வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தால் தூத்துக்குடி நகரத்துக்கு சுற்றுச்சூழல் சீரழிவில் 4வது இடம் கிடைத்துள்ளது.
சுற்றுச்சூழல் சீரழிவில் 'மாசுபட்ட நகரமாக' தமிழக அளவில் தூத்துக்குடி நகரம் 4வது இடத்திலும், சென்னை மாநகரம் 18வது இடத்திலும் இருப்பதாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நடத்திய ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரம் 4வது இடத்தில் இருப்பதற்கான காரணம் இந்நகரைச் சுற்றி ஸ்பிக் உரத்தொழிற்சாலை, கனநீர் தொழிற்சாலை, அனல் மின் நிலையங்கள், கில்பர்ன் கெமிக்கல்ஸ், ஸ்டெர்லைட் தாமிரத் தொழிற்சாலை என 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்றப்ப்படும் புகையாலும், திட திரவக் கழிவுகளாலும், தூத்துக்குடி வட்டாரமே மிகப் பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது.சுற்றுச்சூழல் சீரழிவில் முதலிடம் பெறுவதற்கான வாய்ப்போ நெருங்கி வருகிறது. இதில் குறிப்பாக, ஸ்டெர்லைட் தாமிரத் தொழிற்சாலையானது தூத்துக்குடியின் சுற்றுச்சூழலைச் சீரழிவில் முதலிடம் வகிக்கிறது என்றால், இத்தொழிற்சாலையின் வரவே மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கிடையில் தான் தூத்துக்குடியில் நிறுவப்பட்டது.
இத்தொழிற்சாலை முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இரத்தினகிரி என்ற இடத்தில் 1994-ம் ஆண்டு வரை இதன் கட்டுமானப் பணி நடைபெற்றது. ஆயினும் இத்தொழிற்சாலை அடிக்கல் நாட்டப்பட்ட நாளிலிருந்து இரத்தினகிரி பகுதி விவசாயிகள், கடலோர மீனவர்களின் கடும் எதிர்ப்பால், போராட்டத்தால் 200 கோடி ரூபாய் செலவழித்து நடத்திய கட்டுமானப் பணியை பாதியில் நிறுத்திய மகாராஷ்டிரா மாநில அரசால் வெளியேற உத்தரவிடப்பட்டது.
அதன்பின் 30.10.1994 அன்று தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இதன் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 14.10.1996 முதல் இத்தொழிற்சாலை இயங்கி வருகிறத. இத்தொழிற்சாலை அடிக்கல் நாட்டப்பட்ட போது பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு போரட்டத்தை இடையில் நிறுத்திவிட்டது. இந்த சூழலில் தான் 1995 நவம்பரில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, இத்தொழிற்சாலைக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றது. இத்தொழிற்சாலையின் கழிவுநீரை கடலில் கலக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தால் மீனவர்கள் தங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் மீனவர்களை அணிதிரட்டி போராடியது. இத்தொழிற்சாலைக்கான தாமிர தாதுப் பொருளை ஏற்றி வந்த எம்.வி.ரீசா, எம்.வி. பரஸ்கவி என்ற கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது. விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் படகுகளுடன் சென்று தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிட்ட போரட்டத்தின் வீரியத்தை உணர்ந்த அரசு வேறு வழியின்றி கப்பல்களை வெளியேற்றியது. கப்பல்லோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த மண்ணில் கப்பலை விரட்டிய வரலாறு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கலக்கமடைந்த ஸ்டெர்லைட் நிறுவனம் தொழிற்சாலையின் கழிவுகளை கழிவுநீர் தேக்கத் தொட்டியின் மூலம் பாதுகாப்பாக சுத்திகரிப்பு செய்வோம் என்று அறிவித்தது. பல்வேறு நெருக்கடிகள், மக்கள் மத்தியில் ஏற்பட்ட சாதிச்சண்டையால் மக்கள் பலவீனமாக இருப்பதை உணர்ந்த ஸ்டெர்லைட் நிர்வாகம் கட்டுமானப் பணியை விரைந்து நடத்தி தனது பொருள் உற்பத்தியைத் தொடங்கியது. ஒரு சொட்டு நீரும், ஒரு பொட்டு மண்ணும் கெடாமல் தொழிற்சாலையை திறப்போம் என்று இந்நிர்வாகம் வீறாப்பு பேசியது. ஆனால் நடந்தது என்ன? ஸ்டெர்லைட் வளாகத்திலுள்ள புகைப் போக்கியால் வெளியேற்றப்படும் கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு போன்ற நச்சுக்காற்றுகளால், மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்குள் மலைபோல் குவிக்கப்பட்டிருக்கும் 'அம்மோனியம் கார்பனேட்' கலந்த பாஸ்போ ஜிப்சம் என்ற திடக் கழிவிலிருந்து கதிர்வீச்சு வெளியாகிறது. இதனால் காற்று பெரிதும் மாசுப்பட்டு புற்றுநோய்கான ஆபத்து அதிகரித்துள்ளது. ஸ்டெர்லைட் வளாகத்தில் இருக்கும் கழிவுநீர் தேக்கத் தொட்டியில் உள்ள கழிவுகளும் கசிந்து 25 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீரும், கிணற்று நீரும் நச்சுத்தன்மை அடைந்துள்ளது.
