''நானும் விகடனும்!''
பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!
அப்போது நாட்டரசன்கோட்டை என்கிற சிற்றூரில் அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்களாக இருந்தார்கள். வெளியூரில் பத்தாவது வரை படித்துவிட்டு, கோடை விடுமுறைக்கு நாட்டரசன்கோட்டை வந்தேன். அப்போது பாலிடெக்னிக்கில் படிக்க விரும்பினேன். அஞ்சலகம் ஊரின் இன்னொரு மூலையில் இருந்தது. தபால்காரர் வரும் வரையில் காத்திருக்க முடியாது. கட்டு பிரிக்கும்போதே விண்ணப்பத்தை வாங்க வேண்டும் என்பதற்காக, காலையில் 10 மணிக்கே அஞ்சலகம் சென்று காத்துஇருந்தேன். 10 மணிக் கட்டில் தபால் இல்லை. அடுத்த கட்டு சிவகங்கையில் இருந்து வரும் 12 மணி பஸ்ஸில் வரும். இடையில் இரண்டு மணி நேரம் என்ன செய்வது?
நாயம்மா குளக்கரையில் காத்திருக்கலாம். அந்த எரிக்கும் வெயிலில் மனித நடமாட்டமே இருக்காது. வழக்கு மொழியில் சொல்வது என்றால், ஒரு சுடுகுஞ்சுகூட இருக்காது. அப்போதுதான் எதிரில் 'பாரதி வாசக சாலை’ என்று நீலப் பின்னணியில் வெள்ளை எழுத்துகள் அச்சடிக்கப்பட்ட பலகை இருந்தது. அந்த சுற்றுச்சுவரின் மூலையில் முதல் மாடியில் ஓடுகள் வேயப்பட்ட அந்த வாசக சாலை இருந்தது.
படிகளில் ஏறி மாடிக்கு வந்தேன். உள்ளே ஒரு பெரியவர் மட்டும் ஏதோ படித்துக்கொண்டு இருந்தார். சுவரின் இரு பக்கமும் தரையில் உட்காரும் வகையில் பந்திப் பாய் விரித்து, அதன் மேல் புத்தகங் கள் வைக்கப்பட்டு இருந்தன. அவை காற்றில் பறந்துவிடாமல் இருக்க, அதன் மேல் மரத் துண்டுகள். உள்ளே நுழைந்தேன். மரத் துண்டுகளை மீறி பத்திரிகையின் நுனி காற்றில் படபடத்துக்கொண்டு இருந் தது. எடுத்துப் பார்த்தேன். ஓர் ஆன்மிக மலர். நகர்ந்து உட்கார்ந்து, அடுத்த இதழை எடுத்தேன். கொம்புவைத்த தாத்தா 10 வருடங்களுக்குப் பிறகு என்னைப் பார்த்தார். அதே பழகிய சிரிப்பு!
அந்த வயதில் திரும்பவும் அறிமுகமான விகடனில் எனக்குப் பிடித்தவை எல்லாம் நகைச்சுவைத் துணுக்குகள். விண்ணப்பம் வந்து காரைக்குடி கல்லூரியில் சேர்ந்தேன். விடுதியில் 'அருவை தங்கராஜ்’ என்ற நண்பன் இருந்தான். வருகிற வாரப் பத்திரிகைகள் எல்லாம் வாங்கி, வாசகர் கடிதம் எழுதுவான். அவன் அறைக்குப் போனால், எல்லா இதழ்களும் படிக்கலாம். பக்கத்து அறையில் செல்வ பாண்டியன் என்ற நண்பன் இருந்தான். விகடனில் மணியம் செல்வன் வரைகிற பெண்களை அப்படியே வரைந்து காட்டுவான். எனக்கும் வரையத் தெரியும் என்பதால், நானும் அவனும் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்தோம். விகடன்தான் மாதிரி.
அந்தப் பருவத்தில் விகடனின் சினிமா விமர்சனம் பிடிக்கும். காரைக்குடியில் ஒரு படம் வெளியாகிற அன்றே பார்த்துவிட்டு, அதன் குறை, நிறைகளை யோசித்து மனதுக்குள் மதிப்பெண் போட்டு விகடன் விமர்சனம் வந்ததும் அதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது ஓர் இனிமையான பயிற்சியாக இருந்தது. அப்போது விகடன் மாணவர் நிருபர் திட்டத்துக்கு விண்ணப்பித்தேன். ஆனால், கிடைக்கவில்லை.
