First Published : 19 May 2011 03:47:34 AM IST
எதிர்பாராதது நடந்திருக்கிறது. அதை நிகழ்த்தி இருப்பவர் 88 வயதான வி.எஸ். அச்சுதானந்தன். ""2015-ல் கேரள அரசு 93 வயது முதியவர் ஒருவரை முதல்வராகக் கொண்டு செயல்படுவதை நீங்கள் விரும்புவீர்களா?'' என்கிற கேள்வியைக் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி கேரள வாக்காளர்களிடம் கேட்டபோது, அது அவர்களது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகக் கேரள மக்கள் எடுத்துக் கொண்டதன் விளைவுதான் கேரளத் தேர்தல் முடிவுகள். அண்டை மாநிலமான தமிழகத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து செயல்படும் 87 வயது முதியவரின் தலைமையிலான திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் காங்கிரஸ், தங்கள் மாநிலத்தில் அப்பழுக்கில்லாத, தனது பொதுவாழ்க்கையில் ஒரு சின்ன கறைகூடப் படியாத ஒருவரை அரசியலில் அரிச்சுவடிப் பாடம் படிக்கும் ராகுல் காந்தி விமர்சித்ததை ஏற்றுக்கொள்ளப் பலரும் தயாராக இருக்கவில்லை. படுதோல்வியைச் சந்திக்கும் என்று எதிர்பார்த்த இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி மயிரிழையில்தான் ஆட்சியை இழந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் வி.எஸ். அச்சுதானந்தன் என்கிற மனிதருக்குக் கேரள மக்களிடம் இருக்கும் தனிப்பட்ட செல்வாக்குத்தான் காரணம் என்பது தெளிவு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அமைந்த இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி அரசின் ஐந்தாண்டுகால ஆட்சியைப் பற்றிப் பெரிதாகக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. பெரிய சாதனைகள் என்று வர்ணிக்க முடியாது என்பது மட்டுமல்ல, சுறுசுறுப்பான நிர்வாகம் இருந்ததாகவும் சொல்ல முடியாது. ஆனால், ஊழலற்ற நிர்வாகத்தை முதல்வர் அச்சுதானந்தன் முன்வைத்தார் என்பதை மறுத்துவிடவும் முடியாது. கட்சிக்குள்ளேயே அச்சுதானந்தனுக்கு எதிராகக் கட்சியின் செயலர் பினராயி விஜயன் நடத்திய பனிப்போர்கள் ஒருபுறம். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை இனத்தவர்களின் மதகுருமார்கள் இடதுசாரி அரசுக்கு எதிராக வெளிப்படையாகவே முன்வைத்த விமர்சனங்கள் மற்றொருபுறம். இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த மூன்று கட்சிகள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக மாறியதும், 2009 மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் இடதுசாரிக் கூட்டணி தோல்வியைத் தழுவியதும், கடந்த அக்டோபரில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கூட்டணி மீண்டும் படுதோல்வி அடைந்ததும், அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்திக்கப் போகிறது என்கிற கருத்துக்கு வலு சேர்த்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியபோது, நகத்தைக் கடிக்கத் தொடங்கியது என்னவோ காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும்தான். திருவனந்தபுரத்திலுள்ள காங்கிரஸ் தலைமையிடமான இந்திரா பவனைவிட, தோல்வியடைந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையகமான ஏகேஜி சென்டரில்தான் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. மாபெரும் வரலாறு காணாத வெற்றி என்று ஊடகங்களால் கணிக்கப்பட்ட ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி என்பது கனவாகி, வெறும் நான்கு இடங்கள் அதிகம் பெற்று குருட்டு அதிர்ஷ்டத்தில் பெற்ற வெற்றியாக மாறியதற்குக் காரணம் என்ன? ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் உம்மன் சாண்டியின் பதிலில் தெளிவு இருந்தது - ""முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு மக்கள் மத்தியிலிருந்த தனிப்பட்ட செல்வாக்கும், அவரது பிரசாரமும்தான் எங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய மிகப்பெரிய வெற்றியைத் தட்டிப் பறித்து விட்டிருக்கிறது''. மக்களின் பேராதரவைப் பெற்ற 88 வயது வி.எஸ். அச்சுதானந்தனுக்குக் கட்சிக்குள் ஆதரவு இல்லாமல் போனது துரதிர்ஷ்டம். 47 ஆண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டபோது இருந்த 32 ஸ்தாபகத் தலைவர்களில் எஞ்சி இருப்பவர் அச்சுதானந்தன் மட்டுமே. கேரள முதல்வராக இருந்த அச்சுதானந்தன் கடந்த 2008 முதல் பொலிட்பீரோ உறுப்பினர் பதவியிலிருந்து அகற்றி நிறுத்தப்பட்டிருக்கிறார் என்றால் அந்த வேதனையை யாரிடம் சொல்லி நியாயம் கேட்பது? கேரள சட்டப்பேரவை சரித்திரத்தில் இதுவரை இவ்வளவு குறைந்த வித்தியாசத்தில் தேர்தல் முடிவுகள் வெற்றி, தோல்வியைக் கொடுத்ததே இல்லை. ஒன்பது கட்சிகள் அடங்கிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி, சட்டப்பேரவையிலுள்ள 140 இடங்களில் 72 இடங்களையும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான எட்டு கட்சி இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி 68 இடங்களையும் வென்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கேரள மாநில அரசியல் விசித்திரமானது. நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களைவிடத் தோல்வி அடைந்தவர்களைப் பற்றிய பெருமைகளைத்தான் அதிகம் பேசுகிறார்கள். ஒரு மிகப்பெரிய தோல்வியை எப்படி 88 வயது அச்சுதானந்தன் திறமையாக எதிர்கொண்டு மயிரிழையில் தோல்வி அடைந்தார் என்று அவரது வீரதீரப் பிரதாபங்களைத்தான் பத்திரிகைகள் வர்ணிக்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தனது முழு ஒத்துழைப்பையும் அச்சுதானந்தனுக்கு அளித்திருந்தால், இன்னும் நான்கைந்து இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் என்று கருத்துத் தெரிவிக்காத அரசியல் நோக்கர்களே இல்லை. படுதோல்வி அடைந்த கட்சித் தலைவர்கள்கூடத் தங்களது பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இல்லாத ஒரு காலகட்டத்தில், கேரள மாநிலக் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, தங்களது கூட்டணி ஆட்சியைப் பிடித்தாலும் தனது கட்சி எதிர்பார்த்த வெற்றி பெறாததற்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். தனது தலைமையில் கட்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், தான் முதல்வர் பதவிக்கு ஏற்றவரல்ல என்றுதானே பதவிப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். உம்மன் சாண்டி இரண்டாவது முறையாகக் கேரள முதல்வராகிறார். கேரள காங்கிரஸ் (மாணி) நிதி உள்ளிட்ட மூன்று அமைச்சரவைத் துறைகளும், முஸ்லிம் லீக் நான்கு அமைச்சர்களும் கல்வி, தொழில், உள்ளாட்சி உள்ளிட்ட ஏழு துறைகளும் பெற்று, சுமுகமான பதவிப் பங்கீடு முடிந்திருக்கிறது. இனிமேல் காங்கிரஸ் கட்சிக்குள் யாருக்கு என்ன துறைகள், எத்தனை அமைச்சர்கள் என்பது வழக்கம்போலப் போட்டாபோட்டிகள், கோஷ்டிப் பூசல்கள், காங்கிரஸ் மேலிடத்துத் தலையீடு என்று தீர்மானிக்கப்படும். "ஜெயித்தவர் தோற்றார்; தோற்றவர் வென்றார்' என்று சொல்வார்கள். அது கேரளத்தில் நடந்திருக்கிறது!
0 comments:
Post a Comment