Friday, 1 July 2011

ஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி!!!

''நானும் விகடனும்!''
பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!


''முதன்முதலில் விகடனை நான் அம்மாவின் கைப்பையில் பார்த்தேன் என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு ஆறு, ஏழு வயது இருக்கும். ஆ..ன...ந்...த வி...க...ட...ன் என்ற எழுத்துக்களுக்கு அருகில் தலையில் கொம்புடன் சிரிக்கிற அந்த விகடன் தாத்தா படத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஆச்சர்யம். அந்த வயதில் விநோதமாகத் தெரிந்த 'விகடன்’ என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாது. தாத்தாவுக்கு ஏன் கொம்பு என்பதும் புரிய வில்லை. ஆனால், பிடித்திருந்தது.
அப்போது நாட்டரசன்கோட்டை என்கிற சிற்றூரில் அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்களாக இருந்தார்கள். வெளியூரில் பத்தாவது வரை படித்துவிட்டு, கோடை விடுமுறைக்கு நாட்டரசன்கோட்டை வந்தேன். அப்போது பாலிடெக்னிக்கில் படிக்க விரும்பினேன். அஞ்சலகம் ஊரின் இன்னொரு மூலையில் இருந்தது. தபால்காரர் வரும் வரையில் காத்திருக்க முடியாது. கட்டு பிரிக்கும்போதே விண்ணப்பத்தை வாங்க வேண்டும் என்பதற்காக, காலையில் 10 மணிக்கே அஞ்சலகம் சென்று காத்துஇருந்தேன். 10 மணிக் கட்டில் தபால் இல்லை. அடுத்த கட்டு சிவகங்கையில் இருந்து வரும் 12 மணி பஸ்ஸில் வரும். இடையில் இரண்டு மணி நேரம் என்ன செய்வது?
நாயம்மா குளக்கரையில் காத்திருக்கலாம். அந்த எரிக்கும் வெயிலில் மனித நடமாட்டமே இருக்காது. வழக்கு மொழியில் சொல்வது என்றால், ஒரு சுடுகுஞ்சுகூட இருக்காது. அப்போதுதான் எதிரில் 'பாரதி வாசக சாலை’ என்று நீலப் பின்னணியில் வெள்ளை எழுத்துகள் அச்சடிக்கப்பட்ட பலகை இருந்தது. அந்த சுற்றுச்சுவரின் மூலையில் முதல் மாடியில் ஓடுகள் வேயப்பட்ட அந்த வாசக சாலை இருந்தது.
படிகளில் ஏறி மாடிக்கு வந்தேன். உள்ளே ஒரு பெரியவர் மட்டும் ஏதோ படித்துக்கொண்டு இருந்தார். சுவரின் இரு பக்கமும் தரையில் உட்காரும் வகையில் பந்திப் பாய் விரித்து, அதன் மேல் புத்தகங் கள் வைக்கப்பட்டு இருந்தன. அவை காற்றில் பறந்துவிடாமல் இருக்க, அதன் மேல் மரத் துண்டுகள். உள்ளே நுழைந்தேன். மரத் துண்டுகளை மீறி பத்திரிகையின் நுனி காற்றில் படபடத்துக்கொண்டு இருந் தது. எடுத்துப் பார்த்தேன். ஓர் ஆன்மிக மலர். நகர்ந்து உட்கார்ந்து, அடுத்த இதழை எடுத்தேன். கொம்புவைத்த தாத்தா 10 வருடங்களுக்குப் பிறகு என்னைப் பார்த்தார். அதே பழகிய சிரிப்பு!
அந்த வயதில் திரும்பவும் அறிமுகமான விகடனில் எனக்குப் பிடித்தவை எல்லாம் நகைச்சுவைத் துணுக்குகள். விண்ணப்பம் வந்து காரைக்குடி கல்லூரியில் சேர்ந்தேன். விடுதியில் 'அருவை தங்கராஜ்’ என்ற நண்பன் இருந்தான். வருகிற வாரப் பத்திரிகைகள் எல்லாம் வாங்கி, வாசகர் கடிதம் எழுதுவான். அவன் அறைக்குப் போனால், எல்லா இதழ்களும் படிக்கலாம். பக்கத்து அறையில் செல்வ பாண்டியன் என்ற நண்பன் இருந்தான். விகடனில் மணியம் செல்வன் வரைகிற பெண்களை அப்படியே வரைந்து காட்டுவான். எனக்கும் வரையத் தெரியும் என்பதால், நானும் அவனும் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்தோம். விகடன்தான் மாதிரி.
அந்தப் பருவத்தில் விகடனின் சினிமா விமர்சனம் பிடிக்கும். காரைக்குடியில் ஒரு படம் வெளியாகிற அன்றே பார்த்துவிட்டு, அதன் குறை, நிறைகளை யோசித்து மனதுக்குள் மதிப்பெண் போட்டு விகடன் விமர்சனம் வந்ததும் அதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது ஓர் இனிமையான பயிற்சியாக இருந்தது. அப்போது விகடன் மாணவர் நிருபர் திட்டத்துக்கு விண்ணப்பித்தேன். ஆனால், கிடைக்கவில்லை.
கல்லூரி முடிந்து திரும்பவும் நாட்டரசன்கோட்டை. அப்போது எங்கள் வீட்டுக்கு அருகிலேயே செங்கமலத்தான் தெருவில் நூலகம் இருந்தது. 8 மணிக்கு நூலகம் திறக்கும். வெள்ளிக்கிழமை ஆனதும் திறக்கும்போதே நுழைந்தால்தான், விகடன் கிடைக்கும். கொஞ்சம் தாமதமாக உள்ளே நுழைந்தால், அவ்வளவுதான். சன்னமாக பழைய தமிழ்ப் பாடல்களை விசிலடித்துக்கொண்டே கையைப் பின்னால் கட்டிக்கொண்டு இங்கும் அங்கும் நடக்கிற நூலகர், 'என்ன தம்பி விகடனா?மதியம்தான்!’ என்று நக்கலாகச் சிரிப்பார். பார்த்தால், ஆம்பிளைச் சட்டை போட்டு நீளப் பாவாடை அணிந்த என் வயதுப் பெண் ஒருத்தி, வரிவிடாமல் விகடன் படித்துக்கொண்டு இருப்பாள். இடையிடையே முகட்டைப் பார்த்து யோசிப்பாள். திரும்பவும் படிப்பாள். நகம் கடிப்பாள். அவள் படித்து முடித்ததும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் வருவார்கள். வணக்கம் சொல்லி விடைபெற்று, மறு நாள் தான் விகடன் படிக்க முடியும்.
