Monday 18 April 2011

தலையங்கம்: நிலைதடுமாறாத நீதிபதி!

First Published : 19 Apr 2011 12:54:57 AM IST

Last Updated : 19 Apr 2011 03:53:55 AM IST

தில்லியில் நடந்த ஐந்தாவது எம்.சி. சீதல்வாட் நினைவுச் சொற்பொழிவின்போது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா வெளியிட்டிருக்கும் கருத்துகள் உச்ச நீதிமன்றத்திலிருந்து கீழமை நீதிமன்றங்கள்வரை உள்ள அத்தனை நீதிபதிகளும் கவனத்தில்கொள்ள வேண்டிய, நடைமுறையில் பின்பற்ற வேண்டிய கருத்துகள். அவர் தெளிவுபடுத்தி இருப்பதுபோல, ஒவ்வொரு நீதிபதியும் சட்டத்துக்கும் நிர்வாகத்துக்கும் இடையே உள்ள மெல்லிய இடைவெளியைச் சரியாகவும் துல்லியமாகவும் புரிந்துகொண்டு விட்டால், பிறகு நீதிமன்றம் வரம்பு மீறுகிறது என்கிற குற்றச்சாட்டோ, நிர்வாகத்துக்கு அறிவுரை கூறவேண்டிய கட்டாயமோ ஏற்படாமல் தவிர்க்கலாம்.கீழமை நீதிமன்றத்தின் நிர்வாகப் பிரச்னைகளில் உயர்நிலையில் உள்ள நீதிபதிகளின் அனாவசியத் தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற தலைமை நீதிபதி கபாடியாவின் கருத்தை, இந்தியா முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான செஷன்ஸ் நீதிபதிகளும், மாஜிஸ்திரேட்டுகளும் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். இப்படிப்பட்ட தலையீடுகளின் காரணமாக, மனசாட்சிக்கு விரோதமாகத் தீர்ப்பெழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டவர்களும், நிர்பந்தங்களுக்கு செவி சாய்க்காததால் இடமாற்றத்துக்கு உள்ளாகி அவதிப்பட்டவர்களும் ஏராளம். கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் நாடித்துடிப்பைத் துல்லியமாக அறிந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கிறார் என்பதை நினைக்கவே பெருமிதமாக இருக்கிறது.""தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டும்தான் வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருடன் நீதிபதிகள் தொடர்புகொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து தேவையில்லாத சலுகைகள், முன்னுரிமை பெறுதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். ஓய்வு பெறுவதற்கு முன்பே வேறு பணிகளை, அரசு நியமனங்களைப் பெற எத்தனிப்பதும், நீதித்துறையில் ஊழல் அதிகரிப்பதற்கான காரணிகள்'' என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி கூறியிருக்கும் இன்னொரு கருத்து, இன்று நீதித்துறையில் இருக்கும் பலரால் கடைப்பிடிக்கப்படுவதே கிடையாது.நீதிபதிகள் சமூக ரீதியாகக் கலப்பது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, விருந்துகள், திருமணங்கள் என்று பலருடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்குச் செல்வது போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை என்கிற அவரது கருத்தை, நீதியும், நேர்மையும், சட்டத்தின் மாண்பும் காப்பாற்றப்பட வேண்டும் என்று விழையும் அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்பார்கள். இந்த நீதிபதி இன்னின்னார்க்கு நெருக்கமானவர் என்று எல்லா நீதிமன்ற வளாகத்திலும் சர்வசாதாரணமாகப் பேசும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எப்படித் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.நீதிபதிகள் மற்றும் தீர்ப்புகள் மீது ஊடகங்களும், மக்களும் விமர்சனங்களை எழுப்புவதற்கு அடிப்படைக் காரணமே, நீதிபதிகளில் பலர் தங்களது சமுதாயக் கடமையைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல், இன்னும் வழக்கறிஞர் மனோபாவத்தில் இருப்பதுதான். வழக்கறிஞராக இருக்கும்போது, உற்றார் உறவினர் நண்பர்கள் திருமணங்கள், நிகழ்வுகளில் கலந்துகொள்வது, மதரீதியான திருவிழாக்களில் கலந்துகொள்வது, பொழுதுபோக்குக்காக கிளப்புகளில் உறுப்பினராக இருப்பது என்பதெல்லாம் நியாயமாக இருக்கலாம். அவர்கள் நீதிபதி என்கிற உயர்ந்த சமூக அந்தஸ்துக்கு ஆசைப்படும்போது, தங்களை உயர்த்திக் கொள்ளும்போது, அதுபோன்ற ஈடுபாடுகளைத் தவிர்ப்பது என்பதுதான் நியாயம். ஓர் உயர்ந்த கடமைக்காகச் செய்யப்படும் சிறு தனிப்பட்ட இழப்புகள் அவை.கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டதுதான் நீதித்துறையின் செயல்பாடுகளில் மிகப்பெரிய சீரழிவை ஏற்படுத்தியது என்பதை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிடாமல் விட்டுவிட்டார். நீதிமன்றத்தின் மதிப்பும், மரியாதையும் காப்பாற்றப்பட வேண்டுமானால், முதலில் அரசும், அதிகார வர்க்கமும் நீதிமன்றத்தையும் அதன் ஆணைகளையும் மதிக்க வேண்டும். ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகக் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகளை அரசும், அரசியல் கட்சிகளும் ஏன் நீதித்துறையும் பாதுகாக்க முற்படுவது விபரீதங்களை ஏற்படுத்தும் என்கிற அவரது கருத்தை யார் மறுக்கக்கூடும்? அளவுக்கு அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்குக் காரணமே, அரசுதான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தியாவில் தொடுக்கப்படும் பெருவாரியான வழக்குகள் அரசு நிர்வாகத்தால் தொடுக்கப்படுபவை அல்லது அரசு நிர்வாகத்தின்மீது தொடுக்கப்படுபவை. இந்தியக் குடிமகனின் கோரிக்கைகளை சட்டத்துக்கு உள்பட்டு நிறைவேற்றிக் கொடுக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, தேவையில்லாத சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி அவர்களை அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்து நீதிபெற வேண்டிய நிர்பந்தத்துக்குத் தூண்டுவதே நமது நிர்வாகக் குறைதான்.நீதிமன்றங்களின் ஆணைகள் அரசு அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும்போதுதான் பல அதிகாரிகளுக்கே நீதிமன்றத் தீர்ப்பு பற்றிய உணர்வே வருகிறது. இதற்கெல்லாம், அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களும் முக்கியக் காரணம். தங்களது அரசியல் செல்வாக்கால் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்கிற ஆணவத்தால், கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா அரசியல்வாதிகளும் நீதிமன்றத்தைத் துச்சமாக மதிக்கின்றனர் என்றே கருத வேண்டியிருக்கிறது.நீதிமன்றக் கண்டனத்துக்கு உள்ளான காவல்துறை அதிகாரிகளுக்கு அரசு சிறந்த காவல்துறை அதிகாரிக்கான விருது வழங்கி கௌரவிக்கிறதே, இதைவிடப் பெரிய நீதிமன்ற அவமதிப்பு வேறு எதுவாக இருக்க முடியும்? இந்தியாவிலுள்ள எல்லா நீதிபதிகளும் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியாவாக மாறாவிட்டாலும், அவரைக் கொஞ்சமாவது பின்பற்ற முயன்றாலே போதும், நீதி நிலைநாட்டப்பட்டு விடும், நீதித்துறை மேன்மைபெற்றுவிடும்!

0 comments:

Post a Comment