Wednesday, 4 May 2011

தலையங்கம்: கண்கெட்ட பிறகு...


First Published : 05 May 2011 12:13:48 AM IST

Last Updated : 05 May 2011 03:48:05 AM IST

தமிழகத்துக்கு மின்சாரத் தட்டுப்பாடு என்பது புதிதல்ல. தமிழகத்தின் மின்சாரத் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் கணிசமான இடைவெளி எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. மின்தேவையைக் கருத்தில் கொண்டு, மின்உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில் தேவைகளும் இருமடங்காக அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்தப் பற்றாக்குறை அடிவானம் போல அடையமுடியாத இலக்காக நீண்டுகொண்டே செல்கிறது.ஆனாலும், இதற்கு முன்பிருந்த ஒவ்வொரு ஆட்சியின்போதும் ஒவ்வொரு விதத்தில் இந்தப் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போதைய தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மின்துறையைச் சரியாகக் கவனிக்காமல் விட்டதன் விளைவுதான், இன்றைய தினம் மின்தட்டுப்பாட்டில் மிகப்பெரும் நெருக்கடியும், நாளொன்றுக்கு மூன்று மணி நேர மின்தடையும் அவசியம் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதுதான் எதார்த்த உண்மை.தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்தப் பொறுப்பில் இருந்தாலும்கூட, அவர் உடல்நலக் குறைவு காரணமாக இத்துறை நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. ஏற்கெனவே இருக்கும் பற்றாக்குறை பிரச்னையோடு இந்தச் செயலின்மையும் சேர்ந்துகொண்டதில், தமிழகத்தில் மின்சாரம் இல்லாமல் மக்களும், குறிப்பாக தொழிற்கூடங்களும் பல இழப்புகளைச் சந்திக்கும் நிலைமை உருவாகிவிட்டது.தமிழகத்தின் மின்தேவை 12,000 மெகாவாட். ஆனால் உற்பத்தியோ வெறும் 7,000 மெகாவாட் மட்டுமே. இந்தக் குறைந்த மின்உற்பத்தியைக் கொண்டு, மக்களையும் திருப்திப்படுத்த முடியவில்லை. தொழிற்கூடங்களையும் திருப்தி செய்ய இயலவில்லை. இதன் காரணமாக, தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டு மாநிலம் முழுவதும் மே 5-ம் தேதி வேலைநிறுத்தம் செய்வதென சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சங்கம் (டான்ஸ்டியா) அறிவித்திருக்கிறது. மின்துறை அமைச்சர் தனது உடல்நிலை காரணமாக அதிக கவனம் செலுத்தத் தவறியிருந்தாலும்கூட, இத்தகைய இக்கட்டான சூழல் ஏற்படும் என்பதைக் கணிக்க பெருந்திறமைகள் ஏதும் தேவையில்லை. இந்த நிலைமையைச் சமாளிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசுக்குப் பரிந்துரைத்து, அதை அமல்படுத்தியிருக்க வேண்டிய அதிகாரிகள், மெத்தனமாக இருந்துவிட்டு இப்போது வெறுமனே மின் பற்றாக்குறையை மட்டும் காரணமாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.மற்ற மாநிலங்களில் மின்சாரம் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்து, அதற்கு முன்பாகவே மின்சாரத்தைப் பெறும் ஒப்பந்தங்களைப் போட்டிருக்க வேண்டும். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே இப்போது மின்சாரத்தை மற்ற மாநிலங்களிலிருந்து பெறுவது சாத்தியம் என்று இப்போது கூறுகிறார் மின்துறையின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் தலைவர் சி.