அந்தக் கல்லூரியின் வகுப்பறையில் நுழைந்த பேராசிரியர், மாணவர்களுக்கு மத்தியில் ஒரு சிறிய பையனும் அமர்ந்து இருப்பதைக் கண்டார். ஏதோ தெரியாமல் அமர்ந்திருக்கிறான் என எண்ணிய அவர், ''நீ என்ன இந்தக் கல்லூரி மாணவனா?'' என்று கேட்டார். அதற்கு அவன் பணிவாக, ''ஆம் ஐயா!'' என்று சொன்னான். ஆச்சர்யம் அடைந்த பேராசிரியர், ''உன் பெயர் என்ன?'' என்று கேட்டார். அதற்கு அவன் ''ராமன்'' என்றான்.ஆமாம்! அவர்தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்.
இவரது பெற்றோர் கணித மேதையும் ஆசிரியருமான சந்திரசேகரன் மற்றும் பார்வதி அம்மையார். சந்திரசேகர வெங்கட்ராமன் என்பதன் சுருக்கமே சி.வி.ராமன். இவர் பி.ஏ. இயற்பியலில் தங்கப் பதக்கம் பெற்று தேர்வானார். கொல்கத்தாவில் இந்திய நிதித் துறையில் உதவி கணக்குப் பொது மேலாளராக 1907- ல் பதவி ஏற்றார். அப்போதைய ரங்கூன் நகருக்கு பதவி மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் கல்கத்தாவுக்குத் திரும்பினார்.

1921-ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற உலகப் பல்கலைக் கழகங்களின் சபையில், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் பங்கேற்றார். அப்போது அவர் மேற்கொண்ட கடல் பயணத்தின்போது, கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனதில், கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது? வானத்தின் நிறமா? வானம் மேகமூட்டத்துடன் கறுப்பாக இருக்கும்போதும், தொடர்ந்து அலைகள் வரும்போதும் கடல் எப்படி நீலநிறமாக உள்ளது, என்ற கேள்விகள் உருவானது. திடீரென்று சூரிய ஒளியை நீர்த் துளிகள் பிரதிபலிப்பதால்தான் கடல் நீலநிறமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.
தனது ஒளிச் சிதறல் பற்றிய அறிக்கையைத் தயாரித்து, ராயல் சொசைட்டி ஆப் லண்டன் கழகத்துக்கு அனுப்பினார். முப்பட்டகக் கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள் செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப் பிரிவதை 1928-ல் கண்டுபிடித்தார். இதுவே, ராமன் விளைவு. இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அந்த முறை நோபல் பரிசு தனக்குத்தான் கிடைக்கும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் ராமன். அதனால், அவர் நவம்பர் மாதம் நடக்கப்போகும் விழாவுக்கு ஜூன் மாதத்திலேயே டிக்கெட் பதிவுசெய்து விட்டார். அவரது கண்டுபிடிப்பின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை. நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். அதுவும் தவிர, வெள்ளையர் அல்லாத ஒருவருக்கு அப்போதுதான் முதல் முதலாக நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அவருக்கு நமது அரசு பாரத ரத்னா வழங்கி கௌரவித்தது. அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில், தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நமது அரசு கொண்டாடுகிறது.
0 comments:
Post a Comment