Sunday 24 April 2011

தலையங்கம்:சத்தியமே சாயி....



First Published : 25 Apr 2011 04:25:13 AM IST


உலகம் முழுவதும் மூன்று கோடி பக்தர்கள் தங்களது வாழும் தெய்வமாகக் கருதி வந்த சத்ய சாய் பாபா பருவுடல் நீத்தபோதிலும் அவரது பக்தர்களைப் பொருத்தவரை அவர் ஆன்மா எப்போதும் துணை நின்று வழிநடத்தும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.  உலகம் முழுவதும் பக்தர்களைப் பெற்றிருப்பது அத்தனை சுலபம் அல்ல. அதிலும், அறிவுஜீவிகளையும் மிக உயர்ந்த பதவிகளில் உள்ள மெத்தப்படித்த மனிதர்களையும் பக்தர்களாக ஆட்கொள்ள முடிந்தது என்றால் அது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆனால், அதை நிகழ்த்திக்காட்டியவர் சாய் பாபா.  தொடர்ந்து ஐந்து ஆண்டுகள்கூட மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நமது அரசியல் தலைவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் தனது பக்தர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டுத் தொடர்ந்து வழிகாட்டி வந்தார் என்றால், அதை நாம் வசியம் என்றோ மேஜிக் என்றோ தள்ளிவிடவா முடியும்? பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் உருவான முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினரும், தன்னை ஒரு நாத்திகன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் சட்ட அமைச்சர் துரைமுருகனும்கூட சத்ய சாய் பாபாவின் அபிமானிகளாக மாறி இருக்கிறார்கள் என்றால் பாபாவின் பேராற்றலை சித்து விளையாட்டு என்று வர்ணிக்கவா முடியும்?  கூவத்தைச் சுத்தப்படுத்தி லண்டன் தேம்ஸ் நதிபோல மாற்ற வேண்டும் என்று நினைத்தால், இதோ நிதியுதவி நான் தருகிறேன் என்று முன்வந்தது நாத்திகவாதியோ, பகுத்தறிவுவாதியோ அல்ல, சாய்பாபா என்கிற ஆன்மிகவாதிதான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. பகுத்தறிவு பேசுபவர்கள் தங்கள் அறக்கட்டளையிலிருந்து பொது நன்மைக்குச் செலவிட்டதைவிட, தனியார் கல்லூரிகளை நிறுவி அறக்கட்டளையின் சொத்துகளை விரிவுபடுத்த முற்படும் நேரத்தில், இந்த ஆன்மிக ஞானியின் செயல் நம்மை அவரைத் தலைவணங்கச் செய்கிறது என்பதுதானே நிஜம்?  அவர் முன்பாக உட்கார்ந்தால் மனஅமைதி ஏற்படுவதாகவும் அதனால்தான் அங்கே செல்வதாகவும் கூறியவர்கள் பலர். அவர் முன்பு உட்கார்ந்திருந்த போதுதான், தீர்வு காணப்படாத ஒரு முக்கிய பிரச்னைக்கு தீர்வு கண்டதாகச் சொல்லிய அரசியல் தலைவர்களும், நிர்வாகிகளும், மருத்துவர்களும், தொழிலதிபர்களும் பலர். அவரிடம் மானசீகமாக முறையிட்டு வீட்டுக்கு வந்தபோது, வேண்டிய காரியம் நடந்திருப்பதைக் கண்டேன் என்று குசேலரைப்போல மகிழ்ந்தவர்கள் பலர்.  இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு இன்றைய அறிவியலும், பாராசைக்காலஜி ஆய்வுகளும் தெரிவிக்கும் முடிவுகள் பதிலாக அமைந்திருக்கின்றன. ஒரு மனிதர் தன் மனஒருமைப்பாட்டின் உச்சநிலை அடையும்போது- அதாவது எண்ணங்கள் இல்லாத, மனது அற்றுப்போன பரிசுத்த நிலையில் இருக்கும்போது- மூளையில் உள்ள பிட்யூட்ரி சுரப்பியில் ஒருவித திரவம் சுரக்கிறது. அது அதீத ஆற்றலுக்குக் காரணமாக இருக்கிறது. சக்தியை அலையலையாக வெளியிடுகிறது. இந்த சக்தி, அடுத்தவரின் செல்களில் மாறுதல் நிகழ்த்தும் அளவுக்கு இருக்கிறது. ஆகவே, அந்த மகான் தொட்டதால் ஒரு பக்தர் குணமானார் என்பது வெறும் கதைகள் அல்ல என்று இன்றைய பாரா சைக்காலஜி ஆய்வுகள் சொல்கின்றன.  