ஒவ்வொரு வாரமும் நான் தோற்றுக்கொண்டே இருந்தேன். ஒருநாள் நான் முன்பே சென்று விகடனைக் கைப்பற்றினேன். அந்தப் பெண் வந்தாள். அவசர மாகக் கையெழுத்தைக் கிறுக்கி விட்டு, பத்திரிகைகள் கிடைக் கும் மேசைக்கு வந்து வேகமாகத் தேடினாள். நான் விகடனை நடு மேசையில் ஒரு செய்தித்தாளை வைத்து மூடி வைத்து இருந்தேன். அவள் பரபரப்பாகத் தேடுகிற கணத்தில், செய்தித்தாளை எடுத்தேன். பார்த்ததும் பாய்ந்து அவள் எடுக்க, நானும் எடுக்க, இருவர் கையிலும் விகடன். அவள் முகத்தில் அப்படி ஒரு கோபம். நான் விட்டுக்கொடுத்தேன். அவள் முகத்தில் இருந்த மொத்தக் கோபமும் புன்னகையாக மாறிய தருணம். தம்...தன...னம்...தன...
வேலைக்குப் போக விரும்பாமல், கவிதைகள், கதைகள் எழுதத் துவங்கி இருந்தேன். விடாமல் சினிமா பார்த்துக்கொண்டு இருந்தேன். விகடனுக்கு அனுப்பிய எதுவும் பிரசுரமாகவில்லை. எல்லாம் 'ஏ...பெண்ணே...’ அல்லது. 'ஓ... நிலவே...’ என்று மூன்று புள்ளிகள் கண்டிப்பாக இருக்கும் புதுக் கவிதைகள். செட்டிநாட்டில் மணமக்களை வாழ்த்திக் கவிதை எழுதி, அதை அச்சிட்டு திருமண வீட்டில் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. அதற்கு கலி விருத்தம், ஆசிரிய விருத்தம் எல்லாம் எழுதித் தருவேன். 'வாழ்த்துப்பா ஆக்கம்’ என்று பெயர் போட்டு, 1,000 பிரதிகள் அச்சிடுவார்கள். அச்சில் என் பெயரைப் பார்க்க அது ஒன்றுதான் வாய்ப்பு. ஒருமுறை நானும் அம்மாவும் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தோம். அருகில் வந்த பெண், 'டீச்சர்... மூத்தவன்தானே. எங்க வேலை பாக்குறான்?’ உடனே அருகில் இருந்த பெரியவர், 'இவனா? கவிதை எழுதுறான்... ஹஹ்...’ என்று சிரித்தார். அன்று வீடு திரும்பும் வரை அம்மா பேசவே இல்லை. இரவு சாப்பிட்ட பிறகு, 'அம்மா சொல்றேன்னு கோபப்படாத... இதெல்லாம் வேலைக்குப் போயிட்டே செய்யலாமேப்பா’ என்று சொல்கையில், அம்மா வின் கண்கள் கலங்கி இருந்தன. ஒரு முறை விகடனில் பெயர் வந்தால், எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பினேன்.
இதற்கிடையில் 'அன்னம்’ கதிரின் நட்பினால், தீவிர இலக்கியம், கோணங்கி கொண்டுவந்த 'பதேர் பாஞ்சாலி’, மதுரை நண்பர்கள் திரையிட்ட 'பை சைக்கிள் தீவ்ஸ்’, தூர்தர்ஷனில் மதிய நேரத்தில் வருகிற விருதுப் படங்கள் பார்க்கத் துவங்கி இருந்தேன். வாய்ப்பு தேடி சென்னை வந்த நாட்களில் ஃபிலிம் சேம்பரில் நல்ல படங்கள் பார்த்துக்கொண்டு இருந்தேன். சிறு பத்திரிகைகளில் எழுதத் துவங்கி இருந்தேன். எனது ஆசிரியர் பி.சி.ஸ்ரீராமிடம்  உதவியாளனாகச் சேர்ந்தேன்.
அப்போது என்னைப் பார்க்க வந்த பழைய நண்பர் ஒருவர், 'என்னடா கதையெல்லாம் எழுதுறியாம்... சொல்றாய்ங்க... எதுல எழுதுற?’ என்றார். 'சிறுபத்திரிகையில...’ என்றதும் சிரித்தார். 'அது நம்ம ஊர் பஸ் ஸ்டாண்டுல கெடைக்குமா?’, 'இல்ல’, 'பின்ன... நீயே எழுதி, நீயே படிப்பியா? விகடன் மாதிரி பெரிய பத்திரிகைல எழுதுடா...’ என்றார்.
எழுதலாம் என உத்தேசித்து, ஒரு கதை எழுதி அனுப்பினேன். அப்போது எனது திருமணம் நிச்சயமான சமயம். கதை பிரசுரத்துக்குத் தேர்வானதாகக் கடிதம் வந்தது. வருங்கால மனைவி பிரேமாவிடம் பெருமையாகச் சொன்னேன். 'எப்ப வரும்?’ 'சீக்கிரம் வந்திரும்...’ பிரேமா அன்று முதல் தொடர்ச்சியாக விகடன் வாங்கி, 'அவரே எழுதுன கதை விகடன்ல வருதாம்...’ என்று எல்லோரிடமும் பெருமை பேசி, கதை பிரசுரமானபோது... எங்கள் பையனுக்கு ஒரு வயது.
பி.சி.ஸ்ரீராம் சாரிடம் உதவியாளனாக இருக்கும்போது அவருக்குக் கடிதங்கள் எழுதி இருக்கிறேன். ஆனால், பத்திரிகைகளில் எழுதுகிற விஷயம் அவருக்குத் தெரியாது. அப்போது நண்பர் அருள் எழிலன் 'விகடன் காதல் சிறப்பிதழ்’க்காக என்னிடம் சிறுசிறு கவிதைகள் கேட்டார். கொடுத்தேன். அடுத்த வாரமே விகடனில் வந்தது. அந்தக் கவிதைகளை இதழ் முழுக்கப் போட்டு கடைசிப் பக்கத்தில்தான், எழுதிய என் பெயர் இருந்தது. அன்று அலுவலகம் போனதும் பி.சி. சார் என்னை அழைத்து 'விகடன் பார்த்தேன்... கவிதையில நல்ல விஷ§வல் சென்ஸ் இருக்கே. யாரு எழுதி இருப்பா... நீயா இருக்கும்னு நினைச்சேன்.. பார்த்தா, நீயேதான்’ என்றார். 'எழுத்தோட வலிமையை ஃபிரேம்ல கொண்டு வர்றதுதான் சவால்... அது... உன்னால முடியும்’ என்றார். பெருமையாக இருந்தது.