கல்லூரி முடிந்து திரும்பவும் நாட்டரசன்கோட்டை. அப்போது எங்கள் வீட்டுக்கு அருகிலேயே செங்கமலத்தான் தெருவில் நூலகம் இருந்தது. 8 மணிக்கு நூலகம் திறக்கும். வெள்ளிக்கிழமை ஆனதும் திறக்கும்போதே நுழைந்தால்தான், விகடன் கிடைக்கும். கொஞ்சம் தாமதமாக உள்ளே நுழைந்தால், அவ்வளவுதான். சன்னமாக பழைய தமிழ்ப் பாடல்களை விசிலடித்துக்கொண்டே கையைப் பின்னால் கட்டிக்கொண்டு இங்கும் அங்கும் நடக்கிற நூலகர், 'என்ன தம்பி விகடனா?மதியம்தான்!’ என்று நக்கலாகச் சிரிப்பார். பார்த்தால், ஆம்பிளைச் சட்டை போட்டு நீளப் பாவாடை அணிந்த என் வயதுப் பெண் ஒருத்தி, வரிவிடாமல் விகடன் படித்துக்கொண்டு இருப்பாள். இடையிடையே முகட்டைப் பார்த்து யோசிப்பாள். திரும்பவும் படிப்பாள். நகம் கடிப்பாள். அவள் படித்து முடித்ததும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் வருவார்கள். வணக்கம் சொல்லி விடைபெற்று, மறு நாள் தான் விகடன் படிக்க முடியும்.
ஒவ்வொரு வாரமும் நான் தோற்றுக்கொண்டே இருந்தேன். ஒருநாள் நான் முன்பே சென்று விகடனைக் கைப்பற்றினேன். அந்தப் பெண் வந்தாள். அவசர மாகக் கையெழுத்தைக் கிறுக்கி விட்டு, பத்திரிகைகள் கிடைக் கும் மேசைக்கு வந்து வேகமாகத் தேடினாள். நான் விகடனை நடு மேசையில் ஒரு செய்தித்தாளை வைத்து மூடி வைத்து இருந்தேன். அவள் பரபரப்பாகத் தேடுகிற கணத்தில், செய்தித்தாளை எடுத்தேன். பார்த்ததும் பாய்ந்து அவள் எடுக்க, நானும் எடுக்க, இருவர் கையிலும் விகடன். அவள் முகத்தில் அப்படி ஒரு கோபம். நான் விட்டுக்கொடுத்தேன். அவள் முகத்தில் இருந்த மொத்தக் கோபமும் புன்னகையாக மாறிய தருணம். தம்...தன...னம்...தன...
வேலைக்குப் போக விரும்பாமல், கவிதைகள், கதைகள் எழுதத் துவங்கி இருந்தேன். விடாமல் சினிமா பார்த்துக்கொண்டு இருந்தேன். விகடனுக்கு அனுப்பிய எதுவும் பிரசுரமாகவில்லை. எல்லாம் 'ஏ...பெண்ணே...’ அல்லது. 'ஓ... நிலவே...’ என்று மூன்று புள்ளிகள் கண்டிப்பாக இருக்கும் புதுக் கவிதைகள். செட்டிநாட்டில் மணமக்களை வாழ்த்திக் கவிதை எழுதி, அதை அச்சிட்டு திருமண வீட்டில் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. அதற்கு கலி விருத்தம், ஆசிரிய விருத்தம் எல்லாம் எழுதித் தருவேன். 'வாழ்த்துப்பா ஆக்கம்’ என்று பெயர் போட்டு, 1,000 பிரதிகள் அச்சிடுவார்கள். அச்சில் என் பெயரைப் பார்க்க அது ஒன்றுதான் வாய்ப்பு. ஒருமுறை நானும் அம்மாவும் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தோம். அருகில் வந்த பெண், 'டீச்சர்... மூத்தவன்தானே. எங்க வேலை பாக்குறான்?’ உடனே அருகில் இருந்த பெரியவர், 'இவனா? கவிதை எழுதுறான்... ஹஹ்...’ என்று சிரித்தார். அன்று வீடு திரும்பும் வரை அம்மா பேசவே இல்லை. இரவு சாப்பிட்ட பிறகு, 'அம்மா சொல்றேன்னு கோபப்படாத... இதெல்லாம் வேலைக்குப் போயிட்டே செய்யலாமேப்பா’ என்று சொல்கையில், அம்மா வின் கண்கள் கலங்கி இருந்தன. ஒரு முறை விகடனில் பெயர் வந்தால், எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பினேன்.
