First Published : 20 Apr 2011 01:37:40 AM IST
Last Updated : 20 Apr 2011 05:09:15 AM IST
திருடனின் போக்கு கற்றவனுக்குப் போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை' என்கிற சொலவடை காலத்தால் மருவி, "போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை' என்றானது ஒருபுறம் இருக்க, இப்போது ஆசிரியர்களாகப் பணிபுரிய முன்வருவோர் தங்கள் படிப்புக்கேற்ற வேலைபெறும் திறமை இல்லாமல் கடைசிப்புகலிடமாக ஆசிரியர் தொழிலுக்கு வருவது அதிகரித்து விட்டது.தமிழ்நாட்டில் மட்டும் 663 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 5 அரசுக் கல்லூரிகள், 7 தன்னாட்சிக் கல்லூரிகள் நீங்கலாக 651 தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் இருக்கின்றன. தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி நடத்தப்படுகிறது என்பதும், எவ்வளவு பணம் கொடுத்தும் பி.எட். பட்டம் பெற்றுவிடத் துடிப்போர் மனநிலையும், இவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்தால் அவர்கள் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் பணியாற்றுவார்கள் என்பதும் நினைத்தாலே வேதனைதரும் விஷயமாகத்தான் இருக்கிறது.அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து போனதற்கும், வெறும் சம்பளம் மட்டுமே குறிக்கோளாகவும், கற்பித்தலில் ஆர்வம், ஈடுபாடு இல்லாமலும் பல பேர் ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்படுவது அதிகரித்ததற்கும் தொடர்பு இருக்கிறது. இதைக் கல்வியாளர்கள் அறிவார்கள். அரசியல்வாதிகள் மட்டுமே இதைக் கண்டும் காணாததுபோல இருப்பார்கள். ஏனென்றால் இன்றைய இந்த நிலைமைக்குக் காரணமே அரசியல்வாதிகள்தான்.வேறு வேலை கிடைக்காததால் இதைச் சம்பளத்துக்காக ஏற்றுக்கொள்ளும் தொழிலாக ஆசிரியர் பணி ஆகிவிடாமல் இருக்க முதல்கட்டமாக தற்போது பி.ஏ.பி.எட். என்கிற நான்காண்டு ஒருங்கிணைந்த இளநிலைப் பட்டப்படிப்பு அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டி. பத்மநாபன் அண்மையில் அறிவித்திருப்பது புதிய நம்பிக்கையைத் தருகிறது. இத்தகைய ஒருங்கிணைந்த நான்கு ஆண்டுகளுக்கான படிப்பில் சேருவோர், நிச்சயமாக கற்பித்தல் மட்டுமே தனக்கான தொழில் என்று முடிவு செய்தவர்களாக இருப்பார்கள். வேலை கிடைக்காதவர்களின் புகலிடமாக பள்ளிக்கூடம் மாறும் நிலைமைக்கு மெல்ல முற்றுப்புள்ளி வைக்கப்படும்.இந்த நான்காண்டு பட்டப்படிப்பு குறித்து, புனே பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மாதிரிப் பாடத்திட்டம் சிறப்பானதாக இருக்கிறது என்பது இத்துறையில் இருப்போரின் கருத்தாகும். இந்த மாதிரி பாடத்திட்டத்தின்படி, முதல் மூன்றாண்டுகள் முழுவதும் கற்பித்தல் தொடர்பான வெவ்வேறு பாடப்பிரிவுகள் இடம்பெறுகின்றன. நான்காவது ஆண்டு களப்பயிற்சிக்காக ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும் கற்பித்தல், மாணவர் - ஆசிரியர் உறவு, பள்ளிச் சூழல், மாணவர் உளவியல், பள்ளி நடவடிக்கைகளில் பங்கேற்பு என்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிப் பாடத்திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு பாடத்திலும் 50 விழுக்காடு மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாகக் கொள்ளப்படும். மேலும் இரண்டாமாண்டு இறுதித் தேர்வு எழுதும் மாணவர், முதலாண்டு எழுதிய தேர்வுத் தாள்களில், மூன்றில் இரண்டு பங்கு தாள்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவார். இதே நடைமுறை மூன்றாம், நான்காம் ஆண்டுகளிலும் பின்பற்றப்படும். இத்தகைய நிபந்தனை ஒரு மாணவர் இந்த கல்வித்திட்டத்தை வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் தீவிரமாகக் கற்க வேண்டிய கட்டாயத்தை உண்டாக்குகிறது.ஆனால், இவை தமிழகத்தின் தனியார் கல்வியியல் கல்லூரிகளுக்கு வேம்பாகக் கசக்கும் என்பது நிச்சயம். புனே பல்கலைக்கழகம் தயாரித்துள்ள மாதிரிப் பாடத்திட்டத்துக்கு இணக்கம் தெரிவிக்க மாட்டார்கள். தேர்ச்சிக்கான மதிப்பெண்ணைக் குறைக்க முற்படுவார்கள். எத்தனை தாள்களில் தோல்வியுற்றாலும், ஆண்டுதோறும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்பார்கள்.இதெல்லாம் தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பார்கள். தமிழக அரசும் கல்வித் துறை அதிகாரிகளும் கவனமாக இருப்பார்களேயானால், நல்ல பாடத்திட்டத்தை உருவாக்கி, அதன் மூலம் நல்ல ஆசிரியர்களை உருவாக்க முடியும். அடுத்துவரும் இரண்டு தலைமுறை நல்ல கல்வி கற்கும் சூழலை உருவாக்க முடியும். இதில் கல்வித்துறை சமரசம் செய்துகொள்ளக்கூடாது. லஞ்சம் பெற்றுக்கொண்டு, எந்தவிதமான வசதிகளும், பயிற்றுநர்களும் இல்லாமலேயே தனியார் கல்வியியல் கல்லூரிகள், பி.ஏ.பி.எட். நடத்த கண்மூடித்தனமாக அனுமதித்தால், பாரதியார் சாபம் பலிக்கும். "படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோன்னு போவான்'.பி.ஏ.பி.எட். படிக்கும் மாணவர்களுக்கே ஆசிரியர் தொழிலில் முன்னுரிமை என்பதைத் தமிழக அரசு தெளிவாக அறிவித்தால், வேறுவேலை கிடைக்காமல் ஓராண்டு பி.எட். படிப்போர் எண்ணிக்கை குறையும். அத்துடன், தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல ஆசிரியர் நியமனங்கள் தனித்தேர்வுகள் மூலம் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் திறமையுள்ளவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக வருவார்கள். வெறும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நியமித்தால், ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்; ஆனால் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள்.
0 comments:
Post a Comment