Wednesday, 29 June 2011

Aung San Suu Kyi ஆங் சான் சூ கி.!!!



 அந்த சிறுமியின் அப்பா பர்மிய விடுதலைப் போராட்ட வீரர். அவர், தன் நாட்டில் மக்கள் புரட்சியை ஏற்படுத்தி, நாட்டின் விடுதலைக்கு வழிவகுத்தார். சில சதிகாரர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். அவரது போராட்டத்தை அவருடைய மனைவி தொடர்ந்தார். தன் கணவரின் போராட்டப் பாதையைத் தனதாக்கி மக்களுக்கு வழிகாட்டினார். அவர் அங்கிருந்தால் தங்கள் பதவிக்கு ஆபத்து வரும் என்று எண்ணி, ஆட்சியாளர்கள்  இந்திய நாட்டுக்கான பர்மியத் தூதராக அவரை அனுப்பிவிட்டனர். அவருடைய குட்டிப் பெண்ணும் அவருடன் டெல்லிக்கு வந்தார்.
டெல்லியில் பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்திய அந்த குட்டிப் பெண், நூலகத்தில் எதிர்பாராமல் கிடைத்த காந்தியடிகளின் நூல்களை விரும்பிப் படித்தாள். அவருடைய எழுத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டாள். அது மட்டுமல்லாமல் தான் இனி காந்திய நெறிகளைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். அப்போது, தான் பல வருடங்கள் மக்களுக்காக போராட வேண்டி இருக்கும். அதனால் சிறையில் வாட வேண்டி இருக்கும். அந்த சந்தர்ப்பத்திலும் காந்தியத்தை  தான் உயர்த்திப் பிடிப்போம்... அந்த காந்திய வழிப் போராட்டத்தாலேயே விடுதலை ஆவோம்... என்றெல்லாம் அவள் நினைத்திருக்கவே மாட்டாள்!
ஆம் சுட்டீஸ்! ஒன்றல்ல, ரெண்டல்ல... இருபது ஆண்டுகளுக்கும் மேல் மியன்மாரில் (பர்மா என்பது பழைய பெயர்) வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூ கி. சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவரை டா சூ கி என்றழைக்கிறார்கள். டா என்றால், பர்மிய மொழியில் மிக்க மரியாதைக்குரியவர் என்று பொருள். நிஜமாகவே இந்த பட்டத்துக்கு முழுவதும் தகுதியானவர்தான் நமது சூ கி.

சூ கி, தன் அம்மாவுடன் டெல்லியில் படிக்க வந்த நாள் முதல் காந்திய சிந்தனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று, ஐ.நா.சபையின் உதவிச் செயலர் பணியில் அமர்ந்தார். அமைதியுடன் தன் கணவர் ஏரிஸ் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

தன் தந்தையும் தாயும் மக்களுக்காகப் போராடியதையும், இன்னும் அங்கு மக்கள் ராணுவ ஆட்சியால் துன்பப்படுவதையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் தாயகத்துக்குத் திரும்பினார்.

அந்த சமயத்தில் மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, போராட்டங் களை நடத்தி வந்தனர். அதை ஒடுக்க ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கையால், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இறந்தனர். அவர்களை நினைவு கூறும் விதமாக 1988 ஜூலை 19 அன்று பெரும் போராட்டத்துக்கு  சூ கி அறைகூவல் விடுத்திருந்தார். ஆட்சியாளர்களோ... போராட்டம் நடக்க விடாமல் தடுத்ததோடு, அதற்கடுத்த நாளே அவரை வீட்டுக் காவலில் வைத்தனர். இப்படித் தொடங்கிய அவரது வீட்டுச் சிறைவாசம், விட்டு விட்டுத் தொடர்ந்தது இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது.
சிறையில் அடைக்கப்பட்ட, தன்னுடன் போராடிய இயக்கத்தவர்கள் அனைவரையும் சமமாக நடத்தவேண்டும் என வீட்டுச் சிறையிலேயே உண்ணாவிரதமும் இருந்தார்.

ஆட்சியாளர்களின் மீது வெளிநாடுகளும் ஐநா சபையும் கொடுத்த நெருக்குதலால், சூ கி யை விடுதலை செய்தது. அதன் பின்னர் இவரை நாடு கடத்த அரசாங்கம் முடிவு செய்தது. தேர்தல் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக ஆட்சியை அமைப்பது என்றால், தன் போராட்டங்களைக் கைவிடத் தயார் என்று சூ கி அறிவித்தார். வேறு வழி இல்லாத ராணுவ ஆட்சியாளர்களும் தேர்தலை நடத்தினர். அத்தேர்தலில் சூ கி கட்சியினர் மிகப் பெரும்பான் மையான இடங்களைக் கைப்பற்றினர்.

ஆனால், அவர்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்புத் தராமல், மீண்டும் ராணுவ ஆட்சியே தொடர்ந்தது. உலக நாடுகள் மற்றும் ஐ.நா.சபையின் வேண்டுகோளைக் கூட புறக்கணித்தனர் ஆட்சியாளர்கள். 1991-ஆம் ஆண்டு நோபல் பரிசுக் கமிட்டி அமைதிக்கான நோபல் பரிசை சூ கி-க்கு வழங்கியது. சூ கியின் சார்பில் அவருடைய குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள்.

எந்த சமயத்திலும் எதற்காகவும் தான் நேசித்த மக்களையும் நாட்டையும் விட்டு வெளிவர சூ கி விரும்பவில்லை. காந்திய வழியிலான போராட்டத் தையும் கைவிட வில்லை.
சூ கி-யின் போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக... இந்திய அரசும் பெருமை மிகுந்த ஜவஹர்லால் நேரு விருதினை 1992-ல்  அளித்தது.அவரைராணுவ ஆட்சியாளர்கள் வீட்டுக் காவலில் வைப்பதும் வெளியே விடுவதுமாக... பல முறை அவரது மன உறுதியைக் குலைக்க முயற்சித்தனர்.  அவரைப் பார்க்க எந்த பார்வையாளருக்கும் அனுமதி கிடையாது. தொலைபேசியில் பேச முடியாது. செய்திகளும் தெரிந்துகொள்ள முடியாது. ஒரு சமயம் சுனாமி பேரலையால் அவர் இருந்த வீட்டின் கூரை உடைந்து நொறுங்கிவிட்டது, மின்சாரமும் இல்லை. இப்படிப்பட்ட கடுமையான வீட்டுக் காவலில் இருந்தபடி அகிம்சை முறையில் போராடி வந்த அவரை, தற்போதுதான் மியன்மார் அரசு விடுதலை செய்திருக்கிறது. சூ கி, தனது மக்களையும் ஆதரவாளர் களையும் சந்தித்து, மக்களுக் கான தனது போராட்டத்தை முன்னெடுக்க உள்ளார். அவர், சிறுவயதில் படித்த காந்திய சிந்தனைகளே அவரை உலகம் போற்றும் போராளி யாக இன்று நம் முன்நிறுத்தி இருக்கிறது. ஆகவே, நாம் புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது அவற்றின் மூலம் நமக்குக் கிடைக்கும் நல் எண்ணங்களைச் செயல் படுத்து வதிலும் உறுதியுடன் இருக்க வேண்டும்.

0 comments:

Post a Comment