இதற்கிடையில் 'அன்னம்’ கதிரின் நட்பினால், தீவிர இலக்கியம், கோணங்கி கொண்டுவந்த 'பதேர் பாஞ்சாலி’, மதுரை நண்பர்கள் திரையிட்ட 'பை சைக்கிள் தீவ்ஸ்’, தூர்தர்ஷனில் மதிய நேரத்தில் வருகிற விருதுப் படங்கள் பார்க்கத் துவங்கி இருந்தேன். வாய்ப்பு தேடி சென்னை வந்த நாட்களில் ஃபிலிம் சேம்பரில் நல்ல படங்கள் பார்த்துக்கொண்டு இருந்தேன். சிறு பத்திரிகைகளில் எழுதத் துவங்கி இருந்தேன். எனது ஆசிரியர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளனாகச் சேர்ந்தேன்.
அப்போது என்னைப் பார்க்க வந்த பழைய நண்பர் ஒருவர், 'என்னடா கதையெல்லாம் எழுதுறியாம்... சொல்றாய்ங்க... எதுல எழுதுற?’ என்றார். 'சிறுபத்திரிகையில...’ என்றதும் சிரித்தார். 'அது நம்ம ஊர் பஸ் ஸ்டாண்டுல கெடைக்குமா?’, 'இல்ல’, 'பின்ன... நீயே எழுதி, நீயே படிப்பியா? விகடன் மாதிரி பெரிய பத்திரிகைல எழுதுடா...’ என்றார்.
எழுதலாம் என உத்தேசித்து, ஒரு கதை எழுதி அனுப்பினேன். அப்போது எனது திருமணம் நிச்சயமான சமயம். கதை பிரசுரத்துக்குத் தேர்வானதாகக் கடிதம் வந்தது. வருங்கால மனைவி பிரேமாவிடம் பெருமையாகச் சொன்னேன். 'எப்ப வரும்?’ 'சீக்கிரம் வந்திரும்...’ பிரேமா அன்று முதல் தொடர்ச்சியாக விகடன் வாங்கி, 'அவரே எழுதுன கதை விகடன்ல வருதாம்...’ என்று எல்லோரிடமும் பெருமை பேசி, கதை பிரசுரமானபோது... எங்கள் பையனுக்கு ஒரு வயது.
பி.சி.ஸ்ரீராம் சாரிடம் உதவியாளனாக இருக்கும்போது அவருக்குக் கடிதங்கள் எழுதி இருக்கிறேன். ஆனால், பத்திரிகைகளில் எழுதுகிற விஷயம் அவருக்குத் தெரியாது. அப்போது நண்பர் அருள் எழிலன் 'விகடன் காதல் சிறப்பிதழ்’க்காக என்னிடம் சிறுசிறு கவிதைகள் கேட்டார். கொடுத்தேன். அடுத்த வாரமே விகடனில் வந்தது. அந்தக் கவிதைகளை இதழ் முழுக்கப் போட்டு கடைசிப் பக்கத்தில்தான், எழுதிய என் பெயர் இருந்தது. அன்று அலுவலகம் போனதும் பி.சி. சார் என்னை அழைத்து 'விகடன் பார்த்தேன்... கவிதையில நல்ல விஷ§வல் சென்ஸ் இருக்கே. யாரு எழுதி இருப்பா... நீயா இருக்கும்னு நினைச்சேன்.. பார்த்தா, நீயேதான்’ என்றார். 'எழுத்தோட வலிமையை ஃபிரேம்ல கொண்டு வர்றதுதான் சவால்... அது... உன்னால முடியும்’ என்றார். பெருமையாக இருந்தது.
எனது சிறுகதைக்கு 'கதா’ விருது வாங்கியதும் இரண்டு பக்கங்களில் எனது படத்துடன் செய்தி விகடனில் வந்தது. பிறகு, விகடனின் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் அவர் களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் ஆவணப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பு தற்செயலாக அமைந்தது. அதற்காக மும்பை சென்று இருந்தோம். இயக்குநர் ராமனந்த சாகர், நடிகர் அசோக் குமார் இருவரும் 'விகடன்’ என்று சொன் னதும் எழுந்து நின்று எங்களை வணங்கி மரியாதை செய்தது மறக்க முடியாத அனுபவம். விகடன் ஒரு மாபெரும் நிறுவனமாக வளர்ந்ததையும், 'பாஸ்’ என்று எல்லோரும் அழைக்கிற திரு.வாசன் அவர்களின் ஆளுமையையும் உடன் இருந்து பணிபுரிந்த அவர்கள் சொல்கையில் பிரமிப்பாக இருந்தது.