எனது சிறுகதைக்கு 'கதா’ விருது வாங்கியதும் இரண்டு பக்கங்களில் எனது படத்துடன் செய்தி விகடனில் வந்தது. பிறகு, விகடனின் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் அவர் களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் ஆவணப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பு தற்செயலாக அமைந்தது. அதற்காக மும்பை சென்று இருந்தோம். இயக்குநர் ராமனந்த சாகர், நடிகர் அசோக் குமார் இருவரும் 'விகடன்’ என்று சொன் னதும் எழுந்து நின்று எங்களை வணங்கி மரியாதை செய்தது மறக்க முடியாத அனுபவம். விகடன் ஒரு மாபெரும் நிறுவனமாக வளர்ந்ததையும், 'பாஸ்’ என்று எல்லோரும் அழைக்கிற திரு.வாசன் அவர்களின் ஆளுமையையும் உடன் இருந்து பணிபுரிந்த அவர்கள் சொல்கையில் பிரமிப்பாக இருந்தது.
அவ்வளவு பெருமைக்குரிய விகடனில் இருந்து ஒருநாள் ரா.கண்ணன் அழைத்தார். ஒரு காதல் கவிதைத் தொடர் எழுதும்படி கேட்டார். 'சினிமாவைப் பற்றி எதாவது எழுதலாமே’ என்றேன். 'இதையே சினிமாவை மாதிரி எழுதுங்க பாஸ்’ என்றார். அதாவது, 'எழுதும் விஷயத்துக்குப் படமும் நீங்களே எடுக்க வேண்டும்’ என்றார். இந்த சுவாரஸ்யமான சவால்தான் வெற்றிகரமான 'வந்த நாள் முதல்...’ தொடராக வந்தது. நான் சொன்னதை நினைவில்வைத்து, தொடர்ந்து திரும்பவும் கண்ணன் அழைத்தார். நான் நேசிக்கிற உலகத்தின் சிறந்த திரைப்படங்களைப் பற்றி எழுதும் வாய்ப்பு வந்தது.
'உலக சினிமா’ தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் வெளியானது. ஒரு திரைப்படக் கல்லூரி தர முடியாத மிகத் தீவிரமான பயிற்சியை இந்தத் தொடர் மூலம் விகடன் எனக்கு வழங்கியது. இன்றைக்குக் கிராமங்களில் இருக்கிறவர்களுக்குக்கூட உலக சினிமா அறிமுகமாகி இருக்கிறது. நல்ல சினிமாவை அறிமுகப்படுத்துவதன் வழியாக திரைப்பட ரசனையில் முக்கிய மான மாற்றத்தினை இந்தத் தொடர் மூலம் விகடன் நிகழ்த்தியது. அத்தகைய முயற்சியில் நானும் இருந்திருக்கிறேன் என்பதே பெருமை. ஒரு முறை எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உலக சினிமாபற்றி என்னிடம் சொல்கையில், 'நிலைகுத்தி இருந்த தேரை ஒத்த ஆளா கட்டி இழுத்திட்டியே...’ என்றார். அதற்கு விகடன் தந்த சுதந்திரம்தான் முக்கியமானது.
இதுபோல எந்தப் பின்னணியும் இல்லாமல், சென்னை வந்த என்னைப் போல பல இளைஞர்களின் தகுதியையும் திறமையையும் சரியாகக் கணித்து, வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதுதான் இன்றைக்கும் விகடனின் சிறப்பாக இருக்கிறது. இப்போதும் ஒளிப்பதிவாளராக நான் பணிபுரிகிற படங்களின் விமர்சனம் வரும்போது, விகடன் என்ன எழுதும் என்று ஆர்வமாகக் காத்திருப்பேன். எப்போதும் அண்ணா சாலையில் விகடன் அலுவலகத்தைக் கடந்து செல்கையில்,  சொந்த வீட்டைக் கடந்து செல்கிற உணர்வே எனக்குள் ஏற்படுகிறது.
ஒரு திரைப்பட மாணவனாக விகடனிடம் இருந்து எப்போதும் நான் கற்றுக் கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு தரமான வணிகத் திரைப்படம்போல எல்லோரையும் கவர்ந்திழுக்கிற தன்மை விகடனிடம் இருக்கிறது. ஈழப் பிரச்னை குறித்த கட்டுரை கண் கலங்கவைக்கும்; ஒரு சிறுகதை ஈர்க்கும். ஒரு துணுக்கு சிரிக்கவைக்கும். ஒரு திரைப்படத்தின் எடிட்டிங் உத்திபோல சுவாரஸ்யம் குறையாமல் எல்லாப் பக்கங்களையும் படிக்கவைக்கிற, கடைசிப் பக்கத்தில் இருந்து புரட்டினாலும் சுவாரஸ்யம் குறையாத தந்திரம் எது என்று தேடிக்கொண்டே இருக்கிறேன்.
சென்ற வருடம் புத்தகக் காட்சிக்கு நானும் எனது மகன் சிபி நந்தனும் சென்றிருந்தோம். இரண்டாவது படிக்கும் அவனுக்கு தமிழ் வாசிக்க நான் கற்றுக் கொடுத்த சமயம் அது.  புத்தகக் காட்சியில் என்னைப் பார்த்ததும் சிலர் கை கொடுத் தார்கள். ஒரு கல்லூரி மாணவி ஓடி வந்து உலக சினிமா புத்தகத்தில் கையெழுத்து வாங்கினார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சிபிக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. 'அடப்பாவி... நீ வி.ஐ.பி. ஆயிட்டியா... எப்டி?’ என்று கேட்டான். சிரித்துக்கொண்டே, நான் விகடன் ஸ்டாலைக் காட்டினேன்.
'வி...க...டா... ஆ...இன்... விக...டான்...’
'டான் இல்லப்பா... டன்...’
'அப்பா... அது ஏன் அந்த தாத்தாவுக்கு கொம்பு இருக்கு?’
விகடனின் வசீகரம் தலைமுறை கடந்தும் தொடர்கிறது. தொடரும்!''

