Monday 9 May 2011

தலையங்கம்: இதுவல்ல சமூகநீதி!பொறியியல் கல்வி என்னும் பகல் கொள்ளை!!!



First Published : 09 May 2011 01:10:00 AM IST


தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குச் சென்ற ஆண்டைப்போலவே குறைந்தபட்ச மதிப்பெண் தொடரும் என்று தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் முதல்வரின் முடிவுக்கு வரவேற்புத் தெரிவித்துள்ளனர். அத்துடன், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.) அண்மையில் வெளியிட்டுள்ள ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வரும், மருத்துவர் ராமதாஸýம் கேட்டுக் கொண்டுள்ளனர். தொல்.திருமாவளவனோ, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் வெளியிட்டுள்ள ஆணையில், வரும் கல்வியாண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும், பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, மாணவர் குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஒதுக்கீடு முறையில் சேரும் மாணவர்கள் 45 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.தமிழக அரசின் கடந்த ஆண்டு அறிவிப்பின்படி, பொதுப்பிரிவினர் குறைந்தபட்சம் 50 விழுக்காடும், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 45 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 40 விழுக்காடும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் 35 விழுக்காடும் மதிப்பெண் பெற்றிருந்தாலே போதும், பொறியியல் கல்லூரியில் சேரலாம் என்று அறிவித்திருந்தது. அதுவே இந்த ஆண்டும் தொடரும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 40 விழுக்காடும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 35 விழுக்காடும் குறைந்தபட்ச மதிப்பெண்களாக நிர்ணயிப்பதன் மூலம் அச்சமூகத்தினர் பயன்பெறுவார்கள் என்றும், இல்லையானால் கிராமப்புற மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதோடு, சமூகநீதிக் கொள்கையே பொருளற்றதாகிவிடும் என்றும் அறிவித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுகள் குறித்த புள்ளிவிவரங்களைப் பார்த்த பின்னர்தான் இத்தகைய முடிவுகளை எடுக்கிறார்களா அல்லது யாரோ சிலருடைய சுயநலத் தூண்டுதலுக்கு ஆளாகி இத்தகைய அறிக்கைகளை வெளியிடுகிறார்களா என்று தெரியவில்லை.பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்றிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண் 100, 50, 50 விழுக்காடுகளுக்கு மதிப்பிடப்பட்டு, கட்-ஆப் மதிப்பெண் 200-லிருந்து குறைந்துகொண்டே வரும். கவுன்சலிங் முறையில் ஒவ்வொரு பிரிவிலும் (பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்) அந்தந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் அரசுக் கல்லூரி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் சேர்ந்து விடுகிறார்கள். கட்-ஆப் மதிப்பெண் 190-லேயே அனைத்துப் பிரிவுகளும் பூர்த்தியாகிவிடுகிறது.முதல் பதினைந்து நாள்களில் 175 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் முக்கியமான கல்லூரிகள் அனைத்திலும் சேர்ந்து விடுகிறார்கள். அடுத்த பதினைந்து நாள்களில் 140 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், கொஞ்சம் சுமாரான கல்லூரிகளில் மிச்சமிருக்கும் இடங்களைத் தேர்வு செய்கிறார்கள். பெரும்பாலும் இதன்பிறகு கவுன்சலிங் நடத்த வேண்டுமானால் மாணவர்களைக் கூவிக்கூவி அழைக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது.ஆக, கட்-ஆப் மதிப்பெண் 160 பெற முடியாத எந்தவொரு தாழ்த்தப்பட்ட மாணவரும், பழங்குடி மாணவரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் சேர வாய்ப்பே இல்லை என்பதே இன்றைய கல்விச்சூழல்!தமிழக அரசு சொல்கின்ற குறைந்தபட்ச மதிப்பெண் அளவுகோலின்படி, கட்-ஆப் மதிப்பெண் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 90 ஆகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 80 ஆகவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 70 ஆகவும் குறைவதன் மூலம், இந்த மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அதிக கல்விக் கட்டணம் செலுத்தி, அக்கல்லூரி காலியிடங்களை நிரப்புவதற்கு மட்டுமே பயன்படுவார்கள். ஏனெனில் பிளஸ் 2 தேர்வில் 50 விழுக்காட்டுக்கும் குறைவாக மதிப்பெண் பெற்று எந்தப் படிப்பில் சேரலாம் என்று குழம்புகிற மாணவர்களில் பெரும்பகுதியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.பொறியியல் கல்லூரியில் படிக்க வாய்ப்பு உள்ளபோது ஏன் அதை நழுவவிட வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி, அந்த மாணவர்களின் பெற்றோர் வீட்டையும் நிலத்தையும் விற்று, அரசியல்வாதிகள் நடத்தும் பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு மட்டுமே இந்த மதிப்பெண் குறைப்பு உதவுகிறது.பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களால் பொறியியல் பாடங்களைப் படித்துத் தேற முடியுமா என்ற ஐயத்தை விட்டுத் தள்ளுவோம். அரசின் இந்த முடிவு எந்த வகையில் சமூகநீதி என்பது புரியவில்லை. உண்மையான சமூகநீதி எதுவாக இருக்க முடியும்? குறைந்த மதிப்பெண் பெற்றதால் அரசுக் கல்லூரியில் வாய்ப்பிழந்த இம்மாணவர்களைத் தனியார் பொறியியல் கல்லூரிகள் சேர்த்துக் கொள்வதுடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதே கட்டணத்தை மட்டுமே இவர்களிடமிருந்து தனியார் பொறியியல் கல்லூரிகள் வசூலிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தால், அரசின் சமூகநீதி நியாயத்தை ஏற்க முடியும். வெறுமனே அரசியல்வாதிகளின் பினாமிகள் நடத்தும் தனியார் பொறியியல் கல்லூரிக் கதவை விரிவாகத் திறந்து, உள்ளே வரவிட்டு, பலிகடா ஆக்குவதற்குப் பெயர் சமூகநீதி அல்ல."எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்கிற திரைப்படப் பாடலைப் பாடி நமது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

0 comments:

Post a Comment