Friday 24 June 2011

கார் பார்க்கிங்... காசு பார்க்கும் பில்டர்கள்!


இன்றைய நிலையில் பலரும் சொந்தமாக வீடு வைத்திருக்கிறார்களோ, இல்லையோ ஒன்றுக்கு இரண்டாக கார் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வீடு வாங்கும்போது கார் பார்க்கிங் வசதி என்பது முக்கியமான விஷயமாக மாறிவிட்டது. இதைப் பயன்படுத்தி சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களை சேர்ந்த சில பில்டர்கள் மற்றும் புரமோட்டர்கள் பணம் பார்க்க ஆரம்பித்து விட்டதாக புகார்கள் எழ ஆரம்பித்திருக்கிறது.

என்ன பிரச்னை என்பதைத் தெளிவுபடுத்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம். 

சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் இருக்கும் சுரேஷ்,  சொந்தமாக  ஒரு  ஃபிளாட் வாங்க அலைந்தார். அவருக்கு ஒரு கார், அவர் அப்பாவுக்கு ஒரு கார் என மொத்தம் இரண்டு கார்கள். இவற்றை நிறுத்த வசதியான அபார்ட்மென்ட் வேண்டும். 

அண்ணா நகரில் அப்படி ஒரு புது அபார்ட்மென்ட் கிடைத்தது. பில்டர், முதல் கார் பார்க்கிங்-க்கு 2 லட்ச ரூபாய் கேட்டார். இரண்டாவது கார் பார்க்கிங்க்கு 3 லட்சம் ரொக்கமா தரவேண்டும் என்றார். 

இதைகேட்டு அதிர்ந்து போனார் சுரேஷ். காரணம், கார் பார்க் கிங்குக்கு தனியாக பணம் வசூலிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றமே சொல்லி இருக்கிறது. இந்த நிலையில் பணம் கேட்பது சரியா?

''கார் பார்க்கிங்-க்கு ஏற்பட்டிருக்கும் டிமாண்ட் இதற்கு காரணம்'' என்கிறார் 'பிரீமியர் ஹவுஸிங் அண்ட் இண்டஸ்ட்ரியல் என்டர் பிரைசஸ்’ நிறுவனத்தின் இயக்குநர் நாராயணமூர்த்தி. கார் பார்க்கிங் விஷயத்தில் எதை கவனிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார்.



''திறந்தவெளி கார் பார்க்கிங் என்றால் நயா பைசா கொடுக்கத் தேவையில்லை. அது பொது பயன்பாட்டில் இருக்கும் இடமாக இருப்பதால் பணம் தரவேண்டாம். அதேநேரத்தில், சதுர அடி விலையைக் கணக்கிட எடுத்துக் கொள்ளும் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் இந்த கார் பார்க்கிங் பகுதி சேர்க்கப்படவில்லை என்றால், வீடு வாங்குபவர்கள் அதற்கு தனியாகப் பணம் கொடுத்து வாங்குவதில் தப்பில்லை. காரணம், மூடிய கார் பார்க்கிங்-ஐ கட்ட தனியாக ஒரு தளம் கட்ட வேண்டியிருக்கிறது. இப்படி தனியே கட்டப்படும் கார் பார்க்கிங்க்கு காசு வாங்கக்கூடாது என்றால் பில்டர்கள், இந்த கார் பார்க்கிங் கிற்கான விலையையும் சதுர அடியில் சேர்த்து விடுகிறார்கள்.
சூப்பர் பில்டப் ஏரியாவை எப்படி கணக்கிடுவது என்பதில் பில்டர்கள் ஆளுக்கொரு விதியை வைத்திருக்கிறார்கள். ஒரு தரப்பினர், சூப்பர் பில்டப் ஏரியாவில் கார் பார்க்கிங்கை சேர்த்து கணக்கிடுகிறார்கள். சிலர் அதை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இதை மாற்றி எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு முறையை கொண்டு வரவேண்டும். அது பொது மக்களுக்கு எளிதாகப் புரியும்படி இருக்க வேண்டும். அப்போதுதான் கார் பார்க்கிங் கிற்கு தனியாகப் பணம் கொடுக்கக்கூடாது என்பது புரியும். இல்லை என்றால் ச.அடி. விலையோடு ஒரு முறையும், தனியாக ஒரு முறையும் கார் பார்க்கிங் ஏரியாவுக்கு காசு கொடுக்க வேண்டிவரும்'' என்றவர் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயத்தை சுட்டிக் காட்டினார்.

''சுரேஷ் விவகாரத்தில் நடந்ததைப்போல கார் பார்க்கிங்-க்கான விலையை தனியே ரொக்கப் பணமாக பில்டர் அல்லது புரமோட்டர்கள் கேட்கிறார்கள் என்றால் அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று அர்த்தம். ஒன்று, அந்த வருமானத்தை அவர்கள் கணக்கில் காட்டப் போவ தில்லை, அல்லது கார் பார்க்கிங்-க்கான கட்டடப் பகுதியை ஏற்கெனவே பொது பயன்பாட்டுப் பகுதியில் சேர்த்து வீட்டின் விலையில் ஏற்றிவிட்டார்கள் என்று அர்த்தம்'' என்றவர் இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்பதையும் விளக்கினார். 

''வீட்டு வசதித் துறை, சி.எம்.டி.ஏ. சூப்பர் பில்டப் ஏரியாவில் எது எல்லாம் அடக்கம் என்பதை தெளிவாக்கும் விதமாக விதி முறைகளைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.

கார் பார்க்கிங்குக்குத் தனியாக பணம் வாங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே சொல்லி இருக்கும் நிலையில் இனியாவது அரசு இந்தப் பிரச்னையைக் கவனிக்குமா?

- சி.சரவணன்,நாணயம் விகடன்

0 comments:

Post a Comment