Wednesday, 29 June 2011

ரைட் பிரதர்ஸ்[Wright brothers]

 மனித இனம் தோன்றியது முதலே கற்பனையிலும்,  கதைகளிலும் இப்படி ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என சிந்திக்கத் தூண்டிய  விஷயம் விண்ணில் பறப்பதாகும். வானில் பறவைகள் பறப்பதை மனிதன் என்று கண்டானோ... அன்றே பறக்கும் ஆசை தோன்றிவிட்டது.

பல நூற்றாண்டுக் கனவை நிறைவேற்ற அமெரிக்காவில் பிறந்தனர், 'ரைட் பிரதர்ஸ்’ என்று அறியப்படும் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட். சிறுவர்களாக இருந்தபோது, ஒரு முறை இவர்களின் அப்பா சீன பொம்மை ஒன்றை வாங்கி வந்தார். அதில் தலைப் பகுதியில் மூன்று விசிறிகள் இருக்கும். அதனுடன் இணைக்கப்பட்டு  இருந்த ரப்பர் பட்டையை இழுத்து விட்டால், அது உயரே பறக்கும். விசிறியின் வேகம் குறைந்த உடன் கீழே வரும். கொஞ்ச நாட்களில் அது பழுதாகிவிட்டது. உடனே இவர்களே புதிதாக ஒன்றை வடிவமைத்து  விளையாடினார்கள்.
ரைட் சகோதரர்கள் முறைப்படி உயர்கல்வி கற்கவில்லை. 1892-ல் சைக்கிள் விற்பனை நிலையத்தைத்  தொடங்கினர்.  1896-ல் மிகவும் பாதுகாப்பான சைக்கிள்களை உற்பத்தியும் செய்தனர். ஆனாலும்,  அவர்கள் சிந்தனை முழுவதும் பறக்கும் இயந்திரத்தை வடிவமைப் பதிலேயே இருந்தது.
அந்த நாட்களில்... பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் சிறிய கிளைடர் விமானங்களைப் போல உருவாக்கிப் பறந்து, அதில் பல்வேறு ஆராய்ச்சி களைச் செய்துவந்தனர். அந்த முயற்சிகளில் ஏற்பட்ட விபத்தில்... சிலர் இறந்தனர். அனைத்துக்கும் மேலாக ஜெர்மனியின் 'ஆட்டோ லிலியந்தால்’ என்பவர், தனது இரண்டு கைகளிலும் றெக்கை போன்ற அமைப்பைக் கட்டிக்  கொண்டு, அதில் சிறிய இயந்திரங்களைப் பொருத்தி, உயரமான இடங்களில் இருந்து குதித்து, பலமுறை வானில் பறந்தார். ஓவ்வொரு முறையும் இயந்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தினார். ஆனாலும், அவரது பயணங்கள் ஆபத்து நிறைந்ததாகவே இருந்தன. அப்படி ஒரு முறை பறந்தபோது, உயரத்தைச் சரியாகக் கணிக்காததால் நேர்ந்த விபத்தில் லிலியந்தால் இறந்தார்.
ரைட் சகோதரர்கள் இதற்கு எல்லாம் அசர வில்லை. பறவைகள் பறக்கும்போது அதன் உடல் அமைப்பு, வால் மற்றும் றெக்கைகள் எப்படி செயல்படுகின்றன என்றும், காற்றின் போக்கு... பறவைகள் தடங்கல் இன்றிப் பறக்க எப்படி உதவுகிறது என்றும் ஆராய்ந்தனர். 1900-ஆம் ஆண்டு, பெட்டி வடிவிலான ஒரு விமானத்தைச் செய்து முடித்தார்கள். 'கிட்டி ஹாக்’ என்ற கடற்கரைப் பகுதியில் இவர்களது முதல் வான் பயணம் நிகழ்ந்தது.
பயணத்துக்கு முன் ஏற்பட்ட  பெரும் மணல் புயலில், விமானம் பதினைந்து அடி ஆழத்தில் புதையுண்டுவிட்டது. அதைத் தோண்டி எடுத்துப் பறக்க விடுவதற்கான ஆயத்தத்தைச் செய்தனர். காற்றின் வாட்டத்திலேயே விமானம் பறக்க விடப்பட்டது. அதன் சுக்கான் முனையை இரும்புச் சங்கிலியில் பிணைத்திருந்தனர். தரையில் இருந்தபடியே விமானத்தை அவர்களால் சங்கிலியின் மூலம் கட்டுப்படுத்தி மேலே ஏற்றவும் கீழே இறக்கவும் முடிந்தது. அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
நீண்ட பெட்டி வடிவில் இருந்த அந்த விமானத்தின் மையத்தில், ரைட் சகோதரர்களில் ஒருவர் கம்பி களைக் கெட்டியாகப் பிடித்து படுத்துக்கொள்ள, மற்றவர் நண்பரின் உதவியுடன்  விமானத்தின் இரண்டு றெக்கைகளைப் பிடித்து இழுத்தபடி ஓடுவார்கள். றெக்கைகளின் இடையில் காற்று சென்று, விமானத்தை உயரே தூக்கிப் பறக்க  வைக்கும். இப்படி மேலே எழும்பிய விமானம், சற்று தூரம் பறந்த பின், மணலில் மெத்தென்று கீழே இறங்கும். இப்படி பல முறை பறந்தார்கள். காற்றின் போக்கு குறைந்ததும் ஊருக்குத் திரும்பினார்கள்.
அடுத்த ஆண்டு, இன்னும் சிறப்பான இயந்திரத்துடன் மீண்டும் 'கிட்டி ஹாக்’ வந்தார்கள். இந்த முறையும் அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், வானில் தொடர்ந்து அதிக நேரம் பறந்தவர்கள் என்ற சாதனையை எட்டினர். ஒவ்வொரு முறை பறக்கும்போதும் சோதனைகள்! இன்னும் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றே ஊருக்குத் திரும்பினார்கள்.
சைக்கிள் தொழிலில்  மீண்டும் ஆர்வத்து டன் ஈடுபட்டார்கள். வில்பர், இதுவரை தாங்கள் கண்டுபிடித்தவற்றைக் குறிப்புகளாக எழுதினார். அவற்றில் இருந்து 'பெர்னோலி’யின் விதியின்படி காற்றானது விமானத்தை எப்படி பறக்க வைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. விமானத்தில் மேலும் செய்ய வேண்டிய சில மாறுதல்களும் புரிந்தது.
இறுதியில், டிசம்பர்-14 1903-ல் மீண்டும் கிட்டி ஹாக் நோக்கிக் கிளம்பினார்கள். விமானம் பறக்கத் தயாரானது. யார் பறப்பது என்று பூவா தலையா போட்டதில் வில்பர் ஜெயித்தார். தண்ட வாளத்தின் மீது நிறுத்தி இருந்த விமானத்தை ஆர்வில் இழுத்துக் கொண்டு ஓடினார். விமானத்தின் இயந்திரங்கள் இயங்கத் தொடங்கின. மூன்று நொடிகளே பறந்த விமானம்... தரையில் மோதி விழுந்தது. எனினும் வெற்றியை நெருங்கிவிட்டதை உணர்ந்தனர்.
விமானத்தைச் சரி செய்து, டிசம்பர் 17-ல் மீண்டும் பறக்கச் செய்தார்கள். அவர்களே எதிர்பார்க்காத வகையில் எண்ணூறு அடிகளுக் கும் அதிகமான தூரம் விமானம் பறந்தது. ரைட் சகோதரர்கள் வானத்தை வெற்றிகொண்ட சம்பவம் சரித்திரத்தில் பதிவானது.  
எத்தனை முறை தோல்வி அடைந்தாலும், ஒவ்வொரு முறையும் அதில் இருந்து பாடம் கற்று, வான்வெளியை  வெற்றி கொண்ட சகோதரர் களின் விடாமுயற்சி

அம்பேத்கார்[B. R. Ambedkar]


மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று பிறந்தார் பீமாராவ். தாழ்த்தப்பட்ட இனமான மகர் இனத்துப் பெற்றோர் களுக்கு, இவர் பதினான்காவது குழந் தையாகப் பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலேய அதிகாரிகளிடம் வேலை பார்த்து வந்தார். அந்நாட்களில்... தாழ்த்தப்பட்ட இனத்தவர்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். பீமாராவின் தந்தை, தன் மகனை எப்படியாவது நன்றாகப் படிக்க வைக்கவேண்டும் என முடிவு செய்தார்.

