Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts

Sunday, 3 April 2011

கவிதை என்றால் இப்படி இருக்கனும்-4- நன்றி ஆனந்த விகடன்

ஒரு வகுப்பறையும்... சில இளவரசிகளும்!

அ.வெண்ணிலா, ஓவியம் : ம.செ

பதினோரு மணிக்கு மட்டுமே 
வெளியே வர வேண்டும்காலையில் ஒரு முறை
மத்தியானம் ஒருமுறை
குழாயில் தண்ணீர் வரும்
வேளை தப்பி
வெளியே வருபவர்கள்
மைதானம் பெருக்க வேண்டும்
கடும் விதிகளை அறியாமல்
வயிறு பிசையும்
உள்ளாடை நனைந்து
ஈரம் பரவும்
உள்ள யாரு, வெளிய வா
உரத்து ஒலிக்கும்
அதிகாரக் குரலுக்குப் பயந்து
பல்லியாய் சுவரொட்டும் பிம்பம்
தண்ணீர் போகாமல்
வாரந்தோறும் அடைத்துக்கொள்கின்றன
நாப்கின்களால் நிறையும்
கழிப்பறை பீங்கான்கள்.

தினம் பத்து பேர்
அந்த நேரத்துக்குப்
போக மாட்டேன்றீங்க
என்ன சொன்னாலும்
உங்க இஷ்டத்துக்குத்தான்
போவீங்க
பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கிறது
அதிகாரத்தின் குரல்
கூச்சம் தொலைக்கலாம்
நின்று மாற்றவாவது
இடம் வேண்டுமல்லவா
கழிப்பறையில்.

மாசத்துக்கு
மூணு, நாலு நாள்
லீவு எடுத்தா என்ன பண்றது?
பதில் எதிர்பார்க்காமல்
ஒலிக்கும் கேள்வி
அறை முழுதும் பரவும்
வெட்கம் பூசிய சிரிப்புகளும்
நமுட்டுப் புன்னகைகளும்
வலி தோய்ந்த மௌனங்களும்
ஆங்காங்கு எழும்
கொடுக்குள்ள விலங்கொன்று
விஷம் இறக்கிய மகிழ்வில்
இடம் நகரும்.

அங்க நின்னு பேசின
இங்க நின்னு பேசினன்னு
பேச்சு வந்தது
படிச்சது போதும்னு
சோறாக்க வேண்டியதுதான்
அங்க பார்த்தேன்
இங்க பார்த்தேன்
இப்படித் தொட்டேன்
அப்படித் தொட்டேன்னு
யார்கிட்டயாவது சொன்ன
பள்ளிக்கூடம் வர முடியாது
காலையில சீக்கிரம் வரணும்
சாயந்திரம் என் சைக்கிள்ல வரணும்
படிக்கிறேன்னு திமிரா
உங்கம்மாகிட்ட சொன்னா
வீட்டவிட்டு வெளிய வர முடியாது
சொல்றபடி நடந்துக்க
இதெல்லாம் படிக்க வரலன்னு
யார் அழுதா
ஏறிக்கிட்டு நின்ன இடத்துல
நிக்குது பாரு
எல்லாம் ஜோடி ஜோடியா
இந்த வயசுல
தவறாமல் படித்துத்
தொலைக்க வேண்டியிருக்கிறது
மாதராய்ப் பிறந்திடவே நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா.

எங்க காலத்துல எல்லாம்
கட்டுன ஆளத் தவிர
ஏறெடுத்துப் பார்க்க முடியுமா
அப்ப ஏது இந்த கசமுசால்லாம்
எங்க காலத்துல எல்லாம்
காலேஜ் படிக்கும்போதுதான்
கண்ணயே நிமிரவிடுவோம்
எங்க காலத்துல எல்லாம்
2 படிக்கும்போதுதான்
அதுகூட ஒண்ணு ரெண்டுதான்

இப்ப காலம் கெட்டுப்போச்சு
எட்டாவது பத்தாவது படிக்கிறதெல்லாம்
ஆளுக்கொரு ஜோடி வெச்சிருக்கு
எல்லாக் காலத்திலும்
கைதாகிக்கொண்டிருக்கிறார்கள்
ஆறு வயதுக் குழந்தை
பலாத்கார வழக்கில்.

