மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று பிறந்தார் பீமாராவ். தாழ்த்தப்பட்ட இனமான மகர் இனத்துப் பெற்றோர் களுக்கு, இவர் பதினான்காவது குழந் தையாகப் பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலேய அதிகாரிகளிடம் வேலை பார்த்து வந்தார். அந்நாட்களில்... தாழ்த்தப்பட்ட இனத்தவர்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். பீமாராவின் தந்தை, தன் மகனை எப்படியாவது நன்றாகப் படிக்க வைக்கவேண்டும் என முடிவு செய்தார்.
அதற்காக ஆங்கிலேய அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி வாங்கி, தன் மகனை பள்ளிக்கு அனுப்பினார். பள்ளி ஆசிரியர், பீமாராவ் என்ற பெயருடன் அம்பேத்கர் என்ற பெயரையும் சேர்த்துவைத்தார். அது முதல் அவர் அம்பேத்கர் ஆனார்.
அந்தக் காலத்தில், பள்ளியில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் இருக்கைகள் உண்டு. தாழ்த்தப்பட்ட குலத்தவர்களுக்கு இருக்கைகள் கிடையாது. வீட்டிலிருந்தே ஒரு கோணியை எடுத்துச் சென்று, அதன்மீதுதான் உட்கார்ந்து படிக்க வேண்டும். ஆனால், கல்வி ஒன்றுதான் தங்களை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்கும் என்பதில் அம்பேத்கர் உறுதியாக நம்பினார். எனவே, பள்ளியில் மற்ற மாணவர்கள் இவரை என்னதான் இழிவுபடுத்தினாலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை, தீவிரமாகப் படித்தார்.
தாழ்த்தப்பட்ட மாணவர்களில்... அந்தப் பகுதியில் இவரே முதல் முதலில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார். அவரது வெற்றியை, அந்த இனத்தின் வெற்றியாக மக்கள் கொண்டாடினார்கள். அம்பேத்கர் மேல் படிப்புப் படிக்க கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும். அதற்கு நிறைய செலவாகும்... என்ன வழி என்று யோசித்த அம்பேத்கருக்கு ஒரு தகவல் கிடைத்தது. அது, பரோடாவின் அரசர் சாயாஜிராவ் கெய்க்வாட் தாழ்த்தப்பட்ட மாணவரின் கல்விச் செலவுகளுக்கு பணஉதவி செய்வார் என்பதுதான். எத்தனை இடர்கள் வந்தாலும் படிப்பதை மட்டும் விட்டுவிடக்கூடாது என்று மன உறுதியுடன் இருந்த அம்பேத்கருக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சி அளித்தது.
பரோடா மன்னரைச் சந்தித்து, அவரிடம் பெற்ற உதவியின் மூலம்... புகழ்பெற்ற எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். உடன் படித்தவர்கள், அவருடன் சகஜமாகப் பழகமாட்டார்கள். இருந்தாலும் அம்பேத்கர் எதையும் பொருட்படுத்தாமல், தனது பெரும்பாலான நேரத்தை நூலகத்துக்குச் சென்று படிப்பதற்குச் செலவு செய்தார்.
பரோடா மன்னரின் உதவி மற்றும் கோல்காபூர் அரசரின் உதவிகளைப் பெற்று அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் அம்பேத்கர் தனது மேல் படிப்புகளைத் தொடர்ந்தார். 'பார் அட் லா’ பட்டமும் பெற்று இந்தியா திரும்பினார். அந்தச் சமயத்தில், இந்தியாவில் சுதந்திரப் போர் வெகு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்கள் விடுதலை பெறுவது எத்தனை முக்கியமோ, அதேபோல இந்தியாவில் இருக்கும் சாதி வேறுபாடுகளைக் களைவதும் முக்கியம் என்ற கொள்கையுடன் செயல்பட்டார் அம்பேத்கர்.
இவருடைய போராட்டங்களால் காந்திஜியின் பெயரைப் போலவே, இவரது பெயரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பேசப்பட்டது. லண்டனில் 1930ல் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் காந்திஜியுடன் இவரும் கலந்துகொண்டார். நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, இந்தியா விடுதலை பெற்றது. நமக்கான சட்டங்களை நாமே வடிவமைத்துக் கொள்வது என்று நேருஜியின் தலைமையிலான அரசாங்கம் முடிவு செய்தது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க, சரியான நபர் அம்பேத்கர்தான் என முடிவுசெய்தனர். தன்னுடைய பொறுப்பை உணர்ந்து, அதற்கேற்ப நமது அரசியலமைப்புச் சட்டத்தை சிறப்பாக உருவாக்கித் தந்தார் அம்பேத்கர். அதேபோல பூனா ஒப்பந்தத்தின் மூலம் தேர்தலில் 'தனித் தொகுதி’ முறையைக் கொண்டுவந்தார். இதன் மூலம், தாழ்ந்த இனத்தவரின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என நம்பினார்.
வாழ்நாள் முழுவதும் தன் இன மேன்மைக்காகப் போராடியதும்... எந்த ஓர் இன்னலையும் பொருட்படுத்தாமல், மற்றவர்களின் உதவியைப் பெற்றாவது கல்வி கற்க வேண்டும். கல்விதான் ஒருவனை நல்ல நிலைக்குக் கொண்டு செல்லும் என்ற உறுதியுடன் போராடி கல்வி கற்றவர்.
0 comments:
Post a Comment