அதற்காக ஆங்கிலேய அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி வாங்கி, தன் மகனை பள்ளிக்கு அனுப்பினார். பள்ளி ஆசிரியர், பீமாராவ் என்ற பெயருடன் அம்பேத்கர் என்ற பெயரையும் சேர்த்துவைத்தார். அது முதல் அவர் அம்பேத்கர் ஆனார்.

அந்தக் காலத்தில், பள்ளியில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் இருக்கைகள் உண்டு. தாழ்த்தப்பட்ட குலத்தவர்களுக்கு இருக்கைகள் கிடையாது. வீட்டிலிருந்தே ஒரு கோணியை எடுத்துச் சென்று, அதன்மீதுதான் உட்கார்ந்து படிக்க வேண்டும். ஆனால், கல்வி ஒன்றுதான் தங்களை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்கும் என்பதில் அம்பேத்கர் உறுதியாக நம்பினார். எனவே, பள்ளியில் மற்ற மாணவர்கள் இவரை என்னதான் இழிவுபடுத்தினாலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை, தீவிரமாகப் படித்தார்.

தாழ்த்தப்பட்ட மாணவர்களில்... அந்தப் பகுதியில் இவரே முதல் முதலில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார். அவரது வெற்றியை, அந்த இனத்தின் வெற்றியாக மக்கள் கொண்டாடினார்கள். அம்பேத்கர் மேல் படிப்புப் படிக்க கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும். அதற்கு நிறைய செலவாகும்...  என்ன வழி என்று யோசித்த அம்பேத்கருக்கு ஒரு தகவல் கிடைத்தது. அது, பரோடாவின் அரசர் சாயாஜிராவ் கெய்க்வாட் தாழ்த்தப்பட்ட மாணவரின் கல்விச் செலவுகளுக்கு பணஉதவி செய்வார் என்பதுதான். எத்தனை இடர்கள் வந்தாலும் படிப்பதை மட்டும் விட்டுவிடக்கூடாது என்று மன உறுதியுடன் இருந்த அம்பேத்கருக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சி அளித்தது.
பரோடா மன்னரைச் சந்தித்து, அவரிடம் பெற்ற உதவியின் மூலம்... புகழ்பெற்ற எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். உடன் படித்தவர்கள், அவருடன் சகஜமாகப்  பழகமாட்டார்கள். இருந்தாலும் அம்பேத்கர் எதையும் பொருட்படுத்தாமல், தனது பெரும்பாலான நேரத்தை நூலகத்துக்குச் சென்று படிப்பதற்குச் செலவு செய்தார்.

பரோடா மன்னரின் உதவி மற்றும் கோல்காபூர் அரசரின் உதவிகளைப் பெற்று அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் அம்பேத்கர் தனது மேல் படிப்புகளைத் தொடர்ந்தார். 'பார் அட் லா’ பட்டமும் பெற்று இந்தியா திரும்பினார். அந்தச் சமயத்தில், இந்தியாவில் சுதந்திரப் போர் வெகு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.  ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்கள் விடுதலை பெறுவது எத்தனை முக்கியமோ, அதேபோல இந்தியாவில் இருக்கும் சாதி வேறுபாடுகளைக் களைவதும் முக்கியம் என்ற கொள்கையுடன் செயல்பட்டார் அம்பேத்கர்.
இவருடைய போராட்டங்களால் காந்திஜியின் பெயரைப் போலவே, இவரது பெயரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பேசப்பட்டது. லண்டனில் 1930ல் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் காந்திஜியுடன் இவரும் கலந்துகொண்டார். நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, இந்தியா விடுதலை பெற்றது. நமக்கான சட்டங்களை நாமே வடிவமைத்துக் கொள்வது என்று நேருஜியின் தலைமையிலான அரசாங்கம் முடிவு செய்தது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க, சரியான நபர் அம்பேத்கர்தான் என முடிவுசெய்தனர். தன்னுடைய பொறுப்பை உணர்ந்து, அதற்கேற்ப நமது அரசியலமைப்புச் சட்டத்தை சிறப்பாக உருவாக்கித் தந்தார் அம்பேத்கர். அதேபோல பூனா ஒப்பந்தத்தின் மூலம் தேர்தலில் 'தனித் தொகுதி’ முறையைக் கொண்டுவந்தார். இதன் மூலம், தாழ்ந்த இனத்தவரின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என நம்பினார்.

வாழ்நாள் முழுவதும் தன் இன மேன்மைக்காகப் போராடியதும்... எந்த ஓர் இன்னலையும் பொருட்படுத்தாமல், மற்றவர்களின் உதவியைப் பெற்றாவது கல்வி கற்க வேண்டும். கல்விதான் ஒருவனை நல்ல நிலைக்குக் கொண்டு செல்லும் என்ற உறுதியுடன் போராடி கல்வி கற்றவர்.

லூயிஸ் பிரெய்ல்[ Louis Braille]

 அவருக்கு கண் பார்வை கிடையாது. இருந்தாலும், தனது கண்டு பிடிப்பால் பார்வைத் திறனற்ற பலரின் வாழ்க்கைக்கு வெளிச்சம் காட்டி இருக்கிறார். அவர்தான் லூயிஸ் பிரெய்ல். அவர் கண்டுபிடித்ததுதான் பிரெய்ல் எழுத்துமுறை.  
லூயிஸ் பிரெய்ல், மூன்று வயதில் அப்பாவின் தொழில் சார்ந்த உபகரணங் களை வைத்து விளை யாடிக்கொண்டிருந் தான். அப்போது, எதிர்பாராத விதமாக அவனது கண்ணில் கூர்மையான ஆணி குத்திவிட்டது. அதனால், அந்தக் கண்ணின் பார்வை பறிபோனது. உரிய  சிகிச்சை அளிக்கா ததால் கொஞ்ச நாட்களில் அவனது இரண்டாவது கண்ணின் பார்வை யும் போய் விட்டது.