முதல் ரத்தம் பார்த்துக்
கலங்கி
பாதி வகுப்பில் வெளியேறும்
பெண்
ஒரு செவிலித் தாய்க்கான
பிரியத்தை விட்டுச் செல்கிறாள்
தன் வகுப்பறையிடம்!

கவிதை என்றால் இப்படி இருக்கனும்-3- நன்றி ஆனந்த விகடன்

 


























 ஸ்மைலி
பற்கள் தெரிவதுபோல் சிரிப்பது
புருவம் உயர்த்திக்
கண்களால் சிரிப்பது
ஒற்றைக் கரத்தில்
முகம் புதைத்துச் சிரிப்பது
வெட்கித்
தலை குனிந்து சிரிப்பது
உதடுகளை வில்லென
வளைத்துச் சிரிப்பது
இவற்றில் எந்த வகை
நீ மின்னஞ்சலில் அனுப்பியது?
- ராகவ்
உயிர்ப்பு
பிள்ளையார் சிலையின்
தலையை உடைத்துவிட்டு
தலை குனிந்து நிற்கிறாள்
நேஹா.

அம்மா அடிப்பாளென
ஓரக் கண்ணில் துளிர்க்கிறது
சிறு துளி.

அம்மா பார்த்துவிடாதபடிக்கு
தலையைத் தூக்கிக்கொண்டு
தூணுக்குப் பின் மறைகிறார்
உடைந்த பிள்ளையார்!
- லதாமகன்
நிழல்களுடன் பேசுபவன்
விடைபெறல் அவ்வளவு
எளிதாய் நிகழ்வது இல்லை
ஒரு கையசைப்பு போதும்
கடைசி வரை உள்ளிருக்க!
- நிலா ரசிகன்  
வரையப்படுவதெல்லாம் வரைபடங்கள் அல்ல!
குழந்தை
வானம் வரைந்தது
நட்சத்திரங்களும்
நிலவும்
தானாய் வந்தன.

குழந்தை
வனம் வரைந்தது
பறவைகளும்
பட்டாம்பூச்சிகளும்
தானாய் வந்தன.

குழந்தை
நதி வரைந்தது
கூழாங் கற்களும்
குட்டி மீன்களும்
தானாய் வந்தன.

குழந்தை
கோயில் வரைந்தது
கடவுளும் பக்தர்களும்
தானாய் வந்தனர்.

குழந்தை வரைவதெல்லாம்
வந்துகொண்டே இருந்தது
குழந்தை வரைவதை
நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கையில்
இன்னும் வரை
இன்னும் வரை
ஏதாவது வருகிறதா பார்ப்போம்
என்று சொல்லியபடியே வந்தனர்
குழந்தையின் அம்மாவும் அப்பாவும்
ஆசிரியரும் பிரம்பும்.

இத்தனைக்கும் குழந்தை
வீட்டையோ,
பள்ளியையோ
வரையவே இல்லை!
- வே.விநாயகமூர்த்தி
ஓர் ரகசிய புகைப்படம்
நான் குழந்தையாய்
தவழ்ந்தபோது
எடுத்ததென
அம்மா மாட்டிவைத்திருக்கிறாள்
அழகிய புகைப்படம் ஒன்றைக்
கூடத்தில்.

குலதெய்வம் கோயிலுக்கு
மொட்டை போட்டதெனச் சொல்லி
தொங்குகிறது ஒரு படம்
நான் அழுத முகத்துடன்.

பூப்புக்குச் சீர்செய்த
அலங்காரத்தில்
பட்டுத் தாவணி சலசலக்கும்
புகைப்படம்
நிரப்பிக்கொண்டு இருக்கிறது
வெட்கத்தை அறை முழுக்க.

நான் எங்கே இருக்கிறேன்
கண்டுபிடியுங்கள்
எனக் கேட்டு
விருந்தினர்களோடு
விளையாடுவதற்கு என்றே
வைத்திருக்கிறேன்
இரண்டாம் வகுப்பில் எடுத்த
குரூப் புகைப்படத்தை
அலமாரியில்.

