''ஆங்கிலத்தில் சம்பாதித்ததை தமிழுக்குச் செலவழித்தவர்!''-நன்றி ஆனந்த விகடன்
அரசியல், இலக்கியம் இரண்டையும் இணைத்து ஒரு பத்திரிகையாளன் திறம்படச்செயல்பட முடியும் என்பதற்கு உதாரணமான மனிதர்களில் ஒருவர், கஸ்தூரிரங்கன். 'கணையாழி’ இலக்கிய இதழை உருவாக்கியதும் இவர்தான். 'தினமணி’யில் இவர் ஆசிரியராக இருந்தபோது, இவரது கட்டுரைகளுக்காகவே பத்திரிகை கூடுதலாக விற்றது. அப்படிப்பட்ட ஆளுமைகளில் ஒருவரான கஸ்தூரி ரங்கன், கடந்த 4-ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னையில் இறந்துபோனார்.
சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும் சாதனை எழுத்துக்களுக்கு சொந்தக்காரரான கஸ்தூரிரங்கன், 'தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் டெல்லி நிருபராக 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். 'இலக்கியச் சுவையுடன் தமிழ் விருந்து படைக்க வேண்டும்’ என்ற ஒரே நோக்கத்தில், 'கணையாழி’ இதழைத் தொடங்கினார். புகழ்பெற்ற எழுத்தாளர்களான தி.ஜானகிராமன், என்.எஸ்.ஜெகன்நாதன், அசோகமித்திரன், பிரபஞ்சன், பாலகுமாரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா ஆகியோரின் படைப்புகள் கணையாழியில் அதிக அளவில் வெளிவந்துள்ளன.
'தினமணி’ ஆசிரியராகப் பணியாற்றியவர், ஓய்வு பெற்றதும் பல்வேறு சமூக விஷயங்களில் குரல் கொடுக்கவும் தயங்கவில்லை. 'காந்தி மிஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் நிறுவனச் செயலாளராகத் தொண்டாற்றிய கஸ்தூரிரங்கன், தள்ளாத வயதிலும் ஊழல், பசி, நோய் இவற்றுக்கு எதிராக 'ஸ்வசித்’ என்ற அமைப்பின் மூலம் போராடி வந்தது குறிப்பிடத்தக்கது.
கஸ்தூரிரங்கனுடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவரான எழுத்தாளர் பிரபஞ்சன், ''கஸ்தூரிரங்கன் எழுதிய இந்திய-சீன யுத்த செய்திகள், உலக அளவில் கூர்ந்து கவனிக்கப்பட்டவை. நிறைந்த புகழும், நிறைந்த வருமானமும் இருந்தாலும், தமிழ் எழுத்துகளின் மீது தீராத தாகம்கொண்டவர். சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து’ பத்திரிகையில் அப்போதே கஸ்தூரிரங்கன் கவிதை எழுதினார். நவீன இலக்கியம் சார்ந்த தமிழ்ப் படைப்புகள் அதிக அளவில் வர வேண்டும் என்பதற்காகவே, கணையாழியைத் தொடங்கினார். ஆங்கிலத்தில் எழுதிச் சம்பாதித்ததை, தமிழுக்குச் செலவழித்த உன்னத மனிதர். எழுத்தாளர் சுஜாதாவும் அவரும் வகுப்புத் தோழர்கள். ஏராளமான இளம் எழுத்தாளர்களைக் கண்டறிந்து, தாம் பெற்ற புகழை அவர்களும் பெற வேண்டும் என்ற நோக்கில் எழுதவைத்தவர் கஸ்தூரிரங்கன்!'' என்றார் நெகிழ்வாக!
கஸ்தூரிரங்கனின் கவிதை ஒன்று...
கடவுளும் கவர்ன்மென்டும் ஒன்று
அதைத் தூற்றாதே:
பழி சேரும் உனக்கு
அதற்கு ஆயிரம் கண்கள்: காதுகள்
ஆனால், குறையென்றால்
பார்க்காது: கேட்காது
கை நீளும்: பதினாயிரம்
கேட்கும், பிடுங்கும்
தவமிருந்தால் கொடுக்கும்
கவர்மென்ட் பெரும் கடவுள்
அதைப் பழிக்காதே
பழித்தால்
வருவது
இன்னும்
அதிகம் கவர்ன்மென்ட்தான்.
- தி.கோபிவிஜய்
0 comments:
Post a Comment