First Published : 23 May 2011 04:26:05 AM IST
Last Updated : 23 May 2011 04:47:23 AM IST
பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. உலகத் தரத்திலான பொருள்கள் அனைத்தும் இந்தியாவில் கிடைக்கிறது என்கிற திருப்தியும், சர்வதேச அளவில் நமது இந்திய நிறுவனங்கள் போட்டிபோடும் தகுதி பெற்றிருக்கின்றன என்கிற பெருமையும், நமது நகரங்கள் மேலைநாடுகளைப்போல நுகர்வோர் கலாசாரத்தை வரிந்து கொண்டிருக்கின்றன என்கிற யதார்த்தமும் இனிக்கிறது. குறிப்பாக, தகவல் தொலைத்தொடர்புத் துறை நமது இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய சொர்க்கவாசலையே திறந்துவிட்டிருக்கிறது என்பதும் உண்மை. ஆனால், இவையெல்லாம் மேம்போக்கான முன்னேற்றங்கள்தானே தவிர, ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரமும் சமச்சீர் முன்னேற்றம் கண்டு, எல்லா தரப்பினருக்கும் உலகமயமாக்கல், பொருளாதாரச் சீர்திருத்தம் போன்ற கொள்கைகளின் பயன்கள் சென்றடைந்திருக்கின்றனவா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் ஏற்பட்டிருக்கும் கலாசாரச் சீரழிவுகளைப் பற்றி நாம் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. எந்தவொரு சமுதாயத்தையும் நாம் அந்தச் சமுதாயம் விரும்பும் மாற்றங்களிலிருந்து தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதுதான் காரணம். சமீபத்தில் 2009-10-க்கான தொழிலாளர் ஆணையத்தின் வேலைவாய்ப்பு மற்றும் வேலையில்லாமைக்கான கணக்கெடுப்பின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள் தவிர, இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் எல்லாம் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களும், அறிக்கையும், இந்தியாவை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக இப்போதும் தொடர்வது வேலைவாய்ப்புதான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. காஷ்மீரையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தங்க நாற்கரச் சாலையால் சரக்குப் போக்குவரத்து சுலபமாகி, கணிசமாக நமது ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற கருத்தையும் பொய்யாக்கி இருக்கிறது இந்த அறிக்கை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நமது இறக்குமதி அதிகரித்து வருவதுடன், உற்பத்தி பல துறைகளில் குறைந்திருப்பதும், அதனால் வேலை இழப்பு ஏற்பட்டிருப்பதும் இந்த அறிக்கையிலிருந்து தெரிய வந்திருக்கிறது. போதாக்குறைக்கு, கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு இதுபோன்ற திட்டங்கள் எந்தவிதப் பயனும் அளிக்கவில்லை என்கிறது அந்த அறிக்கை. தொழில் துறை வளர்ச்சி பற்றி நாம் என்னதான் பேசினாலும், இப்போதும் இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்புக் களமாகத் தொடர்வது என்னவோ நமது கிராமப்புறங்கள்தான். கடந்த இருபதாண்டு பொருளாதாரச் சீர்திருத்தத்தால் இந்த நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரமாக இருக்கிறது. இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 23.80 கோடிக் குடும்பங்களில் 72.26% குடும்பங்கள் இப்போதும் கிராமப்புறங்களில்தான் வசிக்கின்றன. இவர்களில் 10.1% பேர் வேலையில்லாமல் திண்டாடுபவர்கள் என்று தெரிவிக்கிறது அந்தப் புள்ளிவிவரம். அதனால்தான் அரசுகள் அறிவிக்கும் இலவசத் திட்டங்கள் கிராமப்புற ஏழை மக்களை இந்த அளவுக்குக் கவர்கின்றன என்று கருத இடமிருக்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பின்மைக்கான முக்கிய காரணி, விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுதான். கிராமப்புறங்களில், விவசாயம்தான் 57% வேலைவாய்ப்பு வழங்குகிறது. கட்டுமானத் தொழில் 7.2%, சிறு தொழில் உற்பத்தி 6.7%, ஏனைய சில்லறை வியாபாரங்கள், கைவினைப் பொருள்கள், சேவைத்துறை போன்றவை 6.3% வேலைவாய்ப்பை வழங்குகின்றன. விவசாயம் செழிப்பாகவும், லாபகரமாகவும் நடைபெறாமல் போனால் ஒட்டுமொத்த கிராமப்புற வேலைவாய்ப்புகளும் சுருங்கி விடுகின்றன. விவசாயத்தில் ஏற்படும் பின்னடைவை ஈடுகட்ட கிராமப்புற மக்களுக்கு மாற்று வேலைவாய்ப்புக்கான பயிற்சியும் தரப்படுவதில்லை. கிராமப்புறத் தொழிலாளிகளுக்கு மாற்றுத் தொழிற்பயிற்சி வழங்குவதன் மூலமும், விவசாயம் பொய்த்தாலும் அவர்களது பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க வழிகோலுவதன் மூலமும்தான் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் மிகப்பெரிய அளவில், விவசாயத் தேக்கத்தை ஈடுகட்டி வந்த கால்நடை வளர்ப்பு இப்போது இல்லாமல் போனதுகூட, கிராமப்புற வேலைவாய்ப்பின்மைக்குக் காரணம் என்கிறது அந்த அறிக்கை. நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்பது கிராமப்புறப் பொருளாதாரத்தை ஆரோக்கியமான வகையில் வளர்க்க உதவாமல், ஊழலுக்கும், ஆக்கபூர்வமான விவசாய மற்றும் கிராமப்புறத் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் அமைந்திருக்கிறது என்கிற உண்மையும் இந்தப் புள்ளிவிவரங்களின் மூலம் தெளிவாகிறது. விவசாயம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதுடன், கிராமப்புறத் தொழிலாளர்களிடம் சேவைத் துறைக்கான திறமைகள் வளர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்தும், பொருளாதாரச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளாகியும் இன்றும் இந்தியாவில் அரசு வேலைவாய்ப்புக்கான முக்கியத்துவம் குறையவில்லை என்பதிலிருந்தே, திறமைகள் வளர்க்கப்பட்டு, தன்னம்பிக்கையுடன் போட்டிபோடத் தயாரான தலைமுறை உருவாக்கப்படவில்லை என்பதுதான் தெளிவாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், விவசாயமும் ஆதரிக்கப்படாமல், கிராமப்புற வளர்ச்சியும் போதிய கவனத்தைப் பெறாமல், தொழில் வளர்ச்சி என்பதும் நகர்ப்புற வளர்ச்சியாக இருப்பது, வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய அளவில் பூதாகரமாக வெடித்து, சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகக்கூடும் என்பதைத்தான் உணர்த்துகிறது. சமூகப் பாதுகாப்பு என்பது தனியார்வசம் ஒப்படைக்கப்படுவதால் இந்தப் பிரச்னை மேலும் கடுமையாகி மிகப்பெரிய எதிர்விளைவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்றுமதி, இறக்குமதி, பொருளாதார வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருக்கட்டும். நமது ஆட்சியாளர்களின் முழுமுதல் கவனமும் கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்குவதில் முனைப்புடன் செலுத்தப்படாவிட்டால், ஓர் எரிமலை வெடிக்கத் தயாராகிறது...!
0 comments:
Post a Comment