திருமணத்துக்கென
ஜாதகத்துடன் அனுப்பப்பட்டு,
'மன்னிக்கவும்’ என்ற
ஒரு வரிக் குறிப்புடன்
திரும்ப வரும் புகைப்படங்கள்
கிடக்கின்றன
கடித உறைக்குள்ளேயே
யாருக்கும் பார்க்க
மனமின்றி!
- ரேணுகா சூரியகுமா

கவிதை என்றால் இப்படி இருக்கனும்-2- நன்றி ஆனந்த விகடன்


நதி
தொடரும் பயணங்களில்
நதிகளை
மீண்டும் மீண்டும்
சந்திக்க நேர்கிறது
சில அபூர்வ தருணங்களில்
நதிப் பாலங்களின் மீது
ரயில் நின்றுவிடுகிறது
தூரத்தில் கீழே தெரியும்
நதியின் ஆழத்தில்
மனம் அமிழும் வேளையில்

நதி
தன் ரகசியங்களை
மெள்ள
சொல்லத் தொடங்கும்
அநேகமாக
அதே வேளையில்
ரயிலும் மெள்ள
நகரத் தொடங்கும்!
- கோபால் மனோகர்
பட்டாம்பூச்சி
பட்டுப் பூச்சியைப்போல
பட்டுப் பாவாடையில்
பாதம்
பட்டும் படாமலும்
கீழே விழுந்து... எழுந்து
பின் தொடர்ந்து
ஓடி வருகிறது குழந்தை.
கீழே விழுந்து... எழுந்து
அங்கப்பிரதட்சணம் செய்தபடி
முன் தொடர்ந்து செல்கிறது 'பலூன்’!
- ச.புகழேந்தி
கதவடைத்த வீடு


வெகு கவனமாக
அமைக்கப்படுகிறது
வீட்டுக்குள்
மீன்களுக்கான தொட்டி.
வேறெதுவும் வழியின்றி
அமைந்துவிடுகிறது
தொட்டிக்குள்
மீன்களுக்கான
வீடு!
- ந.சிவநேசன்
சோதனை
நடப்பதுபோல நடந்து
போவதுபோலப் போய்
'நல்லவங்களா இருக்காங்க
புது வீட்டுக்கு வந்தவங்க’
என்றிவள் வந்து சொன்னாள்.
வருவதுபோல வந்து
நிற்பதுபோல நின்றார்கள்
புது வீட்டிலிருந்தும்
'வாங்க வாங்க
அட, உள்ள வாங்க’ என்றோம்
நல்லவங்க போலான நாங்களும்!
- பா.ராஜாராம்
பிள்ளையார் எறும்புகள்
யானையின் நிறத்தில்
சுவரின் துதிக்கை பிடித்தேறி
ஒரே நேர்க்கோட்டில் ஊர்கின்றன
எங்கள் வீட்டு
பிள்ளையார் எறும்புகள்
எண்ணிக்கை குறிப்பெடுத்து வரும்
என் பிள்ளையின் முயற்சி
சுலபமாகக் காலேறிவிடும்
எறும்புகளால் தோற்கடிக்கப்படும்
கொலுசு மணிக்குள் புகுந்த
எறும்பொன்று
இனியும் முகம் காட்டவேயில்லை.
இருந்தாலும் அவை
யாரையும் இம்சிப்பதில்லை.
நானும் பிள்ளையும்
எதிரெதிரே ஊர்ந்தோம்
எறும்புகள் சொல்லித்தரும்
மூக்குரசும் பயிற்சி
இஷ்டமென்றாள் மகள்.
பூஜையறைக்குள் புகும்
பிள்ளையார் எறும்புகள்
மாடி வீட்டில் பதம் பார்த்த
லட்டுத் துகள்களை
விநாயகர் பொம்மையின்
துதிக்கை சேர்ப்பிக்கும்.
'விநாயகர் லட்டுப் பிரியரா?’ எனும்
என் மகளின் கேள்விக்கு
அர்த்தம் புரியாமல்
அங்கிருந்து நகர்கிறேன் நான்!
- கொ.மா.கோ.இளங்கோ

கவிதை என்றால் இப்படி இருக்கனும்-1- நன்றி ஆனந்த விகடன்

சொல்வனம்!