கண் பார்வை முழுவதும் பறிபோனதால், பிரெய்லின் பெற்றோர் மிகவும் கவலை அடைந்தனர். இருந்தாலும் மனதைத் தேற்றிக்கொண்டு... பிரெய்லை பாரீஸில், பார்வையற்றோருக்கு என செயல்பட்டு வந்த சிறப்புப் பள்ளியான 'ராயல் இன்ஸ்டிடிட்யூட்’டில் சேர்த்தனர்.
அங்கு, கல்வி என்பது வாய் மற்றும் செவிவழிக் கல்வியாகவே இருந்தது. ஒருவர் படித்துக் காட்ட, அவற்றை மனப் பாடம் செய்து படிக்கவேண்டும். மேலும், பார்வையற்றோர் படிப்பதற்கு அச்ச டிக்கப்பட்ட புத்தகங்கள்  'புடைப்பு’ முறையில் அச்சடிக்கப் பட்டு இருந்தன. அந்தப் புத்தகங்களின் பக்கங்கள் சற்று மேடாக அச்சாகி இருக்கும். இதனால், புத்தகங்கள் மிகவும் தடிமனாகவும். கனமாகவும், எளிதில் எடுத்துச் செல்ல இயலாத வகையிலும் இருந்தன. மேலும், இந்தவகை எழுத்து களைப் பார்வை அற்றவர்கள் எளிதில் எழுதவும் முடியாது.  
இந்தப் புத்தகங் களைப் பயன்படுத்தித் தனது கல்வியைத் தொடர்ந்த பிரெய்ல், பார்வையற்றோர் சிக்கல் இன்றி எளிதில் படிக்கவும், புரிந்து கொள்ளவும், எழுதவும் எளிதான ஒரு முறையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று, நாளும் பொழுதும் உழைக்கத் தொடங் கினான்.
அந்தச் சமயத்தில், பிரெஞ்சு ராணுவத்தினர் தங்களுக்குள் ரகசியத் தகவல்களை அனுப்ப 'சார்லஸ் பார்பியர்’ என்ற ராணுவ அதிகாரி உருவாக்கிய எழுத்து முறையைப் பயன்படுத்திவந்தார்கள். இந்த சங்கேத எழுத்து முறையை ராணுவ வீரர்கள் இருளில்கூட கைகளால் தடவிப் பார்த்து எளிதாகப் புரிந்து கொண்டார்கள். இந்த எழுத்து பற்றி அறிந்த லூயிஸ் பிரெய்ல், இந்த எழுத்து முறையின் அடிப்படையை மட்டும் எடுத்துக்கொண்டு அதில் இருந்து பார்வை அற்றோர் எளிதில் புரிந்துகொள்ளும் புதியதொரு எழுத்துரு வகையை உருவாக்க முடியும் என முடிவு செய்தார்.  
ஆறு புள்ளிகளை சற்று மேடாக அமைத்து, பிரெய்ல் தனது கடின உழைப்பால் 1825-ஆம் ஆண்டு பார்வையற்ற வர்களுக்கான புதிய எழுத்து முறையைக் கண்டுபிடித்தார். அதை, தான் படித்த  ராயல் இன்ஸ்டிடிட்யூட் நிறுவனத்துக்கே  அளித்தார். அப்போது, அவருக்கு வயது பதினாறுதான். ஆறு புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட குறியீட்டின் மூலம் பிரெஞ்சு, ஆங்கில எழுத்துகளை எளிதில் எழுதப் படிக்க முடிந்தது. இருந்தாலும்... பிரெய்லின் இந்த சிறப்பான கண்டுபிடிப்பு, நூறு ஆண்டுகளுக்குப் பிறகே உலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றது.  
பிரெய்லின் இந்த எழுத்துமுறை, பார்வை அற்றவர்களுக்கு மிகப் பெரும் வரமாக அமைந்தது. எனவேதான், அவரது பெயராலேயே அம்மொழி அழைக்கப்பட்டு வருகிறது.
சிறு வயதிலேயே தனது பார்வையை இழந்துவிட்டபோதிலும், விடாமுயற் சியுடன் கல்வி கற்றதையும்,  தற்செயலாகத் தெரிந்துகொண்ட  ராணுவ ரகசிய எழுத்து முறையைப் பின்பற்றி, பார்வையற்றோர் எளிதில் படிக்க வசதியான, முற்றிலும் எளிதான எழுத்து முறையை உருவாக்கிய முயற்சி போற்றத்தக்கதாகும்.

சர்.சிவி ராமன்[Sir. C. V. Raman]

அந்தக் கல்லூரியின் வகுப்பறையில் நுழைந்த பேராசிரியர், மாணவர்களுக்கு மத்தியில் ஒரு சிறிய பையனும் அமர்ந்து  இருப்பதைக் கண்டார். ஏதோ தெரியாமல் அமர்ந்திருக்கிறான் என எண்ணிய அவர், ''நீ என்ன இந்தக் கல்லூரி மாணவனா?'' என்று கேட்டார். அதற்கு அவன் பணிவாக, ''ஆம் ஐயா!'' என்று சொன்னான். ஆச்சர்யம் அடைந்த பேராசிரியர், ''உன் பெயர் என்ன?'' என்று கேட்டார். அதற்கு அவன் ''ராமன்'' என்றான்.ஆமாம்! அவர்தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்.

இவரது பெற்றோர் கணித மேதையும் ஆசிரியருமான சந்திரசேகரன் மற்றும் பார்வதி அம்மையார். சந்திரசேகர வெங்கட்ராமன் என்பதன் சுருக்கமே சி.வி.ராமன். இவர் பி.ஏ. இயற்பியலில் தங்கப் பதக்கம் பெற்று தேர்வானார். கொல்கத்தாவில் இந்திய நிதித் துறையில் உதவி கணக்குப் பொது மேலாளராக 1907- ல் பதவி ஏற்றார். அப்போதைய ரங்கூன் நகருக்கு பதவி மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் கல்கத்தாவுக்குத் திரும்பினார்.
அந்தச் சமயத்தில் டிராம் வண்டியில் பயணம் செய்தபோது ஒரு கட்டடத்தில் 'விஞ்ஞான வளர்ச்சிக்கான இந்தியக் கழகம்’ என்ற பலகை தொங்குவதைக் கண்டார். டிராமில் இருந்து குதித்தார். கட்டடத்தினுள் நுழைந்தார். அங்கே நிறைய அறிவியல் சாதனங்கள், பெரிய ஆராய்ச்சி அறைகள் இருப்பதைக் கண்டார். உடனே அங்கேயே தங்கி, அறிவியல் ஆராய்ச்சிகள் செய்வதற்கு அனுமதியும் பெற்றார். தனது அரசுப் பணியை விட்டு விட்டு, அறிவியல் ஆராய்ச் சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தன் இருப்பிடத்தையும் அந்த ஆராய்ச்சிக்கூடத்துக்கே மாற்றிக் கொண்டார்.
1921-ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற உலகப் பல்கலைக் கழகங்களின் சபையில், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் பங்கேற்றார். அப்போது அவர் மேற்கொண்ட கடல் பயணத்தின்போது, கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனதில், கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது? வானத்தின் நிறமா? வானம் மேகமூட்டத்துடன் கறுப்பாக இருக்கும்போதும், தொடர்ந்து அலைகள் வரும்போதும் கடல் எப்படி நீலநிறமாக உள்ளது, என்ற கேள்விகள் உருவானது. திடீரென்று சூரிய ஒளியை நீர்த் துளிகள் பிரதிபலிப்பதால்தான் கடல் நீலநிறமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.

