First Published : 18 May 2011 02:45:53 AM IST
Last Updated : 18 May 2011 04:29:38 AM IST
கர்நாடகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நடைபெறும் அரசியல் நாடகத்தை மக்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம்கூட நடக்குமா, அரசியல் சட்டம் இதற்கெல்லாம் இடம் தருமா என்று வியக்கும் அளவுக்கு கேலிக்கூத்தாக இந்த நாடகம் மாறிக்கொண்டிருக்கிறது. கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் 11 பேர் மற்றும் 5 சுயேச்சைகளை கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் பேரவைத் தலைவர் போப்பையா நீக்கியது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து, இந்த நாடகம் மேலும் விறுவிறுப்படைந்துள்ளது. இதில் மிகவும் மோசமாக அம்பலப்பட்டு நிற்பவர் கர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜ். ஆளுநர் பதவி என்பதை மறந்து இந்த அளவுக்கு வெளிப்படையாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலையில் செயல்படுகிறார் என்று எல்லோரும் விமர்சனம் செய்யும் அளவுக்கு அந்தப் பதவியைத் தரம் தாழ்த்திவிட்டார் என்று சொன்னால் மிகையில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, இந்த எம்எல்ஏக்களின் பதவி உறுதி செய்யப்பட்ட பிறகு, இந்த ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று பேசப்பட்ட வேளையில், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு தருகிறோம் என்பதை நிரூபிக்க, ஆளுநர் மாளிகையில் இவர்கள் கூட்டமாகப் போய்க் காத்துக்கிடந்தாலும் அவர்களைச் சந்திக்க மறுத்து, அவசர அவசரமாக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று பரிந்துரைக் கடிதம் அனுப்ப வேண்டிய அவசரம் ஆளுநர் பரத்வாஜுக்கு தேவையில்லாத ஒன்று. தங்களைச் சந்திக்கவந்த எம்எல்ஏக்களைச் சந்திக்காமல் இருந்ததால், அனைவரையும் கூட்டிக்கொண்டுபோய் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு நடத்தினார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. அதன்பிறகு ஆளுநர் மாளிகையின் செய்திக்குறிப்பு வெளியாகிறது: அப்படியொரு பரிந்துரைக் கடிதம் அனுப்பவில்லை, அது அடிப்படை இல்லாத செய்தி என்று! இதை முதல்நாளே சொல்லியிருந்தால், இத்தனை பேரையும் தில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டதால், மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை ஆளுநர் கேட்டுக்கொண்டு, அதற்கான நாள் குறித்திருந்தால், ஆளுநரின் நேர்மையை யாரும் சந்தேகிக்கப் போவதில்லை. ஆனால், ஆளுநர் மாளிகையில் இருந்துகொண்டே எம்எல்ஏக்களைச் சந்திக்க மறுத்தது எந்த வகையில் நேர்மை! அவர்தான் அப்படிச் செய்கிறார் என்றால், அதை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் எப்படிப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறார்கள். இவ்வளவு அப்பட்டமாக ஆளுநர் ஒருவர் காங்கிரஸýக்கு ஆதரவாகச் செயல்படுவது அவர்களுக்கும், அவர்தம் ஆட்சிக்கும் இழுக்கு அல்லவா! ஓர் ஆளுநர் மூலம் தங்களைத் தாங்களே இழிவு செய்துகொண்டுவிட்ட காங்கிரஸ் கட்சியைப்போல, ஒரு முதல்வரைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பாஜகவும் தனது பெயருக்குக் களங்கத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை எப்படியும் அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு வேறு முதல்வரை அமர்த்த வேண்டும் என்கிற பாஜக உள்கட்சிப் பிரச்னைதான் இத்தகைய அரசியல் கேலிக்கூத்துக்கு வித்திட்டது. இதனை ம.ஜ.த. கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி பயன்படுத்திக்கொண்டு விட்டார். இரும்புத் தாது ஏற்றுமதியில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரள்கிறது. இந்த இரும்புத் தாதுக்காக அரசுக்குத் தரப்பட வேண்டிய குத்தகைக் கட்டண நிர்ணயத்தில் தொடங்கி, கமிஷன் வரை ஏதேதோ சிக்கல்கள் தோன்றியது. எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்றார்கள். கடைசியாக எடியூரப்பாதான் முதல்வராக நீடிப்பார் என்று பாஜக தலைமை முடிவு எடுத்த பின்னர், ஆளை மாற்றாவிட்டால் ஆட்சியை மாற்றுவோம் என்ற செயல்திட்டத்தில் கட்சியினர் சிலர் இறங்கினர். அதன் விளைவு, 11 பாஜக எம்எல்ஏக்கள், 5 சுயேச்சைகள் தாங்கள் இதுவரை பாஜகவுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநர் பரத்வாஜிடம் கடிதம் கொடுத்தனர். அந்த எம்எல்ஏக்களைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய பாஜக, இப்போது அவர்களை மீண்டும் தங்களுடன் சேர்த்துக்கொண்டு, மனம் திருந்திய மைந்தர்கள் என்பதைப்போல அவர்களையும் தில்லிக்கு கூட்டிச் செல்வது பாஜகவுக்கு என்ன பெருமை சேர்க்கும்! தனது மகனுக்கு முதல்வரின் தனியாணை மூலம் பெங்களூரில் மிக முக்கியமான இடத்தைக் குறைந்த விலைக்கு விற்றுள்ளார் எடியூரப்பா என்பது நிரூபிக்கப்பட்ட பின்னரும், அந்த ஆணையை ரத்து செய்துவிட்டார் என்பதற்காக, அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டுவிட்ட பாஜக, ஓடிப்போய்த் திரும்பிய இந்த எம்எல்ஏக்களையும் ஏற்றுக்கொண்டு அணிவகுப்பு நடத்துவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. கர்நாடகத்தில் நடக்கும் இந்தக் கேலிக்கூத்தின் கதாநாயகர்களாக இருக்கும் ஆளுநரும், முதல்வரும் தாங்கள் வகித்துவரும் பொறுப்பான பதவியைத் தரம் தாழ்த்தி, தங்கள் மனமாச்சரியங்களுக்காக ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியுள்ளனர். கர்நாடகத்தின் நிகழ்வுகள் மக்களாட்சித் தத்துவத்துக்குத் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டது என்பதுதான் வேதனைக்குரியது. இருவருமே அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இந்தப் பொறுப்புணர்வு பாஜக தலைமைக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் ஏற்பட வேண்டும்.
0 comments:
Post a Comment