பி.சிங். ஏன் இந்த நிலைமையை முன்கூட்டியே அறிந்து, முன்பதிவு செய்திருக்கவில்லை என்பதுதான் நம் கேள்வி.தொழில்நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடக் கோரிய சி.பி.சிங், அடுத்த ஆண்டு நிலைமை சரியாகிவிடும் என்று கூறுகிறார். எப்படிச் சரியாகும்? எத்தனை அனல் மற்றும் புனல் மின் நிலையங்கள் புதிதாகத் தங்கள் மின் உற்பத்தியைத் தொடங்கவுள்ளன, எப்படி விநியோகத்தடத்தில் மின்இழப்பு விகிதாசாரத்தைக் குறைக்கப் போகிறீர்கள் என்கிற கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை. எந்தவிதத் திட்டமும் இல்லாமல் அடுத்த ஆண்டு சரியாகிவிடும் என்று கூறுவது எதனால்? எப்படியும் அடுத்தமாதம் புதிய அரசு அமைந்துவிடும், அதன் பின்னர் அவர்களது தலைவலி என்கின்ற மனோபாவம்தான் இதில் வெளிப்படுகிறது. தமிழகத்தில் யார் ஆட்சி அமைந்தாலும் மின்பற்றாக்குறை என்பது தவிர்க்க முடியாதது. இதைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு மின்துறைக்குத் தலைமையேற்கும் அதிகாரிகளின் திறமையால் மட்டுமே சாத்தியம். இதில் எந்தத் துறைக்கு முன்னுரிமை அளிப்பது என்பதைத் தீர்மானிப்பது வேண்டுமானால் அரசியல்வாதிகளின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், மின்தேவை எவ்வாறு அதிகரிக்கிறது என்பதையும், எந்த மாநிலத்தில் மின்சாரம் பெற முன்பதிவு செய்வது என்பதையும் முன்கூட்டியே செயல்படுத்தும் வேலை அதிகாரிகளுக்குரியது. அவர்கள் அரசியல் தலைவர்களைச் சார்ந்து இல்லாமல், செயல்பட்டாலே பாதிப் பிரச்னை தீர்ந்துவிடுமே! தமிழகத்தின் மொத்த மின் உபயோகத்தில் வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் வெறும் 16% மட்டுமே. வியாபார நிறுவனங்கள், கடைகள், ஷோ ரூம்கள் போன்றவற்றுக்காக 26% பயன்படுகிறது. தொழிற்சாலைகளுக்கான உயர் அழுத்த மின்சாரம் 42%மும் குறைந்த அழுத்த மின்சாரம் 12% மும், உபயோகப்படுத்தப்படுகின்றன. மின்கசிவால் ஏற்படும் விரயம் ஒருபுறம் இருக்கட்டும். மின் திருட்டால் ஏற்படும் இழப்பு மட்டுமே ஏறத்தாழ ரூ.6,000 கோடியிலிருந்து ரூ.10,000 கோடி வரை என்று கூறப்படுகிறது. இதுவும், ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே நடைபெறுகிறது என்று கேள்விப்படும்போது அதிர்ச்சி அதிகரிக்கிறது. அப்படியெல்லாம் இருக்காது, இருக்கக்கூடாது என்று சமாதானப்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழி.இந்தப் பிரச்னைக்காக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சங்கம் முன்பே களத்தில் இறங்கியிருந்தால், தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பே பிற மாநிலங்களில் அப்போதைய விலைக்கே மின்சாரத்தைப் பெற முன்பதிவு செய்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். தடையில்லாமல் மின்சாரமும் கிடைத்திருக்கும். மின்வாரியத்துக்கு இழப்பும் ஏற்பட்டிருக்காது. தேர்தல் வாக்குகள் எண்ணப்படாமல், திரிசங்கு நிலையில் இருக்கும் இப்போது இப்படியொரு வேலைநிறுத்த முடிவு அவர்களுக்கும் பயன்தராது. மக்களுக்கும் இடையூறு. அதிகாரிகளும் தேர்தல் நடத்தைவிதி என்று காரணம் சொல்லிக் கைவிரிப்பார்கள், வேறென்ன?

0 comments:

Post a Comment