தனது ஒளிச் சிதறல் பற்றிய அறிக்கையைத் தயாரித்து, ராயல் சொசைட்டி ஆப் லண்டன் கழகத்துக்கு அனுப்பினார். முப்பட்டகக் கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள் செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப் பிரிவதை 1928-ல் கண்டுபிடித்தார். இதுவே, ராமன் விளைவு. இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அந்த முறை நோபல் பரிசு தனக்குத்தான் கிடைக்கும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் ராமன். அதனால், அவர் நவம்பர் மாதம் நடக்கப்போகும் விழாவுக்கு ஜூன் மாதத்திலேயே டிக்கெட் பதிவுசெய்து விட்டார். அவரது கண்டுபிடிப்பின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை. நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். அதுவும் தவிர, வெள்ளையர் அல்லாத ஒருவருக்கு அப்போதுதான் முதல் முதலாக நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அவருக்கு நமது அரசு பாரத ரத்னா வழங்கி கௌரவித்தது. அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த  பிப்ரவரி 28-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில், தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நமது அரசு கொண்டாடுகிறது.

Aung San Suu Kyi ஆங் சான் சூ கி.!!!



 அந்த சிறுமியின் அப்பா பர்மிய விடுதலைப் போராட்ட வீரர். அவர், தன் நாட்டில் மக்கள் புரட்சியை ஏற்படுத்தி, நாட்டின் விடுதலைக்கு வழிவகுத்தார். சில சதிகாரர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். அவரது போராட்டத்தை அவருடைய மனைவி தொடர்ந்தார். தன் கணவரின் போராட்டப் பாதையைத் தனதாக்கி மக்களுக்கு வழிகாட்டினார். அவர் அங்கிருந்தால் தங்கள் பதவிக்கு ஆபத்து வரும் என்று எண்ணி, ஆட்சியாளர்கள்  இந்திய நாட்டுக்கான பர்மியத் தூதராக அவரை அனுப்பிவிட்டனர். அவருடைய குட்டிப் பெண்ணும் அவருடன் டெல்லிக்கு வந்தார்.
டெல்லியில் பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்திய அந்த குட்டிப் பெண், நூலகத்தில் எதிர்பாராமல் கிடைத்த காந்தியடிகளின் நூல்களை விரும்பிப் படித்தாள். அவருடைய எழுத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டாள். அது மட்டுமல்லாமல் தான் இனி காந்திய நெறிகளைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். அப்போது, தான் பல வருடங்கள் மக்களுக்காக போராட வேண்டி இருக்கும். அதனால் சிறையில் வாட வேண்டி இருக்கும். அந்த சந்தர்ப்பத்திலும் காந்தியத்தை  தான் உயர்த்திப் பிடிப்போம்... அந்த காந்திய வழிப் போராட்டத்தாலேயே விடுதலை ஆவோம்... என்றெல்லாம் அவள் நினைத்திருக்கவே மாட்டாள்!
ஆம் சுட்டீஸ்! ஒன்றல்ல, ரெண்டல்ல... இருபது ஆண்டுகளுக்கும் மேல் மியன்மாரில் (பர்மா என்பது பழைய பெயர்) வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூ கி. சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவரை டா சூ கி என்றழைக்கிறார்கள். டா என்றால், பர்மிய மொழியில் மிக்க மரியாதைக்குரியவர் என்று பொருள். நிஜமாகவே இந்த பட்டத்துக்கு முழுவதும் தகுதியானவர்தான் நமது சூ கி.

சூ கி, தன் அம்மாவுடன் டெல்லியில் படிக்க வந்த நாள் முதல் காந்திய சிந்தனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று, ஐ.நா.சபையின் உதவிச் செயலர் பணியில் அமர்ந்தார். அமைதியுடன் தன் கணவர் ஏரிஸ் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

தன் தந்தையும் தாயும் மக்களுக்காகப் போராடியதையும், இன்னும் அங்கு மக்கள் ராணுவ ஆட்சியால் துன்பப்படுவதையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் தாயகத்துக்குத் திரும்பினார்.

அந்த சமயத்தில் மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, போராட்டங் களை நடத்தி வந்தனர். அதை ஒடுக்க ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கையால், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இறந்தனர். அவர்களை நினைவு கூறும் விதமாக 1988 ஜூலை 19 அன்று பெரும் போராட்டத்துக்கு  சூ கி அறைகூவல் விடுத்திருந்தார். ஆட்சியாளர்களோ... போராட்டம் நடக்க விடாமல் தடுத்ததோடு, அதற்கடுத்த நாளே அவரை வீட்டுக் காவலில் வைத்தனர். இப்படித் தொடங்கிய அவரது வீட்டுச் சிறைவாசம், விட்டு விட்டுத் தொடர்ந்தது இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது.
சிறையில் அடைக்கப்பட்ட, தன்னுடன் போராடிய இயக்கத்தவர்கள் அனைவரையும் சமமாக நடத்தவேண்டும் என வீட்டுச் சிறையிலேயே உண்ணாவிரதமும் இருந்தார்.

ஆட்சியாளர்களின் மீது வெளிநாடுகளும் ஐநா சபையும் கொடுத்த நெருக்குதலால், சூ கி யை விடுதலை செய்தது. அதன் பின்னர் இவரை நாடு கடத்த அரசாங்கம் முடிவு செய்தது. தேர்தல் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக ஆட்சியை அமைப்பது என்றால், தன் போராட்டங்களைக் கைவிடத் தயார் என்று சூ கி அறிவித்தார். வேறு வழி இல்லாத ராணுவ ஆட்சியாளர்களும் தேர்தலை நடத்தினர். அத்தேர்தலில் சூ கி கட்சியினர் மிகப் பெரும்பான் மையான இடங்களைக் கைப்பற்றினர்.

ஆனால், அவர்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்புத் தராமல், மீண்டும் ராணுவ ஆட்சியே தொடர்ந்தது. உலக நாடுகள் மற்றும் ஐ.நா.சபையின் வேண்டுகோளைக் கூட புறக்கணித்தனர் ஆட்சியாளர்கள். 1991-ஆம் ஆண்டு நோபல் பரிசுக் கமிட்டி அமைதிக்கான நோபல் பரிசை சூ கி-க்கு வழங்கியது. சூ கியின் சார்பில் அவருடைய குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள்.