அவ்வளவு பெருமைக்குரிய விகடனில் இருந்து ஒருநாள் ரா.கண்ணன் அழைத்தார். ஒரு காதல் கவிதைத் தொடர் எழுதும்படி கேட்டார். 'சினிமாவைப் பற்றி எதாவது எழுதலாமே’ என்றேன். 'இதையே சினிமாவை மாதிரி எழுதுங்க பாஸ்’ என்றார். அதாவது, 'எழுதும் விஷயத்துக்குப் படமும் நீங்களே எடுக்க வேண்டும்’ என்றார். இந்த சுவாரஸ்யமான சவால்தான் வெற்றிகரமான 'வந்த நாள் முதல்...’ தொடராக வந்தது. நான் சொன்னதை நினைவில்வைத்து, தொடர்ந்து திரும்பவும் கண்ணன் அழைத்தார். நான் நேசிக்கிற உலகத்தின் சிறந்த திரைப்படங்களைப் பற்றி எழுதும் வாய்ப்பு வந்தது.
'உலக சினிமா’ தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் வெளியானது. ஒரு திரைப்படக் கல்லூரி தர முடியாத மிகத் தீவிரமான பயிற்சியை இந்தத் தொடர் மூலம் விகடன் எனக்கு வழங்கியது. இன்றைக்குக் கிராமங்களில் இருக்கிறவர்களுக்குக்கூட உலக சினிமா அறிமுகமாகி இருக்கிறது. நல்ல சினிமாவை அறிமுகப்படுத்துவதன் வழியாக திரைப்பட ரசனையில் முக்கிய மான மாற்றத்தினை இந்தத் தொடர் மூலம் விகடன் நிகழ்த்தியது. அத்தகைய முயற்சியில் நானும் இருந்திருக்கிறேன் என்பதே பெருமை. ஒரு முறை எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உலக சினிமாபற்றி என்னிடம் சொல்கையில், 'நிலைகுத்தி இருந்த தேரை ஒத்த ஆளா கட்டி இழுத்திட்டியே...’ என்றார். அதற்கு விகடன் தந்த சுதந்திரம்தான் முக்கியமானது.
இதுபோல எந்தப் பின்னணியும் இல்லாமல், சென்னை வந்த என்னைப் போல பல இளைஞர்களின் தகுதியையும் திறமையையும் சரியாகக் கணித்து, வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதுதான் இன்றைக்கும் விகடனின் சிறப்பாக இருக்கிறது. இப்போதும் ஒளிப்பதிவாளராக நான் பணிபுரிகிற படங்களின் விமர்சனம் வரும்போது, விகடன் என்ன எழுதும் என்று ஆர்வமாகக் காத்திருப்பேன். எப்போதும் அண்ணா சாலையில் விகடன் அலுவலகத்தைக் கடந்து செல்கையில், சொந்த வீட்டைக் கடந்து செல்கிற உணர்வே எனக்குள் ஏற்படுகிறது.
ஒரு திரைப்பட மாணவனாக விகடனிடம் இருந்து எப்போதும் நான் கற்றுக் கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு தரமான வணிகத் திரைப்படம்போல எல்லோரையும் கவர்ந்திழுக்கிற தன்மை விகடனிடம் இருக்கிறது. ஈழப் பிரச்னை குறித்த கட்டுரை கண் கலங்கவைக்கும்; ஒரு சிறுகதை ஈர்க்கும். ஒரு துணுக்கு சிரிக்கவைக்கும். ஒரு திரைப்படத்தின் எடிட்டிங் உத்திபோல சுவாரஸ்யம் குறையாமல் எல்லாப் பக்கங்களையும் படிக்கவைக்கிற, கடைசிப் பக்கத்தில் இருந்து புரட்டினாலும் சுவாரஸ்யம் குறையாத தந்திரம் எது என்று தேடிக்கொண்டே இருக்கிறேன்.
சென்ற வருடம் புத்தகக் காட்சிக்கு நானும் எனது மகன் சிபி நந்தனும் சென்றிருந்தோம். இரண்டாவது படிக்கும் அவனுக்கு தமிழ் வாசிக்க நான் கற்றுக் கொடுத்த சமயம் அது. புத்தகக் காட்சியில் என்னைப் பார்த்ததும் சிலர் கை கொடுத் தார்கள். ஒரு கல்லூரி மாணவி ஓடி வந்து உலக சினிமா புத்தகத்தில் கையெழுத்து வாங்கினார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சிபிக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. 'அடப்பாவி... நீ வி.ஐ.பி. ஆயிட்டியா... எப்டி?’ என்று கேட்டான். சிரித்துக்கொண்டே, நான் விகடன் ஸ்டாலைக் காட்டினேன்.
'வி...க...டா... ஆ...இன்... விக...டான்...’
'டான் இல்லப்பா... டன்...’
'அப்பா... அது ஏன் அந்த தாத்தாவுக்கு கொம்பு இருக்கு?’
விகடனின் வசீகரம் தலைமுறை கடந்தும் தொடர்கிறது. தொடரும்!''