Tuesday 3 May 2011

தலையங்கம்: பயிரையே மேயும் வேலி!



First Published : 04 May 2011 01:20:44 AM IST

Last Updated : 04 May 2011 04:37:11 AM IST

ஸ்டாக்ஹோமில் ஒரு மாநாடு கூடியது. உலகிலுள்ள 173 நாடுகள் அந்த மாநாட்டில் பங்கேற்று, எண்டோசல்பான் போன்ற கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்துக்கு சர்வதேச அளவிலான தடை பிறப்பிக்க வேண்டுமா வேண்டாமா என்று விவாதித்தன. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 125 நாடுகள் எண்டோசல்பானுக்குத் தடை விதித்துவிட்டன. மீதமுள்ள 48 நாடுகளில் 47 நாடுகள், மெüனம் காத்தன. ஒரே ஒரு நாடுதான் எண்டோசல்பான் தடை செய்யப்படக்கூடாது என்று வாதிட்டது. அந்த நாடு, நமது பாரதம் மட்டும்தான்.ஜெனீவாவில் நடைபெற்ற, நீடித்த அங்கக நச்சு மாசுப் பொருள்கள் ஆய்வுக் கூட்டத்தில், இந்தியா ஆதரவு திரட்டுவதாகச் செய்திகள் வந்தன. தனது கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக இந்தியா ஒரு வரைவுக் கருத்துரையைத் தனிச்சுற்றுக்காக அனுப்பியுள்ளதாகவும், இந்த வரைவில் ஓராண்டு காலத்துக்கு எண்டோசல்பான் மீதான உலகத் தடையைத் தள்ளிவைக்கலாம் என்று ஆதரவு கோரியதாகவும், இந்த ஜெனீவா கருத்தரங்கில் பார்வையாளர்களாகப் பங்கேற்க கேரளத்தில் இருந்து சென்றிருந்த சி. ஜெயகுமார், டாக்டர் முகமது அஷீல் ஆகியோர் மின்னஞ்சல் மூலம் அந்த வரைவு நகல்களை அனுப்பியவுடன், கேரளத்தில் எதிர்ப்புகள் வலுத்தன. முழுஅடைப்புப் போராட்டமும் கேரளத்தில் நடைபெற்றது. மாநாட்டின் கடைசி நாளான ஏப்ரல் 29-ம் தேதி, கேரளத்தில் எண்டோசல்பான் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து பட்டியலில் சேர்க்கப்பட்டது.ஒரேயடியாக இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துக்கு முழுக்குப் போடாமல் இப்படியாகப் படிப்படியாக குறைத்துக் கொள்ளும் முடிவுக்குச் செல்ல இந்தியாவுக்கு வேறுசில காரணங்களும் இருக்கின்றன. இதற்கான முழுமுதற் காரணம், வேறு மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகளை இந்தியா உருவாக்கவில்லை. இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பூச்சிக்கொல்லி மருந்துகளே இல்லாத விவசாயத்துக்குப் புதிய தலைமுறை விவசாயிகளைப் பழக்கவும் இல்லை.இந்தியாவில் மூன்று நிறுவனங்கள் எண்டோசல்பான் தயாரிப்பில் உள்ளன. இவை ஆண்டுக்கு 9,000 டன் எண்டோசல்பான் மருந்தைத் தயாரிக்கின்றன. இதில் பாதி அளவு இந்திய விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது. மீதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.1,340 கோடி. தற்போது இந்த மருந்தைத் திடீரென்று தடைசெய்து நிறுத்திவிட்டால், இந்தியாவில் இதை நம்பியிருக்கும் 75 விழுக்காடு விவசாயிகளுக்கு மாற்றுப் பூச்சிக்கொல்லி மருந்து கிடைக்காது என்று இந்தியா கருதுகிறது.2001-ம் ஆண்டிலேயே தொழிற்கூட அபாயங்கள் குறித்த தேசிய நிறுவனம் இந்த பூச்சிக்கொல்லி மருந்து, மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கிறது என்பதைத் தெரிவித்தது. ஆனால் அதனை அரசு ஏற்கவில்லை. இந்த ஆய்வு மிகத் துல்லியமானதாக இல்லை என்று காரணம் கூறியது.இந்த மருந்து கேரளத்தில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள முந்திரிக்காடுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதால், அந்த மாவட்டத்தில் பல கிராமங்களில் அங்க ஊனத்துடன் குழந்தைகள் பிறப்பது, புற்றுநோய் அதிகரிப்பு, முடமாகிப்போதல் என பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளானார்கள். மேலும் விரிவாக ஆய்வுகள் செய்யப்பட்டபோது, எண்டோசல்பான்தான் இதற்குக் காரணம் என்று தெரியவந்து, போராட்டங்கள் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்டோருக்கும், இறந்தவர்களின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.பஞ்சாப் மாநிலத்தில் பாட்டிண்டா என்கிற பகுதியில் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது அந்த மண்ணே நச்சு மண்ணாகி விட்டிருப்பதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பரவலாக பாட்டிண்டா பகுதியில் புற்றுநோய் காணப்படுவதற்கு எண்டோசல்பான் உபயோகப்படுத்துவதுதான் காரணம் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.எண்டோசல்பான் மண்ணையும், மனிதரையும் நச்சுப்படுத்தி விடுகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை. இது புற்றுநோய்க்குக் காரணம் என்பதில் ஆராய்ச்சியில் கருத்து மாறுபாடு இருந்தாலும், இது ஆண்களின் உடலில் சுரக்கும் ஆண்மைத் தன்மைக்குரிய ஹார்மோனை பாதிக்கச் செய்வதால், பாதிக்கப்பட்ட ஆண்களால் உருவான குழந்தைகள் அங்க ஊனத்துடன், வளர்ச்சியின்றிப் பிறக்கின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வேறு எந்த நாட்டிலும் நடக்காத, நடக்கவே முடியாத செயல்கள் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். மக்களைப் பாதிக்கும் எந்த விஷயமானாலும் வேறு நாடுகளில் அரசால் கட்டுப்படுத்தப்படும். தடை செய்யப்படும். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் அரசு எண்டோசல்பான் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துத் தயாரிப்பாளர்கள் சார்பில், வக்காலத்து வாங்கும் அதிசயம் நடைபெறுகிறது. காசர்கோடிலும், பாட்டிண்டாவிலும் அங்குள்ள மக்களுக்கு எண்டோசல்பானால் ஏற்படும் ஆபத்தை எடுத்துச் சொல்லக்கூட நமது அரசு தயாராக இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் எண்டோசல்பானுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் அவரது கருத்தை ஆமோதிக்கிறார்கள். எண்டோசல்பானை உடனடியாகத் தடை செய்யும் கோரிக்கை தள்ளிப்போடப் பட்டிருக்கிறது. இப்படி இருக்கிறது நிலைமை.இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்றால் அதுதான் இல்லை. இந்தத் தடையைப் படிப்படியாக நீக்குவதற்கு இந்தியா அனுமதியைப் பெற்றுக் கொண்டிருப்பதால், ஏறக்குறைய அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எண்டோசல்பான் இந்தியாவில் ஒரு தொடர்கதையாக நீடிக்கவே செய்யும் என்பதுதான் இதன் பொருள்.மனித உயிர்களைக் கொல்லும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தைக் "கொல்'வதற்குக்கூடப் படாதபாடு பட வேண்டியிருக்கிறது இந்தியாவில்! இந்த லட்சணத்தில் 2020-ல் இந்தியா உலக வல்லரசாக வேண்டும் என்று கனவு வேறு காண்கிறோம்.

0 comments:

Post a Comment