலேயே பயிற்சி தொடங்கப்பட வேண்டும். இவ்வாறு 14 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சர்க்கஸில் இருக்கவே கூடாது என்றால், பிறகு எப்படி அக்ரோபேடிக்-குகளை உருவாக்குவது?'' என்று கேட்கின்றனர் சர்க்கஸ் தொழில் நடத்துவோர். இது நியாயமான கேள்வியும்கூட. 14 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் திரைப்படங்களில் நடித்து - தொழில்புரிந்து - சம்பளம் வாங்குகிறார்கள் என்பதற்காக, அந்தத் திரைப்படத் தயாரிப்பாளர் மீதும், இயக்குநர் மீதும் குழந்தைத் தொழிலாளர்கள் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றால், திரைப்படங்களில் குழந்தை வேடங்களில் யார்தான் நடிக்க முடியும்? சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதை யாருக்குத்தான் கொடுப்பது? திரைத்துறையில் நடிக்கும் (அல்லது பணியாற்றும்) குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதில்லை, நல்ல சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதற்காக அதை ஏற்க முடியும் என்றால், அக்ரோபேடிக் போன்ற சர்க்கஸ் விளையாட்டுகளில் மட்டும் ஏன் இதே நியாயங்களை ஏற்கக்கூடாது? ஐரோப்பிய நாடுகளில், சர்க்கஸில் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், அக்குழந்தையின் தாய் அல்லது தந்தை உடனுறைபவராக இருக்கவும், அக்குழந்தையின் கல்விக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் சர்க்கஸ் நிறுவனம் உறுதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடைபெறும் போர் மற்றும் வன்முறைகளால் குழந்தைகள் மனம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகக் குழந்தைகள் நடத்தும் சர்க்கஸ் (ஆப்கன் மொபைல் மினி சர்க்கஸ் ஃபார் சில்ரன்) உருவாக்கப்பட்டு, தற்போது ஐரோப்பா, ஜப்பான் நாடுகளில் இந்த சர்க்கஸ் குழு தனது நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் அங்கம் வகிப்போர் 6 வயது சிறார் முதல் 18 வயதுக்குள்பட்டவர்கள். இதில் இடம்பெறும் குழந்தைகள் உடல்வளைத்தல், நடனமாடுதல், பஃபூன் என எல்லாவற்றையும் செய்கின்றனர். ரஷியாவில் உடல்வளைக்கும் பயிற்சிகளை 7 வயதிலேயே தொடங்கி விடுகிறார்கள். அப்போதுதான் அவர்களால் இதில் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். அவ்வாறு மிக இளம் வயதிலேயே உடல்வளைப்புப் பயிற்சியில் ஈடுபட்ட குழந்தைகள் மட்டுமே ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்றுள்ளன. ரஷியாவில் அது விளையாட்டு; ஆனால், சர்க்கஸ் ஒரு தொழில் என்று வேறுபாடு காணலாம்தான். ஏன் நாம் இதையே ஒரு விளையாட்டுப் பயிற்சியாகப் பார்க்கக்கூடாது? சம்பளம் என்றில்லாமல் இந்தப் பயிற்சிக்கான ஊக்கத்தொகையாக ஏன் அந்த சர்க்கஸ் நிறுவனம் தரும்படி செய்யக்கூடாது? இதைச் செய்ய வேண்டுமானால், இத்தகைய அக்ரோபேடிக் பயிற்சிகளில் ஈடுபடும் குழந்தைகள் அனைவரையும் விளையாட்டு ஆணையத்தின் கீழ் பதிவு செய்யவும், மாதந்தோறும் இவர்களை ஆய்வு செய்யவும், சிறப்புக் கவனம் செலுத்தி கூடுதல் பயிற்சி, பயிற்சிக்கான உபகரணங்கள், உணவு, ஆகியவை சரியாக வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் வேண்டும். இக்குழந்தைகளின் படிப்பு தடைபடாமலும், அதேவேளையில் இவர்களின் மற்ற பொழுதுபோக்குகள் பாதிக்கப்படாமலும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு விளையாட்டு ஆணையத்துக்கு அளிக்கப்பட வேண்டும். விளையாட்டு ஆணையம் இதை முறையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்தினால், இந்தியாவும் ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பதக்கங்களைவென்று வரும் வாய்ப்புகளை உருவாக்கலாம். பதினான்கு வயதுக்குள்பட்ட குழந்தைகள் யாரும் பணியமர்த்தப்படக்கூடாது என்பது இந்தியச் சட்டம். சட்டத்தின் அடிப்படையான நோக்கம்- குழந்தைகளின் கல்வி கற்கும் உரிமை பாதிக்கப்படக்கூடாது என்பதும், குழந்தைகள் தங்கள் வயதுக்கான விளையாட்டு உள்ளிட்ட மகிழ்ச்சியான தருணங்களைப் பறிப்பதாக இத்தொழில் அமையக்கூடாது என்பதும்தான். இச்சட்டத்தை அமலாக்கிய நாள் முதலாக, தொழில்துறையின் பல பிரிவுகளிலும் சிக்கியிருந்த குழந்தைகள் மீட்கப்பட்டு, தன்னார்வ அமைப்புகள் மூலம் இவர்களுக்குக் கல்வி அளிக்கவும் பெரும்நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதி எந்த அளவுக்குக் குழந்தைகளுக்குப் பயன்பட்டது? அடிப்படையான நோக்கம் எட்டப்பட்டதா என்பது கேள்விக்குறிதான். சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் எனும் வாய்ப்புகள் உள்ள, ஆபத்து இல்லாத, தவிர்க்க முடியாத இடங்களில் குழந்தைகள் தொழில்புரிய, சட்டத்தில் சில விதிவிலக்குகளையும் நிபந்தனைகளையும் ஏற்படுத்துவது அவசியம். உச்ச நீதிமன்றம் இதைவிட சர்க்கஸ் தொழிலுக்கே தடைவிதிக்கக் கோரியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. மிருகங்களும் கூடாது, உடல் சாகச வித்தைகளும் சாத்தியமில்லை என்றால் அது என்ன சர்க்கஸ்? யார் அதைப் பார்ப்பார்கள்?
0 comments:
Post a Comment