இந்த மீஇயல் ஆற்றல்களை நாம் ஏற்க மறுத்தாலும்கூட, அவர் எல்லாரையும் போன்று சாதாரண மனிதரா அல்லது இறைநிலை எய்திய சித்தரா அல்லது வெறும் துறவி மட்டும்தானா என்பதெல்லாம் அவரது வட்டத்துக்கு வெளியிலான வெறும்பேச்சுகளும் விவாதங்களுமாக மட்டுமே இருக்க முடியும். ஏனெனில் அவர் தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கியதோடு, கடந்த அரை நூற்றாண்டு காலக்கட்டத்தில், ரூ.40 ஆயிரம் கோடி மதிப்புக்கு சொத்துகளை உருவாக்கி, அதில் பள்ளிகள், பல்கலைக்கழகம், மருத்துவமனை என்று மக்கள் அளித்ததை மக்களுக்காகத் திருப்பி அளித்த மகாத்மா என்கிற அளவில் மனித்தப் பிறவியும் வேண்டுவதே மகான்களுக்கே என்பதை மன்பதைக்கு நிரூபித்தவர்.  அவர் லிங்கம் எடுத்துக் கொடுத்ததும், மாலைகள் வரவழைத்ததும் மாயவித்தைகளா அல்லது அருள்வலியா என்பதெல்லாம் வீண் வாதங்களில் போய் முடியும். ஆசிரமத்தில் நடைபெற்ற ஒரு கொலை மற்றும் சில சம்பவங்களை வைத்து, பாபாவைக் குற்றம் சுமத்தியவர்கள்கூட, பின்னாளில் அவரது மானுடச் சேவையின் முன்பாக மண்டியிட்டுத் தலை கவிழ்ந்தார்கள். பிறரது குற்றச்சாட்டுகளுக்கும் வசைச் சொற்களுக்கும் மதிப்பளிக்காமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று அப்பர் பெருமானைப் போல மக்களுக்குச் சேவை செய்துகொண்டிருந்தார். அவதூறு பேசுவோருக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால், பயணம் தடைபடும், பாதைகள் மாற நேரும் என்பதை உணர்ந்திருந்த மகான் அவர். யாருடைய குற்றச்சாட்டுக்கும் அவர் பதில் கூறியதில்லை.  பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பதோடு, துன்பத்தில் துடிக்கும் உயிர்களுக்கு உதவி செய்வதற்காகத் தொடங்கியதுதான் புட்டபர்த்தி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் இலவச மருத்துவ சிகிச்சைபெற்றுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சம். இந்த மருத்துவமனையில் சேவை செய்த சாய் மன்றத் தொண்டர்களும் பல லட்சம். இந்தச் சேவையின் பலனைத் தான் மட்டுமே பெறுவதாக இல்லாமல், இதில் அத்தனை தொண்டர்களுக்கும் பங்கிருப்பதாக மாற்றியதால்தான் அவரது அறக்கட்டளை இன்று ரூ. 40,000 கோடிக்கு மதிப்பிடப்படுகிறது.  "உற்றநோய் நோன்றல், உயிருக்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு' என்கிறது வள்ளுவம். அதாவது ஏற்பட்ட துன்பத்தைத் தாங்குதல், துன்பம் ஏற்பட்டதற்காகவோ அல்லது ஏற்படுத்தியவர்கள் மீதோ தான் துன்பம் செய்யாதிருத்தல் ஆகிய இரண்டும் தவத்தின் வடிவம் என்கிறார் வள்ளுவர். அந்த வழி வாழ்ந்தவர்கள், கடந்த 50 ஆண்டுகளில் இருவர்தான். ஒன்று காஞ்சி சங்கர மடத்தின் பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அடுத்ததாக சத்ய சாய் பாபா.

0 comments:

Post a Comment