நீலச் சிலுவை சாபங்கள்

நிலைமை ஒருநாள் தலைகீழானது
வனங்களின் ஆட்சியின் கீழ் வந்தன நவீனப் பெருநகரங்கள்
விருட்சங்களின் கால்களில் விழுந்து கதறுகின்றன கட்டடங்கள்
உடைகள் இன்றி கொத்துக்கொத்தாகத்
தொங்குகிறீர்கள் கோழிகளின் சைக்கிள்களில்
நறுக்கப்பட்ட மனித விரல்கள் கோத்த சரங்களைச் சார்த்தி
துவங்குகிறது ஐந்தறிவுக் கோயிலின் பூசை
தங்கள் வாடிக்கையாளர்களிடம்
நெஞ்செலும்பு நல்லதெனச் சொன்னபடியே
லாகவமாக உங்கள் தோலை அகற்றும் வெள்ளாடுகள்
(மர்ம உறுப்புகளையும் கேட்டு வாங்குமொரு கும்பல்)
பூஞ்செடிகளின் மரண ஊர்வலத்தில்
வழியெங்கும் தூவத் தேவை
நூற்றுக்கணக்கிலான காது மடல்கள்
இளகிய மனங்கொண்ட பூனைகள்
மனிதக் குட்டிகளை வளர்க்கக்கூடும்
கதியின்றி நடுத் தெருவில் தோழியைப் புணருகையில்
கல்லெறியாமல் உங்களைக் கடக்கட்டும் நாய்கள்!

- இளையநிலா ஜான்சுந்தர்

லட்சுமிக் குட்டி
ஏதேதோ
காரணம் சொல்லி
எல்லாக் குழந்தைகளையும்
அனுப்பிவிட்டு
லட்சுமிக் குட்டிக்கு
அதிரசம் தந்தாள் அம்மா
உறங்கிக்கொண்டு இருந்த
எல்லா பொம்மைகளையும்
எழுப்பி
ஊட்டிவிடத் தொடங்கினாள்
லட்சுமிக் குட்டி!

'ஏழும் மூணும் எத்தன?
இருபதுல
ஆறு போனா எத்தன?’
எனக்
கேள்விகளை
வீசிக்கொண்டு இருந்த
ஆசிரியரிடம்
கேட்பதற்கு
ஒரு கேள்வி இருந்தது
குழந்தையிடம்
'வண்ணத்துப்பூச்சிக்கு
கலர் அடிச்சது யாரு?’
- கண்மணிராசா
மரணத்தின் முன் ஏற்பாடுகள்
ராத்திரி தாண்டுவது கஷ்டமென
வைத்தியர் சொல்லிப் போனதும்
மரணத்தின் மாய வலை
விரியத் தொடங்கியது
வீட்டில்
அம்மாவும் அக்காவும்
அவசரமாய் குழந்தைகளைச்
சாப்பிடவைத்தார்கள்
தகவல் சொல்லப்பட
வேண்டியவர்களின்
தொலைபேசி எண்களைத்
தேடத் தொடங்கினார்கள்
அப்பாவும் பெரியண்ணனும்
பீரோவைப் பூட்டி
சாவியைப் பத்திரப்படுத்துவதும்
எளிதில் திருடு போகக்கூடிய
விலையுயர் பொருட்களைப்
பாதுகாப்பதுமென
ஏதேனும் வேலை இருந்தது
எல்லோருக்கும்
'எல்லாத்துக்கும் முன்னே நின்னு
காசைக் கரியாக்காதீங்க’ என
சின்ன அண்ணனை
எச்சரிக்கத் தவறவில்லை
சிக்கன சின்ன அண்ணி
எதிர் வீட்டு கோபாலை அழைத்து
வாசலில் டியூப்லைட் மாட்டப்பட
தூக்கம் வராத அக்கம் பக்கத்தினர்
திண்ணையில் அமர்ந்து
முன்னம் நிகழ்ந்த
பல மரணங்கள்பற்றி
முணுமுணுத்துக்கொண்டு
இருந்தார்கள்
தப்படிக்கும் சின்னானும்
பந்தல் போடும் ஆறுமுகமும்கூட
முன்தொகை வாங்கிப் போன பின்
நிகழ்வின் சோகம்போல்
மழை பெய்யத் தொடங்க...
இனி நிகழ வேண்டியது
தாத்தாவின் இறப்பு மட்டுமே!
- ஆர்.எஸ்.பாலமுருகன்