எந்த சமயத்திலும் எதற்காகவும் தான் நேசித்த மக்களையும் நாட்டையும் விட்டு வெளிவர சூ கி விரும்பவில்லை. காந்திய வழியிலான போராட்டத் தையும் கைவிட வில்லை.
சூ கி-யின் போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக... இந்திய அரசும் பெருமை மிகுந்த ஜவஹர்லால் நேரு விருதினை 1992-ல்  அளித்தது.அவரைராணுவ ஆட்சியாளர்கள் வீட்டுக் காவலில் வைப்பதும் வெளியே விடுவதுமாக... பல முறை அவரது மன உறுதியைக் குலைக்க முயற்சித்தனர்.  அவரைப் பார்க்க எந்த பார்வையாளருக்கும் அனுமதி கிடையாது. தொலைபேசியில் பேச முடியாது. செய்திகளும் தெரிந்துகொள்ள முடியாது. ஒரு சமயம் சுனாமி பேரலையால் அவர் இருந்த வீட்டின் கூரை உடைந்து நொறுங்கிவிட்டது, மின்சாரமும் இல்லை. இப்படிப்பட்ட கடுமையான வீட்டுக் காவலில் இருந்தபடி அகிம்சை முறையில் போராடி வந்த அவரை, தற்போதுதான் மியன்மார் அரசு விடுதலை செய்திருக்கிறது. சூ கி, தனது மக்களையும் ஆதரவாளர் களையும் சந்தித்து, மக்களுக் கான தனது போராட்டத்தை முன்னெடுக்க உள்ளார். அவர், சிறுவயதில் படித்த காந்திய சிந்தனைகளே அவரை உலகம் போற்றும் போராளி யாக இன்று நம் முன்நிறுத்தி இருக்கிறது. ஆகவே, நாம் புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது அவற்றின் மூலம் நமக்குக் கிடைக்கும் நல் எண்ணங்களைச் செயல் படுத்து வதிலும் உறுதியுடன் இருக்க வேண்டும்.

Friday, 24 June 2011

கார் பார்க்கிங்... காசு பார்க்கும் பில்டர்கள்!


இன்றைய நிலையில் பலரும் சொந்தமாக வீடு வைத்திருக்கிறார்களோ, இல்லையோ ஒன்றுக்கு இரண்டாக கார் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் வீடு வாங்கும்போது கார் பார்க்கிங் வசதி என்பது முக்கியமான விஷயமாக மாறிவிட்டது. இதைப் பயன்படுத்தி சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களை சேர்ந்த சில பில்டர்கள் மற்றும் புரமோட்டர்கள் பணம் பார்க்க ஆரம்பித்து விட்டதாக புகார்கள் எழ ஆரம்பித்திருக்கிறது.

என்ன பிரச்னை என்பதைத் தெளிவுபடுத்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம். 

சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் இருக்கும் சுரேஷ்,  சொந்தமாக  ஒரு  ஃபிளாட் வாங்க அலைந்தார். அவருக்கு ஒரு கார், அவர் அப்பாவுக்கு ஒரு கார் என மொத்தம் இரண்டு கார்கள். இவற்றை நிறுத்த வசதியான அபார்ட்மென்ட் வேண்டும். 

அண்ணா நகரில் அப்படி ஒரு புது அபார்ட்மென்ட் கிடைத்தது. பில்டர், முதல் கார் பார்க்கிங்-க்கு 2 லட்ச ரூபாய் கேட்டார். இரண்டாவது கார் பார்க்கிங்க்கு 3 லட்சம் ரொக்கமா தரவேண்டும் என்றார். 

இதைகேட்டு அதிர்ந்து போனார் சுரேஷ். காரணம், கார் பார்க் கிங்குக்கு தனியாக பணம் வசூலிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றமே சொல்லி இருக்கிறது. இந்த நிலையில் பணம் கேட்பது சரியா?

''கார் பார்க்கிங்-க்கு ஏற்பட்டிருக்கும் டிமாண்ட் இதற்கு காரணம்'' என்கிறார் 'பிரீமியர் ஹவுஸிங் அண்ட் இண்டஸ்ட்ரியல் என்டர் பிரைசஸ்’ நிறுவனத்தின் இயக்குநர் நாராயணமூர்த்தி. கார் பார்க்கிங் விஷயத்தில் எதை கவனிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார்.



''திறந்தவெளி கார் பார்க்கிங் என்றால் நயா பைசா கொடுக்கத் தேவையில்லை. அது பொது பயன்பாட்டில் இருக்கும் இடமாக இருப்பதால் பணம் தரவேண்டாம். அதேநேரத்தில், சதுர அடி விலையைக் கணக்கிட எடுத்துக் கொள்ளும் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் இந்த கார் பார்க்கிங் பகுதி சேர்க்கப்படவில்லை என்றால், வீடு வாங்குபவர்கள் அதற்கு தனியாகப் பணம் கொடுத்து வாங்குவதில் தப்பில்லை. காரணம், மூடிய கார் பார்க்கிங்-ஐ கட்ட தனியாக ஒரு தளம் கட்ட வேண்டியிருக்கிறது. இப்படி தனியே கட்டப்படும் கார் பார்க்கிங்க்கு காசு வாங்கக்கூடாது என்றால் பில்டர்கள், இந்த கார் பார்க்கிங் கிற்கான விலையையும் சதுர அடியில் சேர்த்து விடுகிறார்கள்.
சூப்பர் பில்டப் ஏரியாவை எப்படி கணக்கிடுவது என்பதில் பில்டர்கள் ஆளுக்கொரு விதியை வைத்திருக்கிறார்கள். ஒரு தரப்பினர், சூப்பர் பில்டப் ஏரியாவில் கார் பார்க்கிங்கை சேர்த்து கணக்கிடுகிறார்கள். சிலர் அதை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இதை மாற்றி எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு முறையை கொண்டு வரவேண்டும். அது பொது மக்களுக்கு எளிதாகப் புரியும்படி இருக்க வேண்டும். அப்போதுதான் கார் பார்க்கிங் கிற்கு தனியாகப் பணம் கொடுக்கக்கூடாது என்பது புரியும். இல்லை என்றால் ச.அடி. விலையோடு ஒரு முறையும், தனியாக ஒரு முறையும் கார் பார்க்கிங் ஏரியாவுக்கு காசு கொடுக்க வேண்டிவரும்'' என்றவர் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயத்தை சுட்டிக் காட்டினார்.

''சுரேஷ் விவகாரத்தில் நடந்ததைப்போல கார் பார்க்கிங்-க்கான விலையை தனியே ரொக்கப் பணமாக பில்டர் அல்லது புரமோட்டர்கள் கேட்கிறார்கள் என்றால் அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று அர்த்தம். ஒன்று, அந்த வருமானத்தை அவர்கள் கணக்கில் காட்டப் போவ தில்லை, அல்லது கார் பார்க்கிங்-க்கான கட்டடப் பகுதியை ஏற்கெனவே பொது பயன்பாட்டுப் பகுதியில் சேர்த்து வீட்டின் விலையில் ஏற்றிவிட்டார்கள் என்று அர்த்தம்'' என்றவர் இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்பதையும் விளக்கினார். 

''வீட்டு வசதித் துறை, சி.எம்.டி.ஏ. சூப்பர் பில்டப் ஏரியாவில் எது எல்லாம் அடக்கம் என்பதை தெளிவாக்கும் விதமாக விதி முறைகளைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.

கார் பார்க்கிங்குக்குத் தனியாக பணம் வாங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே சொல்லி இருக்கும் நிலையில் இனியாவது அரசு இந்தப் பிரச்னையைக் கவனிக்குமா?

- சி.சரவணன்,நாணயம் விகடன்