குடிதண்ணீருக்கான தரநிர்ணயத்தின் படி 1991-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசின் அறிவிக்கையானது, எந்தவொரு நிலத்தடி நீரிலும் ஒரு குறிப்பிட்ட அளவில் தான், அதாவது 0.05 மட்டுமே ஆர்சனிக் திரவம் இருக்கலாம். இந்த அளவை விட கூடுதலாக இருந்தால் அது பயன்பாட்டுக்குரியதல்ல என்று கூறுகிறது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள மீளவிட்டான், மடத்தூர், காயலூரணி கிராமங்களில் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நிலத்தடி நீரிலும், கிணற்று நீரிலும் 0.98 ஆர்சனிக் இருக்கிறது. ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள கழிவுநீர் தேக்கத் தொட்டியில் அனுமதிக்கப்பட்டதைவிட 100 மடங்கு ஆர்சனிக் இருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றம் ஆணையின் படி, 17.11.1998 ல் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த நீரின் குழுவின் அறிக்கையே ஸ்டெர்லைட் நிறுவனத்தை அம்பலபடுத்தியுள்ளது. ஆனால் 1998 க்குப் பிறகு 2010 வரை 13 ஆண்டுகளாக இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் எவ்வளவு மாசுபட்டிருக்கும் என்பதை கணக்கிட்டுப் பார்த்தால் இதயமே நின்று விடும்! 1996 முதல் இன்று வரை 140 க்கு மேற்பட்ட விபத்துகள், 30 க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோர் படுகாயம் என இத்தொழற்ிசாலை இயங்கி வருகிறது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், இத்தொழிற்சாலையை சுற்றியுள்ள ஊராட்சி மன்றங்களும் இந்நிறுவனத்திற்கு சார்பாகவே செயல்பட்டு வருகின்றன. அமைதிக்காக்கின்றன. ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் தான் முதன் முதலில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது. தூயச் சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக்கட்டளை சார்பில் வழக்கறிஞர் திரு. பிரகாஷ் இவ்வழக்கை நடத்தினார். இத்தொழிற்சாலையில் நடந்த பல்வேறு விபத்துக்கள் காரணமாக இந்நிறுவனம் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 9 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டியுள்ளது. சென்னை உயர்நீதி மன்றம் ஆணையின்படி 29.10.1998 முதல் 1.11.1998 வரை ஆய்வுகள் நடத்திய நீரின் குழுவின் அறிக்கையும், உச்சநீதி மன்றம் ஆணையின்படி 2004-ம் ஆண்டில் ஆய்வுகள் மேற்கொண்ட டாக்டர் தியாகராஜன் தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் அறிக்கையும் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் நிலம், நீர், காற்று எவ்வளவு மாசுபட்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்தியதால், இவ்வறிக்கைகளின் மீதான விவாதத்தால் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதியரசர்கள் எலிப் தர்மராவ், என். பால் வசந்த குமார் அமர்வு மன்றம் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட 28.9.2010 அன்று சரியான தீர்ப்பு வழங்கியது. ஸ்டெர்லைட் நிர்வாகமோ உச்சநீதி மன்றம் சென்று உயர்நீதி மன்றம் ஆணைக்குத் தடை உத்தரவு பெற்றிருக்கிறது.
ஸ்டெர்லைட் நிர்வாகம் 750 கோடி ரூபாய்க்கு 'கலால் வரி ஏய்ப்பு' செய்ததை மத்திய சங்கவரித்துறை கண்டுபிடித்து ஸ்டெர்லைட் நிர்வாக துணைத் தலைவர் வரதராஜனை ஜூலை 23 அன்று கைது செய்து சிறையிலடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சுற்றுச்சூழல் சீரழிப்பு, வரி ஏய்ப்பு மோசடி என ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளது.
இத்தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போரட்டங்களும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. ஆனால் தமிழக அரசு இத்தொழிற்சாலை குறித்து எதுவும் பேசாமல் அமைதி காப்பது என்பது மக்களை பாதுக்காக்க தவறுகிறது என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இந்த ஆலைக்கு எதிரான போராட்டம் 16 ஆண்டுகளாக நீண்ட போராட்டம். இதில் இறுதி வெற்றி யாருக்குக் கிடைக்கும்.
நன்றி:-http://prachidanewswing.com/tuticorin%20full%20news.html
0 comments:
Post a Comment